

சோலையூர் என்ற அந்தச் சிறிய கிராமம் பசுமையான வயல்வெளிகளாலும், தோப்புகளாலும் சூழப்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் உணவுக்குப் பஞ்சமின்றி, தங்களுக்கென ஓட்டு வீடுகளில் குடும்பத்துடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர்.
அந்த மக்களின் வாழ்க்கைக்குக் காரணம் ஒரே ஒருவர் என்ற நம்பிக்கை கிராமம் முழுவதும் இருந்தது. அவர் அருந்தவநாதன். இருபத்தோராவது வயதில் சோலையூர் பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்ற அருந்தவநாதன், அதன் பின்னர் தொடர்ந்து பத்து முறை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அவரே அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வந்தார்.
“நம்ம ஊருக்கு அருந்தவநாதன் அய்யா இல்லையென்றால் நாமெல்லாம் என்ன ஆவோம்?” என்று மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அவர்மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தனர்.
அருந்தவநாதனிடம் ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக மக்கள் நம்பினர். அதில் பத்து ஏக்கர் நிலத்தை ஏழை, எளிய மக்களின் குடியிருப்புக்காக வழங்கியதாகவும், அங்கு குடிசைகள் அமைத்துக் கொடுத்ததாகவும், பின்னர் ஓட்டு வீடுகளாகக் கட்டிக் கொடுத்ததாகவும் அவர் கூறி வந்தார்.
“இந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என் நிலத்தை விட்டுக் கொடுத்தேன்,” என்பார்.