ஃபாலிங்வாட்டர் (Fallingwater), என்பது 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு வீடு ஆகும். உரிமையாளரின் பெயரால் இது மூத்த எட்கார் காஃப்மன் வீடு எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது 1935 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க்கிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள தென்மேற்குப் பென்சில்வேனியாவின் நாட்டுப்புறப் பகுதியொன்றில் கட்டப்பட்டது. இவ்வீட்டின் ஒரு பகுதி அருவியொன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகழ்பெற்ற கட்டிடம் கட்டப்பட்ட வரலாறு சுவையானது. வாங்க, அந்தக் கதையைப் படிக்கலாம்.
மூத்த எட்கார் காஃப்மன், பிட்ஸ்பர்க் நகரின் வெற்றிகரமான வணிகர்களுள் ஒருவர். அந்நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வந்தார். இவரது மகனான இளைய எட்கார் காஃப்மன் சிறிது காலம் பிராங்க் லாயிட் ரைட்டின் கீழ் கட்டிடக்கலை பயின்று வந்தார். ஒருமுறை ரைட், காஃப்மனின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். இளைய காஃப்மனுடன் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த ரைட், மூத்த காஃப்மனுக்குக் கேட்கும்படியாக, அந்த வீடு காஃப்மனின் பெருமைக்குப் பெறுமதியானதல்ல என்றாராம். இது, வீடு பெறுமதியாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை மூத்த காஃப்மனிடம் உருவாக்கியது.
காஃப்மனுக்கு, பிட்ஸ்பர்க்குக்கு வெளியே அருவியொன்றுடன் கூடிய நிலம் ஒன்றிருந்தது. அதிலிருந்த சில கட்டிடங்கள் பழுதடைந்திருந்தன. அதற்கு ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் காஃப்மன், ரைட்டைத் தொடர்பு கொண்டார்.
1934 ஆம் ஆண்டில் ரைட் அவ்விடத்துக்கு வந்தார். ரைட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நிலத்தின் நில அளவைப் படமொன்று வரையப்பட்டது. பிட்ஸ்பர்க்கிலிருந்த பொறியியல் நிறுவனம் ஒன்றினால் அளந்து வரையப்பட்ட அப்படம் அந் நிலத்தில் இருந்த பாறைகள், மரங்கள், ஏற்ற இறக்கங்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் தெளிவாகக் காட்டியது. இந்த நேர்த்தியான வடிவமைப்புப் பணியைச் செய்து முடிக்க மட்டும் ரைட்டுக்கு 9 மாதங்கள் பிடித்தன. 1935 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இவ்வெண்ணங்களை விளக்கும் வரைபடங்கள் காஃப்மனிடம் கொடுக்கப்பட்டன. அப்போதுதான், தான் நினைத்தது போல் வீடு, அருவிக்குக் கீழ் இராமல் அருவியின் மேல் இருந்தது காஃப்மனுக்குத் தெரிய வந்தது.
ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. கட்டிடத்தின் அடித்தளம் உறுதியாக இருக்கும் வகையில், பிரம்மாண்ட பாறைகளால் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தின் பெரும் பகுதிச் சுவர்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தை வடிவமைக்கச் செங்கல்லுக்குப் பதிலாக முழுமை பெறாச் சிறு பாறைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் அருவி பாய்ந்தோடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்தக் கட்டிடத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
1963 ஆம் ஆண்டு வரை பாலிங்வாட்டரில் காஃப்மான் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதன் பிறகு, ஃபாலிங்வாட்டர் வீடு பென்சில்வேனியா பாதுகாப்பு அறக்கட்டளைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடு அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஃபாலிங்வாட்டரை இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்தக் கட்டிடத்தில் தங்கி இயற்கைச் சூழலைக் கண்டுகளிப்பதற்காகச் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.