துண்டுப் பிரசுரம் என்ற தொல்லை!

Pamphlets
Pamphlets
Published on

காலையில் சுமார் ஆறு மணிக்கு வீட்டின் முன்வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த நான், சில தாள்கள் விசிறியடிக்கப் பட்டிருந்ததைக் கண்டேன்.

முந்தின நாள் இரவில் அந்த முன்கதவைப் பூட்டிக் கொண்டு உறங்கப் போனபோது அத்தனை தாள்களைப் பார்க்கவில்லையே என்ற சந்தேகத்துடனும் இத்தனைக் குப்பைகளை யார் வீசியிருப்பார்கள் என்று யோசித்தபடியும் ஒரு தாளை எடுத்துப் படித்தேன். அது ஒரு விளம்பரம். ஏதோ ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் கணினி பயிற்சி அளிப்பதாகத் தெரிவித்திருந்த விளம்பரத்தின் துண்டு பிரசுரம். 

அன்று அதிகாலையில் இந்த கைங்கர்யம் நடந்தேறியிருக்கிறது. கொஞ்சம் தள்ளி வந்து, எட்டி, பக்கத்து வீட்டைப் பார்த்தேன். அங்கும் இதேபோல காகிதச் சிதறல்கள். ஆக, வீடுதோறும் தன் நிறுவனம் பற்றிய செய்தியை அதன் உரிமையாளர் விளம்பரப்படுத்தியிருக்கிறார் என்று புரிந்தது. 

அதாவது அவர் யாராவது சிலரை இதுபோல துண்டு விளம்பரப் பிரசுரங்களை விநியோகிக்க நியமித்திருந்திருப்பார். அந்தப் பொறுப்பை மேற்கொண்டவர்கள், ஏதோ வேலையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், தன்னிடம் இருக்கக்கூடிய துண்டு பிரசுரங்கள் எல்லாவற்றையும் விநியோகித்து விட்டதாகக் கணக்குக் காட்டுவதற்கு எடுத்துக்கொண்ட எளிய வழிமுறைதான் இது என்று எனக்குப் பட்டது. ஒவ்வொருவருக்காகக் கொடுத்துக் கொண்டே வந்தால், அநேகமாக மாலைவரை தன்னிடமுள்ள ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அவர் விநியோகிக்க வேண்டியிருக்கும். அதைவிட, கொத்து கொத்தாக ஒரு சில தெருக்களில் ஒருசில வீடுகளில் வீசி எறிந்து விட்டு, எடுத்துக் கொண்ட வேலையை ஒருமாதிரியாக முடிந்துவிட்ட திருப்தியில் கைகளைத் தட்டிக் கொண்டு அவர் போயிருப்பார்.

அந்த விளம்பரத்தைப் படித்து விவரம் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை விட வீட்டு முன் பகுதி இப்படி குப்பையாக ஆகிவிட்டது என்னைக் கோபம் கொள்ள வைத்தது. குறிப்பிட்ட நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு பதிலளித்தவரோ மிகவும் பணிவாக எனக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அந்த நிறுவனம் பற்றிய தகவல் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி துண்டு பிரசுரங்களை அச்சடித்து, பிரத்யேகமாக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதை நிறைவேற்ற முயன்றிருக்கிறார் அவர். இந்த சேவைக்காக அவர்களுக்கு ஊதியமும் தந்திருக்கிறார். ஆனால் பணம் பெற்றுக் கொண்டவர்கள், அதற்கு உரிய வகையில் பணியாற்றாமல் இப்படி ஓரிரு தெருக்களுக்குள்ளேயே தம் வேலையை முடித்துவிடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் தெரிவித்துக் கொண்டார். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை – லாபம்! (ஸ்டாக் மார்க்கெட் கதை)
Pamphlets

இப்படித் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்வதில்  சில நிறுவனங்கள் வேறு சில வழிமுறைகளைக் கையாளுகின்றன. அவற்றில் ஒன்று செய்தித் தாள்களில் செருகப்பட்டு அனுப்பப்படும் முறை. இதற்காக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம், விநியோகத்துக்காகப் பகுதிவாரியாக செய்தித் தாள்கள் பிரித்து அடுக்கப்படும் பகுதிக்கு விளம்பரதாரர்கள் போகிறார்கள். அங்கே நூற்றுக் கணக்கில் துண்டு பிரசுரங்களை செய்தித்தாள் முகவர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் வேலையாட்களை வைத்து ஒவ்வொரு செய்தித் தாளிலும் ஒரு விளம்பரத் துண்டை செருகி வைத்து, அந்த செய்தித் தாள்களை தாம் வழக்கமாக அனுப்பி வைக்கும் வீடுகளுக்கும், பிற இடங்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். 

இது தவிர, பொதுமக்களின் பல வசதிகளில் இந்த விளம்பரம் குறுக்கிட்டு சிரமப்படுத்துகிறது என்பதும் உண்மை. பேருந்து நிறுத்தங்களில் உள்ள நிழற் குடைகளில் அங்கே வந்து நிற்கும் பேருந்துகளின் தட எண்கள், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் எதுவும் தெரியாதபடி அந்தத் துண்டு பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - வித்தியாசமான ஒப்பந்ததாரர்!
Pamphlets

சில வருடங்களுக்கு முன்புவரை புறநகர் ரயில் பெட்டிகளில் இதுபோல துண்டுப் பிரசுரங்களை ஒட்டி அதன் உட்புற அழகையே சிலர் கெடுத்தார்கள். அதாவது ரயில்வே நிர்வாகத்தின் சில எச்சரிக்கைகளையும், யோசனைகளையும் எழுதி வைத்திருக்கும் பகுதிகளை அந்தக் காகிதத் துண்டுகள் முற்றிலுமாக மறைத்திருந்தன. அவ்வப்போது பணியாளர்களை வைத்து அவற்றைக் கிழித்து அப்புறப்படுத்தினார்கள் ரயில்வே அதிகாரிகள். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் போகவே, அந்தத் துண்டுகளில் அச்சடித்திருந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நேரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இப்போது ரயில் பெட்டிகள் சுத்தமாகவும், சுதந்திரமாகவும் பயணிகளுக்கான தம் கடமைகளை நிறைவேற்றுகின்றன. 

நகரச் சுவர்களிலும் இந்த அநாகரிகம் அகற்றப்பட்டு வருகிறது என்பது ஆறுதலான செய்தி. பொதுச் சுவர்களில் அழகு ஓவியங்கள் கண்களைக் கவர்கின்றன.  அழகை சிதைப்பது என்ற மனோபாவத்தை முற்றிலும் நீக்கினால், பசுமை பொங்கும் சிங்காரச் சென்னையை விரைவில் நம்மால் காண இயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com