சிறுகதை: விற்பனைக்கு!

Tamil short story | Old people
Tamil short story | Old peoplecredits AI Image
Updated on
Kalki Strip
Kalki

“போன வாரம் எங்க தெருவுல எதிர்க்கட்சிக்காரங்க ஒவ்வொரு வீட்டுக்கும் எவர்சில்வர் அண்டாவும், பத்து கிலோ சாப்பாட்டு அரிசியும் கொடுத்தாங்க” பூங்காவில் நடைப்பயிற்சி செய்தவாறே சொன்னார் வைத்தியநாதன்.

“எங்க தெரு பரவாயில்லை, முன்னேறியிருக்கு!” சிரித்தார் ரகுமான். “ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான்கள் தொகுப்பு. உப்பு, புளில ஆரம்பிச்சு கோதுமை ரவைப் பாக்கெட்டு வரை!”

“இதை விடுங்க... புதுசா ஆரம்பிச்ச கட்சி, இவங்க ரெண்டு பேரையும் கிண்டல் பண்றவங்க, ‘நாங்க மட்டும் என்ன சாதாரணமா?’ன்னு பேக், அயர்ன் பாக்ஸ்... இன்னும் என்னென்னவோ தர்றாங்க!” வடிவேல் வியந்து சொன்னார்.

“அவங்களாவது ஆண்ட கட்சிக, சம்பாதிச்சிருப்பாங்க. இவங்க எப்படி ஆரம்பத்திலேயே இத்தனை செலவு பண்றாங்க?” புரியாமல் கேட்டார் வைத்தியநாதன்.

”செலவா? இதெல்லாம் முதலீடுப்பா! தூண்டில்ல புழுவைப் போட்டு மீன் பிடிக்கிறோமே, அது மாதிரி!”

“ஆனா ரொம்ப வெட்கமா இருக்கு... நம்மளை இத்தனை மலிவா நினைச்சுட்டாங்க பாரு. நம்ம காலத்துல அரசியல் எப்படி இருந்தது? நல்லவங்களைத் தேர்ந்தெடுத்து ஓட்டுப் போட்டோம். இப்பல்லாம் அந்த வாய்ப்பே கிடைக்காது போல. இருக்கிறவங்கள்ல சுமாரான கெட்டவனுக்குத் தான் ஓட்டுப் போட்டாகணும்! நாடு எப்படி ஆகிடுச்சு...” விரக்தியாகச் சொன்னார் வைத்தியநாதன்.

“மக்கள் இலவசத்துக்கு மயங்கி தங்களை விக்காம இருந்தாப் போதும்; ஜனநாயகம் ஜெயிச்சுடும்,” என்றார் ரகுமான்.

“அதுசரி, ‘வாங்காதீங்க’ன்னு மக்கள்கிட்ட சொல்லிப் பாருங்க. நீங்க தான் விரோதியாவீங்க!” சிரித்தார் வடிவேல்.

சிமெண்ட் பெஞ்சியில் சாய்ந்து உட்கார்ந்தார்கள்.

“‘கொடுக்கறவங்க கொடுக்கறாங்க. நீங்க ஏன் தப்புன்னு சொல்றீங்க, தடுக்கறீங்க?’ன்னு பாய்வாங்க... எல்லோரும் ஒண்ணு சேர்ந்து.”

“ப்ச், என்ன இருந்தாலும் இது தப்பு. பொருளையும், காசையும் வாங்கிட்டு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வெச்சுட்டு, நாளைக்கு அவன் பதவியில உட்கார்ந்ததும் லஞ்சமா வாங்கிக் குவிப்பான். எந்த முகத்தை வெச்சுட்டு கேள்வி கேப்பீங்க? ‘உன் தகுதிக்கு நீ வாங்கினே, என் தகுதிக்கு நான் வாங்கறேன்’னு அவன் திமிரா பதில் சொல்லுவான்... எதிர்த்துப் பேச முடியுமா?”

“மக்கள் திருந்தணும், வேற என்ன சொல்றது.” என்றார் ரகுமான்.

“இதுல என்னங்க தப்பு?” பின்புறமிருந்து குரல் கேட்டது.

திரும்பினார்கள். பூங்காவை கூட்டி சுத்தம் செய்யும் சாமிக்கண்ணு தெரிந்தார். “சார், நம்ம பணம் தானே அதெல்லாம்? வாங்கிக்கறதுல என்ன தப்பு?” மீண்டும் தொடர்ந்தார் அவர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; வாதம்!
Tamil short story | Old people

“இல்லை சாமிக்கண்ணு! இது தப்புன்னு கூட உணர முடியாதபடி உன்னை மாத்தியிருக்காங்க பார்த்தியா? இதுதான் அவங்க சாமர்த்தியம்,” என்றார் வடிவேல்.

சாமிக்கண்ணு சிரித்தார். “சரிங்க சார், என் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாண நிச்சயம் வெச்சிருக்கேன். கொஞ்சம் பணத் தேவை. உங்கள்ல யாராவது ஒருத்தர் கொஞ்சம் கொடுத்து உதவறீங்களா?”

அவர்கள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பதில் பேசத் தெரியாமல் அவரையே பார்த்தார்கள்.

“நீங்களும் செய்ய மாட்டீங்க, கொடுக்கறவங்களையும் குறை சொல்லுவீங்க. அதுதான் உங்க மேல்தட்டு நியாயம்!”

“சேச்சே... தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க சாமிக்கண்ணு. இது நியாயமான பணம் கிடையாது. உங்க ஓட்டை விக்காதீங்க. நல்லவங்களைத் தேர்ந்தெடுங்க. அப்பத்தான் நம்ம எதிர்காலம் நல்லாயிருக்கும், நாடு வல்லரசாகும்.”

சாமிக்கண்ணு அவர்களை மாறி மாறிப் பார்த்தார். “பணக்காரனுக்கு பணம் கிடைச்சா பதுக்குவான்; ஏழைக்கு கிடைச்சா அவன் தேவைக்கு செலவு பண்ணுவான்! நீங்களும் உதவ மாட்டீங்க, எங்களுக்குக் கிடைக்கிற பணத்தையும் தப்பு சொல்லி தடுப்பீங்க. நல்லாயிருக்குங்க உங்க நியாயம்! யோக்கியன் எதுக்கு அரசியலுக்கு வர்றான்னு கூடத் தெரியாதா எங்களுக்கு?”

சலித்தபடியே குப்பைகளை அள்ளி கூடையில் போட்டார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com