சிறுகதை: சுப்புசாமியும் புதிய இம்சையும்..!

Subbu samiyum puthiya imsaiyum
Subbu samiyum puthiya imsaiyumArt: Mani Srikanthan
Published on
Kalki strip
Kalki

"நான் பாட்டுக்கு வீட்டிலே சுதந்திரமாத்தான் நடமாடிட்டிருந்தேன். பாட்டி தன் கழகக் கிழவிகளை தினமும் இட்டாந்து பேஜார் பண்றாடா. போர்டு மீட்டிங், போர்டு இல்லாத மீட்டிங், அங்கத்தினர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு. ஏற்கனவே கிழவிங்க கராத்தே கிளாஸ்கூட இந்த வீட்டிலேயே நடந்துச்சு. அதை விரட்ட நான் பட்டபாடு உனக்கு தான் தெரியுமே...!" - மருத்துவர் ஐயா மாதிரி தொடர்ந்து புலம்பிய சுப்புசாமியைப் பரிதாபமாகப் பார்த்தான் குண்டு ராஜா.

"ஏன் பாட்டியோட கட்டட ஆபீஸ் என்ன ஆச்சு? காலி பண்ணிட்டாங்களா...?"

"அது பாரம்பரியக் கட்டடமாம். ரொம்ப நாள் தாங்காதுன்னு ஒரு கோடீஸ்வரப் பெண்மணி, நிதி கொடுக்க, ஆங்காங்கே கட்டடத்துக்கு முட்டுக் கொடுத்து, பராமத்து பண்ணி, பூச்சு வேலை செய்து, புதுப்பிக்கப் போறாங்களாம்...!"

"அதுக்கு?"

"டேய் குண்டு... லைஃபிலே எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்திடலாம்டா. மானத்தைக்கூட விடலாம். ஆனா, தன்மானத்தை விடக்கூடாதுடா...!"

அவனுக்கு 'மானம்' ஓரளவு புரிந்தது.

"தன்மானம்... தன்மானம்னா...?" என்றான் குண்டு ராஜா.

Thaththa - Patti
Thaththa - PattiArt: Mani Srikanthan

"மனுசனோட உயிரை எதிரிங்க உருவி எடுக்கறது. என் வழி தனி வழி; அவளது வழி தனி. இதை நான் அனுசரிச்சிதான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கேன். திடீர்னு கிழவி பேஜார் பண்ணுறாடா...!" என்றார் தாத்தா அழுவாத குறையாக.

"வீட்டிலே நான் ஒரு ஆம்பிளை இருக்கேன் என்கிறதை அடிக்கடி மறந்துடறா. என் நியாயத்தைக் கேட்பார் யாருமில்லை...!"

"என்ன பாட்டி டைவர்ஸ் நோட்டீஸ் கொடுத்துட்டாங்களா?" குண்டு விபரீதமாய்ப் புரிந்துகொண்டான்.

"கிழவி எங்க வீட்டை தற்காலிகமா பாட்டிகள் முன்னேற்றக் கழகத்திற்கு பணயம் வச்சுட்டா. இவர்கள் அடிக்கிற லூட்டியில் என் சுகம், தூக்கம் போயிடுச்சு. கேட்டால், 'மாத வாடகை பதினைந்தாயிரம் கிடைக்குது. இவ்ளோ அமவுண்ட்டை உங்க கொள்ளுத்தாத்தாவா கொடுப்பார்?'ன்னு கேட்கிறா...!"

"நல்ல விஷயம்தானே! சரியான கேள்விதானே? இதுக்குப்போய் ஏன் அலட்டிக்கிறீங்க? அமைதியா வாழப் பாருங்க. பாட்டியை என்னைக்கு நீங்க ஜெயிச்சு இருக்கீங்க? நிறைய பல்டிதான் அடிச்சிருக்கீங்க...!" என்றான் குண்டு கிண்டல் தொனிக்க.

"நாசமா போக. என்கிட்ட சாபம் வாங்காதே. கிடைக்கிற ஒன்னு ரெண்டு துட்டுலேயும் உனக்கு மசால் தோசை வாங்கி கொடுத்திருக்கேன், பார்த்துக்கோ...!"

"சரி உங்களுக்கு ஒரு கிழவனார் தோஸ்த் வேண்டும்... நீங்கள் ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டில பாட்டி மிரண்டுபோய் தன் ஆபீஸ் ஜாகையை வேற எங்கேயாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதானே ஐடியா?"

"நான் நினைச்சதை சரியா பிடிச்சிட்டே. சரி, ஓல்டு மேன் கம்பெனிக்கு நான் எங்கே போவது?"

"நீங்க எங்கேயும் போக வேண்டாம். நம்ம ஆஃப் பிளேடு மாமனார் இருக்காரு. அவருதான் இந்த இடத்துக்குச் சரியான ஆள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டா, ஜோலிய கச்சிதமா முடிச்சிருவாரு...!" என்றான் குண்டு.

"அப்படியா? உடனே கருணாவை தொடர்பு கொள்...!" - கட்டளையிட்டார் சுப்புசாமி.

கொத்து பரோட்டா அடிக்கும் சப்தத்தில், ஓட்டல் 'தோஸ்த்' டெலிபோனில் பிளேடு கத்தி கத்திப் பேசினான்.

"ஏன், ஊட்டாண்டை யாரும் உன்னை மாதிரி கிழபோல்டு கிடையாதா...?" என்றான்.

"படவா, கிழம், போல்டுன்னு சொன்னே கீசிடுவேன் கீசி...!" என்றார் தாத்தா உதாராக.

"காண்டாவாதே நைனா. நான் உன்னிய போல்டுன்னு சொல்லல. பொதுவா சொன்னேன். ஆமா, இப்போ உனக்கு எதுக்கு ஆம்பளை ஜோடி? ஷோக்கா ஒரு பாட்டியை பிரெண்ட்ஷிப் கேட்டாகூட சுளுவா கிடைக்கும்...!" என்றான் பிளேடு.

"ஓவராப் பேசுறே...!"

"சரி என் மாமனாரை அனுப்பி வெக்கிறேன். நல்லா கவுனி. நம்மளையும் சைடுல கொஞ்சம் கவுனி. சமாளிச்சிக்கோ, வாத்தியாரே! இப்போ வைக்கிறேன் போனை...!" என்றான் கருணா.

Ulamannu - Thaththa
Ulamannu - ThaththaArt: Mani Srikanthan

சீவாத பரட்டைத் தலை, ஒரு வார முள் தாடி, பெரிய கிருதா, தொங்கிய முரட்டு மீசை, தூக்கிக் கட்டிய பட்டை பெல்ட் அணிந்த லுங்கி. ஹாஃப் பிளேடு கருணாச்சலத்தின் மாமனார் உளமண்ணு ஆஜர்!

'ஹூ இஸ் திஸ் மெக்கனாஸ் கோல்ட் பீரியட் ஓல்ட் மான்?'

போர்டிகோ வந்த கோமுப்பாட்டி யோசித்தாள்.

'வர வர கணவரின் போக்கு சரியில்லை. கண்ட கண்ட நபர்களை பங்களாவில் வைத்து சேட்டிங் செய்துகொண்டு...'

'இன்று ஒரு கை பார்த்து விடுவது' என்ற முடிவோடு அந்த அன்னியரை நோக்கினாள்.

பாட்டியைப் பார்த்ததும் சற்று மிரண்ட உளமண்ணு, அவசர அவசரமாகத் தன் லுங்கியை முழங்கால்வரை இறக்கி கொண்டு, காவிப் பற்களைக் காட்டிச் சிரித்தான். சலாம் வைத்தான்.

பதிலுக்கு சலாம் வைத்த பாட்டி, "தேங்க்யூ ஹவ் ஆர் யூ?" என்றாள் கூலிங் கிளாஸை கழட்டியபடியே.

"அது வந்து... அது வந்தும்மா... நம்ம கருணாவோட மாமனாருங்க. இந்த ஐயா தன் பேச்சுத் துணைக்கும் டிஸ்கஷனுக்கும் என்னை கூப்பிட்டார். ஏதோ சங்கத்து கிழவிங்க பேஜார் குடுக்குதுங்களாமே...?" என்று தன் விளக்கத்தை மிக விளக்கமாகக் கொடுத்த அவனிடம், "யூ ஆர் வெல்கம் டூ அவர் ஹோம் மிஸ்டர்...உங்க பேர்...?"

"உ... உளமண்ணு...!"

"ஓ, உளமண்ணு? வெரி நைஸ் நேம்...!" - என்று அவனது ரேகைகள் மறைந்த, சுருக்கங்கள் விழுந்த ஒடிசலான கையைப் பற்றி குலுக்கினாள் பாட்டி.

"ப்ளீஸ் டோன்ட் பி ஷை... இதை உங்களின் வீடாக நினைத்துக் கொள்ளலாம். ஐ வில் மீட் யூ ஸூன் ...!" என்றபடி தனது அறைக்குச் சென்றாள்.

"யோவ்... உளமண்ணு, நீ என் ஆளா, இல்லை அவள் ஆளா?" என்று சப்தமிட்டார் சுப்புசாமி. சுளையா உன்னை ஏலத்தில் எடுத்திருக்கேன். என் வீட்டு சம்சாரம் அலறுகிறமாதிரி ஒரு சிக்ஸர் வேணாம், ஒரு த்ரீயாவது அடி! நீ பண்ற அலம்பல்லே எந்தக் கிழவியும் என் வீட்டு நிலைப்படியைத் தாண்டக்கூடாது...!"

"அம்மா ரொம்ப டீஜண்டா இருக்காங்க...!"

"உன்கிட்ட என் பொண்டாட்டியைப்பத்தி சர்டிபிகேட்டா கேட்டேன்?"

"சரி வா நைனா, முதல்ல சடுகுடு போடுவோம். அப்பால, சீட்டாட்டம் ஒரு கை பாக்கலாம்...!"

"நைனாவெல்லாம் சொல்லக்கூடாது. ஸ்டைலா சார் சொல்லப்பா...!"

தாத்தா கட்டளையிட்டதும், மண்ணுக்கு டென்ஷன் ஆகிவிட்டது.

"அதெல்லாம் நம்ம வாயில நுழையாது நைனா...!" என்றவன், அலட்சியம் செய்வதுபோல, பக்கவாட்டில் திரும்பி இடுப்பில் செருகியிருந்த பட்டை பாட்டிலை எடுத்து கொஞ்சம் பானம் ஊற்றிக் கொண்டான்.

"டூட்டி டயத்திலே சாராயமெல்லாம் குடிக்க கூடாது. ரூல்சை ஃபாலோ பண்ணனும்...!"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காதல் வாழப் பொய்யும் சொல்வோம்!
Subbu samiyum puthiya imsaiyum

"ரூல்சு... ரூல்சு... சரிப்பா, பண்றேன். பண்றேன். வகுறு எரியுது. ஏதாவது ஊறுக்கா கிடைக்குமா? நீங்கலெல்லாம் வருஷம் பூரா மாவடு வெச்சிருப்பீங்களே! இல்லாங்காட்டினா இருபது ரூபா கொடு. ஒரு டபிள் ஆப் பாயில் துன்னுட்டு வந்துடறேன்...!"

'இதெல்லாம் ஓவர்...!' என்று கத்த நினைத்தார் தாத்தா.

'அவளுக்கு உபத்திரவம் கொடுப்பான் என்று கூட்டி வந்தா... எனக்கு கொடுக்கிறானே?' என்று நினைத்தபடி ஜிப்பாவைத் துழாவி 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து, "சரி, மீதிச் சில்லறை வாங்கிட்டு வந்திரப்பா...!" என்றார்.

போய் ஒரு மணி நேரம் ஆயிற்று. ஆளைக் காணவில்லை.

இதனிடையே கோமுவேறு அடிக்கடி கதவைத் திறந்து, "அந்த மிஸ்டர் வந்துட்டாரா? ஆர்டர் செஞ்ச நான்வெஜ் மிக்ஸ்ட் பிரைட் ரைஸ் ஆறிண்டிருக்கு..." என்று கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

"மிஸ்டர்... கிஸ்டர்... ? என் தோஸ்துக்கு நீ என்ன சாப்பாடு ஆர்டர் போடுகிறது...? எனக்கு என்னைக்காவது ஒரு சாதா தோசையாவது ஆர்டர் போட்டிருக்கியா...?"

"என்ன இருந்தாலும் நம்ம வீட்டு விருந்தாளி அல்லவா அவர்?"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாம்பத்தியம்!
Subbu samiyum puthiya imsaiyum

பாட்டி சொல்லிக் கொண்டிருக்கையில், கேட்டை தள்ளிக்கொண்டு உளமண்ணு ஆடியபடியே வந்து கொண்டிருந்தார். நூறு ரூபாயின் மீதமும் கரைந்து போயிருந்தது!

பாட்டியைப் பார்த்ததும் அதே மரியாதை, பணிவு! புதிதாகப் பார்த்ததுபோல மறுபடியும் சலாம் வைத்தார்.

"குட் ஆப்டர்நூன் சார்! என்ன சாப்பிடாமல் வெளியே போயிட்டீங்க? ஃப்ரைட் ரைஸ் சூடு பண்ணி கொண்டு வருவேன், பிளீஸ் வெயிட்...!" என்றபடி சமையல் அறைக்குச் சென்றாள்.

சுப்புசாமியைக் கண்டுகொள்ளாத உளமண்ணு ஏதோ யோசித்தபடி தனக்குள் பேசிக் கொண்டான்.

அழகிய பூ வேலைப்பாடு செய்த பீங்கான் தட்டில் உணவைச் சுடச்சுட பரப்பி, ஓரத்தில் வெள்ளரி, தக்காளி துண்டுகள், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் வைத்து கொண்டு வந்தாள் கோமு.

"மிஸ்டர் உள்ளே டைனிங் டேபிளில் சாப்பிடுகிறீர்களா... இல்லை இப்படி இயற்கையான காற்றோட்டத்தில் ..." முடிக்கவில்லை பாட்டி, அப்படியே கும்பிட்டு பிளேட்டை வாங்கி, போர்டிகோவிலேயே குத்துக்காலிட்டு அமர்ந்து உண்ண ஆரம்பித்தான் உளமண்ணு.

'அடப்பாவி புத்தியைக் காட்டிட்டியே...!' என மனதுக்குள் குமுறினார் தாத்தா.

நல்ல பாசுமதி அரிசியில் செய்த பிரைட் ரைசில், ஒரு கைப்பிடி எடுத்தால் சுருண்ட இறால் வந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சீமெண்ணெய்!
Subbu samiyum puthiya imsaiyum

மற்றொரு முறை சிக்கன் துண்டு; பிறிதொன்றில் மட்டன் துண்டு என்று மாறி மாறி வந்து உளமண்ணுவை உளமாற ஆனந்தக் கூப்பாடு போட வைத்துவிட்டது. பாதி வாய்க்கும், மீதியை தோட்டத்தின் சகல ஜீவராசிகளுக்கும் சிந்திக்கொண்டு விருந்தாளி உணவருந்தி முடிக்க, சில்லென்ற தண்ணீர்க் குவளையோடு வந்த பாட்டி, கண்ணாடி தம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள்.

பாட்டிக்கு மறுபடியும் ஒரு பெரிய கும்பிடு போட்டு, விசிறி வாழை மரங்களின் அடர்த்தியான நிழலில் அப்படியே படுத்தான். நொடியில் குறட்டைவிட ஆரம்பித்தான்.

சுப்புசாமி நொறுங்கிப் போய்விட்டார்!

மாலை 4 மணி. பா.மு.க. பாட்டிகள் வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள் பாட்டிமிண்டன் விளையாட. அனைவரும் ஒரே ஒரு கேள்வியைத்தான் கோமுவிடம் கேட்டனர்.

"யார் இந்த ஆள்? படா குடிகாரனாக இருப்பார்போல இருக்கே...? இவருக்கு இங்கே என்ன வேலை பிரசிடென்ட்ஜி...?"

"என் கணவரின் தூரத்துச் சொந்தம். எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை, ஃபிரண்ட்ஸ்...!" என்றாள் கோமு அலட்சியமாக.

'இந்த கிழவிகளைக்கூட சமாளித்து விடலாம் போலிருக்கு. மயக்கம் தெளிந்ததும் முதல் வேலையாக உளமண்ணுவை பேக் செய்துவிட வேண்டும்...!' - என்று உறுதியோடு காத்திருந்தார், சுப்புசாமி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com