சிறுவர் சிறுகதை: சிங்கராஜாவின் காதில் கானம் இசைத்தது யார்?

Wild animals
Wild animals Tamil children's short storyImg credit: AI Image
Published on

சிங்கத்துக்கு அன்று மிகவும் சரியான உறக்கம். காரணம் காதில் நல்ல அருமையான ராகம். அதுதான் அதை சுகமாக தூங்க வைத்தது. ஆனால், அந்த ராகம் எங்கிருந்து வந்தது என்று சிங்கத்துக்கு புரியவில்லை. ஒருவேளை இதுதான் தேவ கானமோ என்று யோசித்தது. அமைச்சர் கரடியார் மூலம் தீர்வு காண்போம் என்று நினைத்து, சிங்கத்தின் குகைகாவலன் கழுதையை அழைத்து உடன் அமைச்சர் கரடியாரை வர பணித்து கட்டளையிட்டார்.

கழுதை ஓடியது. விவரத்தை கரடியாரிடம் கூறியது.

'அய்யய்யோ. இவன் சரியான கழுத்தறுப்பாயிற்றே. இன்னிக்கு என்ன சோதனை செய்யப்போறானோ தெரியலியே' என்று பலத்த சிந்தனையுடன் மன்னரை சென்று பார்த்தது கரடி.

"அமைச்சரே. ஒரு சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்."

"என்ன மன்னா? முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்," என்றார் மதிமிகு அமைச்சர் கரடியார்.

"நேற்று என் வாழ்நாளில் இல்லாத அந்த மாதிரியான மிகவும் ரம்மியமான உறக்கம். காரணம் நான் ஒரு கானத்தை என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த தேவ கானம் பாடியது யார்? இதைதான் நீர் கண்டு பிடிக்க வேண்டும்."

'சரியாப்போச்சு. இந்த காட்டுல யார் இவரு காதில வந்து பாடினது. என் பிராணனை வாங்கிய அந்த கயவன் யார் என்று கண்டுபிடித்து இப்போதே கொன்றுவிடுகிறேன்.' கரடியார் கோபத்துடன், ஆனால் அமைதியுடன், "மன்னா இது பெரும் சவால்

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஆணவம் அழிவை தரும்!
Wild animals

நிறைந்த கேள்வி. பதில் நம் விலங்குகளுக்கு ஒரு போட்டி வைத்து யார் மன்னரின் கேள்விக்கு சரியான தீர்வை கொடுக்கிறாரோ அவருக்கு ஆயிரம் மாமிசத்துண்டுகளோ, சைவமாக இருந்தால் ஆயிரம் கீரை கட்டுகளோ பரிசு என்று அறிவிப்போம். அதுதான் சரியாக இருக்கும்" என்றதும், சிங்க ராஜாவும் "ம்ம். அப்படியே ஆகட்டும்" என்றதும் உடன் ஒரு பெரும் குரங்கை ஏற்பாடு செய்து காடு முழுதும் தண்டோரா போட கரடி ஏற்பாடு செய்தது.

தண்டோரா சத்தம் கேட்டு அனைத்து விலங்குகளும் கூடின.

"இதனால் சகல விலங்குகளுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் மன்னர் சிங்க ராஜா தன் வாழ்நாளிலேயே நேற்றுதான் நிம்மதியாகவும் மிகவும் மனம் மகிழ்ந்தும் உறங்கினாராம்.

அதற்கு காரணம் அவர் காதில் ஒலித்த தேவ கானமாம். இதை யார் பாடியது என்று சரியாக கூறி மன்னரின் சந்கேத்தை போக்குபவருக்கு, அசைவ விலங்குகளாக இருந்தால் ஆயிரம் மாமிசத்துண்டுகளும், அதுவே சைவ விலங்குகளாக இருந்தால் ஆயிரம் கட்டு கீரைகளும் பரிசாக கொடுக்கப்படும். இது மன்னர் கட்டளை. நாளை மாலை சந்திர உதயம் போது அனைவரும் மன்னர் குகை பங்களா முன் வந்து அமர்ந்து சந்தேகத்தை தீர்க்க வேண்டும். இது உத்தரவு" என்று கூறி மீண்டும் தண்டோராவை கொட்டவும், அனைத்தும் ஆயிரம் துண்டுகளா? அய்யோ ஆயிரம் கீரைக்கட்டுகளா? என்று அசைவ, சைவ விலங்குகள் வாய் பொத்தி மிகுந்த ஆச்சர்யத்துடன் பேசிக்கொண்டு கலைந்து சென்றன.

மறுநாள் சந்திர உதயம். அனைத்து விலங்குகளும் காத்திருந்தன. சிங்கம் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தது. அருகில் அமைச்சர் கரடியார் இருக்க, காவலர் கழுதையார் அனைத்து விலங்கு கூட்டங்களையும் ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தது.

"இப்போது விலங்குகள் நம் மன்னரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம்" என்றதும் ஓநாய் உடன் எழுந்தது.

"மன்னா இரவில் என்றால் நிச்சயம் அது ஆந்தையாகத்தான் இருக்க வேண்டும்" என்றது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வீரா
Wild animals

"அய்யோ.. ஆந்தை சத்தத்தில் யாராவது நிம்மதியாக தூங்குவானா... உளறாதே உட்கார்" என்றார் அமைச்சர்.

அடுத்து எழுந்தது புலியார். "மன்னா எனக்கு என்னவோ அது வேறு கண்டத்து பறவையாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்" என்றதும் சிரித்துக்கொண்டே சிங்கராஜாவே பதில் கொடுத்தார். "நாம் இந்த காட்டில் காண்பவற்றைத்தான் பேசவேண்டுமே ஒழிய அடுத்த கண்டமோ அண்டத்தையோ பற்றி கூறக்கூடாது" என்றார். அதுவும் அமர்ந்து விட்டது.

பிறகு, முதலை எழுந்து, "மன்னா.. இது ஒரு வகை மீன்தான். நானே ஆற்றில் இந்த ராகத்தை பல முறை கேட்டிருக்கிறேன்" என்றது.

"முட்டாள் முதலையே. அது தண்ணீரில் இருக்கலாம். அந்த மீனே நீரை விட்டு மன்னரை தேவ கானம் பாடி உறங்க செய்ய முடியுமா? அப்படி நீரை விட்டு வந்தால் அதன் உயிர் போய் விடாதா" என்றதும் அதுவும் வெட்கப்பட்டு அமர்ந்து விட்டது.

அடுத்து வந்தது பன்னி. "மன்னா எனக்கு விடை தெரிந்து விட்டது. அந்த ராகத்தை  கோரசாக பாட நானும் அனுபவித்து கேட்டு இருக்கிறேன். ஆம், உங்களை தேவ கானம் பாடி தூங்க வைத்தது தவளையே" என்றது பன்னி.

"அன்பர் பன்னியாரே ஆற்றிலோ, குளத்திலோ நீர் நிறம்பி இருக்கும் போது மிகுந்த மகிழ்வுடன் தவளைகள் இசைக்கும் இல்லை.. இல்லை.. கத்தும். ஆனால் ஒரு தவளையின் குரலிலும் ஆந்தையின் குரலிலும் சொரணை உள்ளவன் தூங்கமாட்டான்" என்றதும், "அதுவும் சரி ராஜா" என்று கூறி அமர்ந்து விட்டது.

இப்போது யாரும் எந்த பதிலும் கூற முடியாமல் தவித்தனர். ஒரே அமைதி. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் புத்திசாலித்தனமான பதிலை கூறி அசத்த வேண்டும் என்று நினைத்து கரடியார் எழுந்தபோது, "ச்சீ.. ச்சீ இது என்னடா தொல்லை" என்று கைகளால் தட்டி விட்டு அனைத்து விலங்குகளையும் ஒரு கிண்டலுடன் பார்த்து தனக்குத்தான் பரிசு என்ற பெருமையுடன் "மாமன்னா எல்லோரும் என்னென்னமோ உளறி கொட்டினார்கள். அந்த விடை மிக எளிது. உங்களுக்கு தேவ கானம் பாடி தூங்க வைத்தது குயிலேதான்" என்றதும் அனைத்து விலங்குகளும் கைதட்டி பெரு மகிழ்ச்சியை தெரிவித்தன.

மன்னருக்கும் சரியாக இருக்குமோ என்று தோன்றியது. கரடியாருக்கும் குயிலின் இனிமை தெரியும். அதனால் அதாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. பரிசு அறிவிக்கும் நேரம்.

"மன்னா.." என்று ஒரு குரல்.

யாருடா என்று திரும்பிப் பார்த்தது சிங்கம்.

நின்றிருந்தது ஒரு குட்டி முயல்.

"உனக்கு என்ன வேணும். பசிக்கிறதா?" என்றார் சிங்கம் கேலியுடன்.

இதையும் படியுங்கள்:
24 மணிநேரத்தை மனிதன் எப்படி கண்டுபிடித்தான்? Clock என்ற பெயர் எப்படி வந்தது? அறிவோமா?
Wild animals

"ஒரு சந்தேகம் மன்னா. அதற்கு பதில் அளித்து விட்டு பரிசை கொடுங்கள்" என்றது குட்டி முயல்.

அனைவரும் ஒரு அச்சத்துடன் இருந்தனர்.

"வந்துட்டான்யா காட்டில ஒரு நக்கீரன்" என்று நரி புலம்பியபடி கோபத்துடன் குட்டி முயலை பார்த்தது.

"என்ன சந்தேகம் கேள்" என்றார் மன்னர்.

"தேவகானமோ.. ராகமோ வெகுதொலைவில் இருந்து கேட்டதாக உணர்ந்தீர்களா? இல்லை காதின் அருகில் அது இன்பத்தேனாக பாய்ந்ததா...?"

"ஓ.. அருமைதான்... காதின் அருகில் இன்பத்தேனாக ஒலித்து என் இதயத்தை குளிர்வித்து, என்னையும் ஆனந்தமாக உறங்க வைத்ததடா குட்டி" என்றது சிங்கம்.

"மன்னா அப்படி என்றால் அது குயிலாக இருக்காது. காரணம் அதற்கு இரவில் எல்லாம் கானம் இசைக்கும் பழக்கமில்லை. அடுத்து அப்படியே கூவினாலும் உங்கள் காதில் வந்து கூவினால் உங்கள் தூக்கம் தான் கெடுமே ஒழிய நிம்மதியாக தூங்க முடியாது" என்றது குட்டி.

"என்ன அமைச்சரே பொடியன் சொல்வது சரிதானா..?"

"ஆம் மன்னா.. எனக்கும் அப்படித்தான் தோணுகிறது."

"சரி அப்படி என்றால் உன்னிடம் விடை உள்ளதா?"

"உள்ளது மன்னா. நீங்கள் அனுமதித்தால் அருகில் வந்து சொல்கிறேன்."

"வா... வந்து என் சந்தேகத்தை தீர்த்துவை."

உடன் குட்டி முயல் நரியை திரும்பி பார்த்து விட்டு மன்னரிடம் சென்று தன் மூடிய கையை திறந்தது.

அவ்வளவுதான் 'ஒய்ங்.. ஒய்ங்' என்ற ராகமிட்டபடி சுதந்திரமாக கொசுக்கள் பறந்து சென்றன.

"ஓ... ஓ... பலே பலே. இதே ராகம் தான். இதே தேவகானம் தான் என்னை தூங்க வைத்தது. நீயே வென்றாய்" என்ற மன்னர். "அது சரி உனக்கு எப்படி அது தெரிந்தது" என்று கேட்டார் மன்னர்.

மன்னா எனக்கு முன்தான் நரியார் அமர்ந்திருந்தார். அவரிடம் ஒரு குருதி வாசனை. அதற்காக கொசுக்கள் அவரை மொய்த்த போது நான் அவை ராகமிடுவதை கவனித்து விட்டேன். ஆனால், அவரோ அதை சர்வ சாதாரணமாக அடித்தும் துரத்தியும் விட்டு அந்த பாடு பட்டார் என்றதும், அனைத்து விலங்குகளும் பெரும் மகிழ்வில் கை தட்டி உரக்க உற்சாக குரலிட்டு தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தின.

"குட்டி முயலே வென்றது" என்று கூறிய மன்னர். அதை ஆர்வமுடன் பார்த்து நாவால் நக்கி கொடுத்து. "சரி.. இந்தா ஆயிரம் கட்டு கீரை என்றதும், "மன்னா என் ஒருவனால் அவ்வளவும் முடியாது. அதனால் அதை அனைத்து சைவ விலங்குகளும் உண்ண அனுமதி வேண்டுகிறேன்" என்றது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: 'உலகின் அபார சக்தி யார்?'
Wild animals

"தந்தோம்" என்றார் மன்னர்.

"மன்னா.. அசைவ விலங்குகளும் அதிருப்தியுடன் செல்ல வேண்டாம். தாங்கள் ஆயிரம் மாமிச துண்டுகளை அவர்களுக்கும் கொடுக்க வேண்டுகிறேன்" என்றது குட்டி முயல்.

"தந்தோம்.."

"மன்னா.. இந்த கொசுவுக்கும் பரிசு கொடுக்கனும். அதுதான் நியாயம். ஆயிரம் சொட்டு இரத்தம் இந்த காட்டின் ஒவ்வொரு விலங்கிடம் இருந்தும் ஒரு சொட்டு என்றும் அனுமதிக்க வேண்டுகிறேன்' என்றதும் மன்னர் குட்டியை பாராட்டி, "தந்தோம்.." என்றார்.

அவ்வளவுதான் மகிழ்ந்த கொசுக்கள் எல்லாம் ராகமிட்டு குட்டி முயலையும் சிங்கத்தையும் சுற்றி வர சிங்கமே தன் முதல் இரத்த தானத்தை தொடங்கி வைத்தது.

நீதி: நல்லவன் புத்தி கூர்மை அவனையும் காக்கும் மற்றவரையும் சந்தோஷப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com