

"சுதன்..."
"என்னப்பா, ஆபீஸ் கிளம்பரச்சயே கூப்பிடறீங்க"
"மணி என்ன?"
"ஏன்? ஒன்பதரை. அதுக்கென்னப்பா?"
"ஏன்டா ஒரு நாளைக்காவது நீ நேரத்துக்கு ஆபீஸ் போயிருக்கியா? அது என்ன ஆபீசா இல்ல சத்திரமா?"
"உங்களுக்கேன் அந்த கவலை? அதை ஆபீஸ்ல உள்ளவங்க பார்த்துப்பாங்க. நீங்க வயசான காலத்துல ராமா கிருஷ்ணானு சொல்லி புண்ணியத்தை சேர்த்துக்க பாருங்க."
அவன் கோபத்துடன் கூறிவிட்டு அலுவலகம் சென்றான்.
உள்ளே நுழைந்து சீட்டில் உட்கார்ந்து தன் கம்யூட்டரை ஆன் செய்தான். சிறிது நாழிதான் ஆகியிருக்கும். உடனே ஆபீஸ்பாய் பீகாரி வந்தான்.
"சாப், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கூப்பிடறாரு."
"நாசமாப்போச்சு. வந்ததும் சித்த நாழி நெட் ஓபன் செஞ்சு நாட்டு நடப்பு என்னனு தெரிஞ்சிக்க பேப்பர் படிக்கலாம்னா முடியறதா?" அவன் அலுத்துக்கொண்டே மேனேஜர் சேம்பரில் நுழைந்தான்.
"சுதன் இன்னிக்கு ஆபீஸ் எத்தினி மணிக்கு வந்தே?"
"இப்பதான் சார் வந்தேன்."
"ஆபீஸ் ஒன்பது மணிக்குன்னு தெரியுமில்லியா?"
"சார்… வந்து என்…அப்பா…."
"நிறுத்து. இந்த சால்ஜாப்பு எல்லாம் இனி எடுபடாது. சரி நான் வங்கிக்கு கொடுக்கனும்னு ஒரு ஸ்டேட்மெண்ட் கேட்டிருந்தேனே. எடுத்துட்டியா?"
"சார் நாளைக்கு நிச்சயமா கொடுத்துடறேன் சார்."
"இப்பவே வேணும். இன்னிக்கே நான் வங்கிக்கு கொடுத்தாகனும்."
"ஓ.கே சார்."
"ஏன் அதை எடுத்து கொடுக்க இத்தனை தாமதம்?"
"சார்…வந்து..."
"போதும்.. நிறுத்து.. இனி உன் சால்ஜாப்பு எல்லாம் எடுபடாது."
என்னடா இந்த அப்பாவி மேனேஜர் இப்படி பேசறாரேன்னு யோசித்தபடி இருந்தான் சுதன்.
"சுதன் ஒரு விஷயம்..."
மேனேஜர்தான் பேசினார். "நான் வேலைக்கு வந்த அடுத்த மாசம்தான் நீயும் வேலையில் சேர்ந்தே. நான்தான் இன்டர்வியூ செய்தேன். அப்ப இன்டர்வியூவில் நீ என்ன சொன்ன.. நினைவில் இருக்கா?"
"அ…அது…"
"வெட்கம் வேண்டாம். இப்ப நீ எட்டு வருடம் சர்வீஸ் போட்ட பெரிய அனுபவஸ்தன். பழசை நினைத்து பார்த்தால் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கும். சுதன் நீ சொன்னது இதுதான். 'எனக்கு வயசான அப்பா. கண் தெரியாத அம்மா. ஏதோ படித்த நான். மற்றும் ஒரு சகோதரி. எனக்கு கிடைக்கும் இந்த வேலையில் தான் குடும்பம் ஓட்டியாகனும்' என்று நீ சொன்னது எனக்கு ஞாபகம் இருக்குப்பா. பொறுப்பு வேணும். வேலை இருக்கு. சம்பளம் கை நிறைய கிடைக்குதுன்னும் யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்கன்னும் இனியும் இருக்காதே. புரியுதா?"
"ம்... சரி சார்..." ஓ. இந்த ஆடு இன்னிக்கு வெறிநாயா அல்லவா குரைக்குதுன்னு அவன் மனதில் திட்டியபடி அமர்ந்திருந்தான்.
"சுதன் ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ..."
"சொல்லுங்க சார்."
"கடந்த ஒரு மாசமா நிர்வாகத்தை கவனிக்கிறது நம்ம எம்.டி இல்லை. மாறாக அவர் மகன் இன்பன் தான் கவனிக்கிறாரு. அவர் வெளிநாட்டுல, சிறப்பாக நிர்வாகம் செய்வதை பற்றிய படிப்பை முடிச்சிட்டு வந்திருக்காரு. எம்.டி இப்ப அவர் கிட்டதான் முழு பொறுப்பையும் ஒப்படைச்சிட்டாரு."
"ஓ.கே சார்."
"நாளையில் இருந்து ஒன்பது மணி ஆபீஸ் என்றால் எட்டு ஐம்பதுக்கு சீட்டுல இருக்கனும். எந்த சந்தேகம் இருந்தாலும் அடிக்கடி பக்கத்து சீட், எதிர்த்த சீட்டுன்னு போய் பேசிட்டு இருக்கக்கூடாது. மாறா மெயில் மூலமாக உன் சந்தேகத்தை கேட்டு கிளியர் செய்துக்கனும். கொடுத்த வேலையை அன்றைக்கு அன்றே முடிச்சிடனும். காலை, மாலை டேபிளுக்கு டீ யோ, காப்பியோ வந்திடுது. அதுக்கும் மேலே உனக்கு வேணும்னா அலுவலக கேண்டீன்ல குடிக்காதே. மாறா கம்பெனி வெளியில் இருக்கும் ஒரு டீக்கடையில் பார்சல் வாங்கி குடிச்சிக்கோ. எந்த சமயத்திலும் அலுவலக நேரத்தில் உன் சீட்டை விட்டு எழக்கூடாது..." என்றார் மேனேஜர்.
"என்ன ஆச்சு இந்த மேனேஜருக்கு? எம்.டி சன் கிட்ட நல்ல பெயர் வாங்கி அதிக சம்பளம் வாங்க இதெல்லாம் செய்றாரு போல..." என்று அவன் அலட்சியத்துடன் அமர்ந்து அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.
"சரி, நீ போய் உடனே நான் வங்கிக்கு கொடுக்க இருக்கும் ஸ்டேட்மெண்ட்டை போட்டு எடுத்து வா..."
"சார். அது கொஞ்சம், நேரம் எடுக்குமே..."
"ஒரு விஷயத்தை சொல்லிடறேன். கம்பெனியில நடக்கற அத்தனை நிகழ்வுகளையும் எம்.டி சன், தன் சி.சி.டி.வி கேமரா மூலம் பார்த்துக்கொண்டு தான் இருக்காரு. ஏன் இப்ப நானும் நீயும் பேசுவதையும் அவர் பார்த்துக்கொண்டுதான் இருப்பாரு."
"சார் இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க?" அவனும் சற்று கோபமாக கேட்டான்.
"உனக்கு வருத்தமான விஷயம்தான்."
"என்ன சார்..?" அவன் அச்சத்துடன் கேட்டான்.
"எம்.டி சன் நிர்வாகத்திறமை இல்லாதவங்களை எல்லாம் வேலையில் இருந்து தூக்க முடிவு செய்துட்டாருப்பா."
"சார்…!" அவன் நடுங்கிப்போய்விட்டான்.
"ஆமாம்பா எனக்கு இன்றுதான் கடைசிநாள். நாளையில் இருந்து உனக்கு புது அக்கவுண்ட்ஸ் மேனேஜர் வர்றார். பெயர் டைகர் நரசிம்மன்."
"சார் …என்ன சார் சொல்றீங்க?" அவன் கண்கள் கலங்கின.
"ஆமாம்பா, மொதல்ல நிர்வாகத்தின் திறமையில்லாத பெரிய பதவியில் உள்ளவங்களை எடுக்கிறாரு. பிறகுதான் கீழ்மட்டத்துக்கு வருவாரு. அதற்குத்தான் நான் இத்தனை வார்னிங் கொடுத்து அறிவுரையும் செய்தேன். நீ ஸ்டேட்மெண்ட் கொடுத்தா இன்று என்னோடு போயிடும். நாளை என்றால் நீ டைகர் நரசிம்மனை டீல் செய்தாக வேண்டும். அவர் நிர்வாகத்தில் ஒரு புலி. எனக்கு நேர் எதிர் மாதிரி. இவ்வளவுதான் உனக்கு சொல்ல முடியும்."
அவன் ஓடினான். தன்னை வேலைக்கு எடுத்தவர்தான் இந்த அக்கவுண்ட்ஸ் மேனேஜர். அவ்வளவு தங்கமானவர். நாம இஷ்டத்துக்கு வேலை செய்தோம். அவரும் சுதந்திரமா விட்டாரு. இப்ப நாமே அவர் வேலைக்கு உலை வைத்து விட்டோமே என்று அழுதபடி உடனே ஸ்டேட்மெண்ட்டை ரெடி செய்து கொடுத்தான்.
"சார்…" அவன் இழுத்தான்.
"என்ன சுதன்?"
"பார்ட்டி..?"
"அது ரிடையர்ட் ஆகியோ இல்லை, வகிக்கின்ற பதவியை விட பெரிய பதவிக்கு போகிறவர்களுக்குத்தான் பார்ட்டி எல்லாம். இப்படி என்னை மாதிரி கிட்டத்தட்ட டிஸ்மிஸ் மாதிரி ஆகி போறவங்களுக்கு பார்ட்டி வைக்கிற வழக்கம் இல்லேப்பா."
அவன் அழுதான்.
"ஆனால் நீ திருந்தினால் அதுவே எனக்கு பார்ட்டி மாதிரிதான்" என்று அவர் சொன்ன போது, அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.