

“நிஜமாகவா சொல்றே, பழைய கவர்ச்சி நடிகை கீர்த்திஸ்ரீயோட மகளா நீ..?”
சேதுராமன் திகைப்பும், வியப்பும் கலந்தவராக எதிரில் அமர்ந்திருந்த வர்ஷிகாவைப் பார்த்தார். அவள், தன் அருகிலிருந்த விமலை தர்மசங்கடத்துடன் பார்த்தாள்.
விமல் தன்னிடம் எந்தச் சலனமும் இல்லை என்பதை நிரூபிக்க விரும்புபவன்போல இயல்பாக இருந்தான்.
“மைகாட்...” சேதுராமன் பரபரப்பு தீராமல் தலையை உதறி விட்டுக்கொண்டார். விமலை அதிர்ச்சி தீராமல் பார்த்தார். “என்னடா மகனே இது? இத்தனை சிக்கல் உண்டுபண்ணி வெச்சிருக்கே! உன் காதல், கல்யாணத்துல முடிய ஜாதி, சம்பிரதாய, பொருளாதாரத் தடைகள் தாண்டி இப்படியெல்லாம்கூட வினோத சிக்கல்கள் உருவானா நான் எப்படி உதவறது? மேலிடத்துல உன் சார்பா என்ன பேச..? ஒரு பாயின்ட்கூட உனக்குச் சாதகமா இல்லையேடா..”
விமல் அவரைப் போலியாக கையெடுத்து வணங்கினான். “அப்பனே சரணம். நீங்கதான் என் கடைசி நேர நம்பிக்கை. உங்ககிட்ட சரணாகதி அடைஞ்சவங்களைக் காப்பாத்தி கரைசேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கு! நீங்க மனசு வெச்சா எல்லாம் நல்லபடியா முடியும்ப்பா...”
சொந்த அப்பாவிடமே மார்க்கெட்டிங் செய்தான் விமல்.