18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இயக்கும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளில் 2063 விபத்துகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். நாடு முழுவதும் 2023-24 ஆம் ஆண்டில் சிறுவர்கள் இயக்கிய வாகனங்களால் 11891 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் மகாராஷ்டிரத்தில் 1067, உத்தரப்பிரதேசத்தில் 1135, ஆந்திர பிரதேசத்தில் 766, கர்நாடகத்தில் 751, குஜராத்தில் 727, ராஜஸ்தானில் 450, சத்தீஸ்கரில் 504 நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
சட்டம் அனுமதிக்காவிட்டாலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது என்பது நாடு முழுவதும் இயல்பாக ஒன்றாகவே காணப்படுகிறது. மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்தினை ஏற்படுத்தினால் சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூபாய் 25000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும் வாகனத்தை இயக்கும் சிறுவன் 25 வயது வரை ஓட்டுநர் உரிமத்தை பெற முடியாது. இச்சட்டம் செயல்பாட்டில் இருப்பினும் பெரும்பாலான சிறுவர்களுக்கு இது குறித்து போதிய விழுப்புணர்வு இல்லை.
தலைக்கவசம் அணியாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமலும் சிறுவர்கள் ப்ளூடூத், ஹெட்செட் போன்றவற்றில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒலி அவர்களுக்கு கேட்பதில்லை. இவற்றால் அவர்களுக்கு கவனச்சிதறல்களும் ஏற்படுகின்றன.
போக்குவரத்து விதிமுறைகளை தடுக்க மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு தானாகவே அபராதம் விதிக்கும் நடைமுறை வழக்கில் உள்ளது. இருப்பினும் பழைய வாகனங்களை வாங்குபவர்கள், வாங்கும் வாகன ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து கொள்வதில்லை.
கைப்பேசியை எண் மாறி விடுவதால் போக்குவரத்து காவல் துறையின் குறுந்தகவல்கள் அவர்களுக்கு செல்வதில்லை. இதனால் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து அபராதத்தை வசூலிப்பதில் சிக்கல்கள் தொடர்கின்றன. மேலும், மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மட்டுமே போக்குவரத்து நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை பெற்றோர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் அதிவேகமாக இயங்கக்கூடிய விலை உயர்ந்த வாகனங்களை அவர்களுக்கு வாங்கியும் தருகிறார்கள். வாகனங்களை வேகமாக இயக்குவது அவர்களுக்கு பரவசத்தை அளிப்பதால் அவர்களும் விபத்துகளின் விபரீதத்தை உணராமல் வாகனங்களை இயக்குவது தொடர்கிறது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டிய 18 வயதுக்கு குறைவான சிறுவர்களிடமிருந்து ரூ.48 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், நாட்டில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் மட்டும் ரூ.44.27 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போக்குவரத்து விதி மீறல் வழக்குகளில் வாகனங்களின் உரிமையாளர்கள், முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், சிறுவர்களிடம் வாகனங்களைக் கொடுத்து ஓட்ட அனுமதித்தவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர். மோட்டார் வாகன வழி காட்டுதல்கள் கடுமையாக செயல்படுத்தப்படுவதில்லை என்பது சிறார்வாகன விபத்து அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சிறார்கள் வாகனத்தை ஓட்டி பிடிபட்டால், அபராதம், எச்சரிக்கை, பெற்றோருக்கு தகவலை தெரிவிப்பது, கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்புதல் போன்றவையுடனே காவல்துறையின் பொறுப்புகள் முடிந்து விடுகின்றன.
இந்நிலையில் சிறார்கள் முறையான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும்போது கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிப்பது சிறார்களால் ஏற்படும் வாகன விபத்துகளை வெகுவாக குறைக்கும். இவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமே இவர்களை கண்டிக்கும் உரிமை உள்ளது. பள்ளிகள் அவர்களை கண்டிக்கும் முற்றிலும் ஏறத்தாழ இழந்து விட்டன.
இருப்பினும், பள்ளிகளிலும், சமூகக்கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களிலும் இது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை அவ்வப்போது நடத்தலாம்.
தற்காலத்தில் வாகனங்களை இயக்குவது என்பது எல்லோருக்கும் தேவையான ஓர் அடிப்படைத் திறமைதான். எனினும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகனங்களை இயக்கும்போது எடுக்கும் முடிவெடுக்கும் திறன் ஓட்டுனரின் பயணத்தையும், மற்றவர்களின் பயணத்தையும் வெகுவாக பாதிக்கும். இது சிறார் ஓட்டுனர்களுக்கு சாத்தியமில்லை என்பதுவே உண்மை.
நாட்டின் எதிர்காலத் தலைவர்களான சிறார்கள்களின் உயிர்கள் விலை மதிப்பற்றவை. இயல்பாகவே அப்பருவத்தில் வீரசாகசங்களை செய்ய அவர்கள் விரும்புவது இயல்பான ஒன்றே. ஆனால், தன் உயிருக்கோ, பிறர் உயிரினுக்கோ சேதத்தை ஏற்படுத்தும் சாகசங்களில் சிறார்கள் தொடர்ந்து ஈடுபடுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில், சிறுவர்கள் போக்குவரத்து செயல்களுக்கு பெற்றோர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இது போக்குவரத்து விதிகள் எந்தவித சமரசமும் இல்லாமல் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.