தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு சார்புடைய அனைத்து விழாக்களிலும், பள்ளி / கல்வி நிறுவனங்களில் நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டம் போன்ற நிகழ்வுகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது.
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவர் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட புகழ் பெற்ற நாடக நூலான ‘மனோன்மணீயம்’ எனும் நூலில் உள்ள பாயிரத்தில் ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதியேத் தமிழ்நாடு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்தப் பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 ஆம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் இப்பாடல் பாடப்பட்டு வந்தது. மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாக ஏற்று, ஆங்காங்கே உருவாக்கப்பட்ட சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு இப்பாடலைத் தமிழக அரசின் பாடலாக ஏற்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தன.
1967 ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்த ஆட்சிக்குத் தலைமையேற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சரான கா.ந.அண்ணாதுரை தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கை முன்னெடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாட ஏதுவாகத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்தார்.
ஆலோசனையின் முடிவில், மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய, ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. மனோன்மணீயம் சுந்தரனாரின், ‘நீராரும் கடலுடுத்த’ பாடலில் வரும் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ எனும் வரிகளில் வரும் ‘திராவிட’ என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே, அப்பாடலையேத் தேர்ந்தெடுத்து அரசு அறிவிக்கவிருந்த நிலையில், 1969 ஆம் ஆண்டில் அண்ணாதுரை இறந்தார்.
அதன் பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, அப்பாடலில் இடம் பெற்றிருந்த ‘ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை’ என்று கூறும் வரிகள் தவிர்க்கப்பட்டு, தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகளை மட்டும் கொண்டு, இப்பாடலை 1970 ஆம் ஆண்டு மார்ச்சு 11 ஆம் நாளன்று தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனாரின் ‘நீராரும் கடலுடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாளன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழ்நாடு அரசு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து 2021 டிசம்பரில் வெளியிட்ட தமிழ்நாடு அரசாணையில் மனோன்மணியம் சுந்தரனாரின் ‘நீராரும் கடலுடுத்த’ பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும். பாடலைப் பாடும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் (மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்குண்டு) இப்பாடலை 55 விநாடிகளில் முல்லைப்பாணி எனும் பண்ணில் (மோகனராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
சமீபத்தில்...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடும் போது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டுப் போனது. இதனால், பெரும் சர்ச்சையும், பிரச்சனையும் ஏற்பட்ட நிலையில், சென்னை தூர்தர்ஷன் அலுவலகம், ‘கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட தவறு’ என்று விளக்கம் அளித்தது.
இதே போன்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி தலைமையிலான ஆய்வுக் கூட்ட நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, சில வார்த்தைகள் தவறாகப் பாடப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதன் பின்பு, துணை முதல்வர் உதயநிதி, ‘தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. தொழில்நுட்பப் பிரச்சனையால் ஒலிவாங்கி சரி வர வேலை செய்யாததால் இரண்டு, மூன்று இடங்களில் சரியாகக் குரல் கேட்கவில்லை. எனினும் மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடப்பட்டது’ என்று விளக்கமளித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக ஏற்பட்ட இவ்விரு பிரச்சனைகளுக்கு முன்பாக, 2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மட்டும் எழுந்து நின்று விட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டு, அது பெரும் சர்ச்சையானது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகள் அனைத்திலும், 6 ஆம் வகுப்பு தொடங்கி 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மற்றும் ‘தேசியகீதம்’ என்று இரண்டு பாடல்களும் தவறிலலாமல் எழுதவும், பாடவும் கற்றுக் கொள்ளும் வகையில் இரண்டு பாடல்களும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுத் தனிப்பயிற்சி அளித்திட வேண்டும்.