
மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்கள், 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட புகழ் பெற்ற நாடக நூலான ‘மனோன்மணீயம்’ எனும் நூலில் உள்ள பாயிரத்தில் இடம் பெற்ற 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதியினை, கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு மார்ச்11 அன்று 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலாகத் தேர்வு செய்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து விழாக்களிலும், விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடும் வழக்கம் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில், ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம் பெற்று வருவது சரி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்திய அரசின் ஒன்றியப் பகுதியான, புதுச்சேரியில் பாடப்படும் ‘தமித்தாய் வாழ்த்து’ பாடல் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?
புதுச்சேரியில், கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘இசை அமுது’ என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடலான, ’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாலாகவும், மாநிலப் பாடலாகவும் அமைந்திருக்கிறது.
“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!”
எனும் இந்தப் பாடலுக்கு,
“வாழ்க்கையை நேர்மையானதாக, அழகானதாகச் செய்பவள் நீயே. நிறைவான புகழுக்குரியவள் நீயே, என் தமிழ்த் தாயே! வாழ்வினில் தமிழரைத் தாழாது காப்பவள் நீதான். வீரனுக்குள் இருக்கும் திறனும், அவனது வெற்றிக்குக் காரணமும் நீதான். நான் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன். தமிழன் நான் என்றும் தலைகுனிய மாட்டேன். எனைச் சூழ நின்று எனக்கு இன்பத் தரும் தாயே, என் உடலுக்குள் உயிராய் இருக்கும் உனை மறக்கமாட்டேன். பெருமைமிகு தமிழே, என்னுயிரே, தேனே, எனது செயலும் உயிரும் உன்னைச் சார்ந்தே இயங்கும். நீ சிதைந்து போனால் நானும் சிதைவேன்; நல்லநிலையடைந்தால் நானும் நல்லநிலையடைவேன். களங்கமற்ற புது நீர்நிலை போன்ற தொன்மையான நல்ல மாந்தர் கூட்டத்தில் செந்தாமரை செழித்து வளர்ந்தது போல் வளர்ந்து செழித்த என் தமிழே வாழ்க! ஒளியான தமிழே நீ வாழ்க!”
என்பதேப் பொருள்.
புதுச்சேரி அரசின் அதிகாரப்பூர்வ விழாக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் தொடக்கத்தில் இந்தப் பாடல் பாடப்படுகிறது. விழா நிறைவில், இந்திய தேசிய கீதம் இடம் பெறுகிறது.