

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு... வண்டி எண்...... சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாக வந்து கொண்டு இருக்கிறது..' என்ற அறிவிப்பை பல நேரம் முக்கிய ரயில் நிலையங்களில் கேட்டிருப்போம். அவசரமாக ஊருக்கு செல்லும் போது இதுபோன்ற அறிவிப்புகள் நமக்கு எரிச்சல் ஊட்டும். ஏன் தாமதம்.. என்று முறையான விளக்கம் யாரும் கொடுக்க மாட்டார்கள்.
தகவல் அறிவித்தவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து விட்டோம் என்று நினைத்து அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள்.
"அட என்ன இன்னைக்கு ரயில் கரெக்டா டயத்துக்கு வந்துடிச்சு...?
"நீ வேற... அது நேத்து வரவேண்டிய ரயில்... 24 மணி நேரம் தாமதம்..."
- 60 களில் இப்படிப்பட்ட ஜோக்குகள் வார இதழ்களில் நிறைய வந்தன.
10 மணிக்கு அலுவலகம் ஆரம்பமாகும் என்றால் சரியாக 10.20 மணிக்கு வருபவர்கள் உண்டு. தினசரி தாமதமாக ஒருவர் அலுவலகம் வந்தால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். எப்பவாது லேட்டா வந்தவரை 'என்ன இன்னைக்கு லேட்டு?' - உயர் அதிகாரி கேள்வி கேட்டால், 'கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சார்..' -இப்படிப்பட்ட பதில் பெரும்பாலும் வரும்.
"பூவை பறிச்சிட்டா மட்டும் வாடி விடாது. செடியிலே விட்டு வச்சாலும் வாடிவிடும்" - புதிய வார்ப்புகள் படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற வசனம். உரிய காலத்தில் எல்லாம் செய்து முடிக்க வேண்டும். எங்கும் எதிலும் தாமதம் கூடாது என்பதையே இது வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு நாளும் சில விஷயங்களுக்காக நாம் காத்திருக்கிறோம். காலையில் பால் வாங்குவதில் தொடங்கி குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் வேன்/பஸ் எல்லாவற்றிக்கும் காத்திருக்கிறோம்.
இதில் எது ஒன்று தாமதம் ஆனாலும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை, 'காலையில டென்ஷன் ஆயிடுச்சு'. அவரவர்களுக்கு தகுந்தது போல் வெவ்வேறு வகையான காத்திருப்புகள்.
"தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா... கண்ணா உன் தரிசனம் கிடைக்காதா..." - காதலில் தாமதம் வரும் போது இப்படி ஒரு பாடல் பிறக்கும்.
"பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி..." திருமணம் தாமதமாகும் ஒரு பெண்ணின் ஏக்கத்தை பிரிதிபலிக்கும் பாடல் இது.
"மீரா பாடிய பாடலை கேட்க கண்ணன் வரவில்லையோ..." இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் தாமதத்தின் வலியை எடுத்துரைக்கும். கவிஞர் வாலி அவர்கள் எழுதிய மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
"சாலை எங்கள் பாடசாலை, வேலை தேடல் எங்கள் வேலை." நல்ல வேலைக்காக காத்திருக்கும் இளைஞனின் பாடல் இது. தாமதத்தின் வேதனையை மறக்க பாடும் பாடல்.
தங்கள் படைப்புகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்து விட்டு நீண்ட நாட்கள் காத்திருப்பார்கள் புதிதாக எழுத வந்திருப்பவர்கள். பிரசுரம் ஆகும் வரையில் நிறைய கனவுகள் வந்து போகும். வீடு, அஞ்சல் அலுவலகம் என்று அலைந்து கொண்டே இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த பத்திரிக்கையில் இருந்து கடிதம் வரும்.
ஆவலோடு பிரித்துப் பார்த்தால் 'தங்கள் படைப்பை பிரசுரிக்க இயலாமைக்கு....' தாமதமாக வருந்தி பதில் அனுப்புவார்கள். 90 ஸ் கிட்ஸ் படைப்பாளிகள் அனுபவித்த தாமதம் நீளமானது. இப்போது மெயில் மூலமே எல்லாம். இப்போதும் அது இருந்து கொண்டே தான் இருக்கிறது.
"மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே."
தாமதம் தொடர்பாக புறநானூறு பாடல் ஒன்றில் ஔவையார் இப்படி பாடியுள்ளார். அதியமான் நெடுமான் அஞ்சியை பாடி பரிசு பெற சென்றபோது, அவரை வாயிற்காவலன் உடனே உள்ளே செல்ல அனுமதிக்காமல் தாமதப்படுத்தினான்.
அப்போது 'வாயிலோயே வாயிலோயே..' எனத் தொடங்கும் பாடலை பாடினார்.
அந்த பாடலின் இறுதியில் வரும் வரிகள் அவை. "தச்சு திறமை உள்ளவர்கள் தங்கள் தொழிலை செய்வதற்கு காட்டில் எப்போதும் ஒரு மரத்தை கண்டுபிடிப்பார்கள். அது போல கவிஞர்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள்.." என்பதே இதன் பொருள். தாமதம் சங்க காலத்திலும் இருந்தது என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்.
'மத கஜ ராஜா' என்ற பெயரில் ஒரு திரைப்படம் சுந்தர்.சி அவர்கள் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது. பல காரணங்களால் தாமதமாகி 13 ஆண்டுகள் கழித்து 2025 பொங்கல் விடுமுறை காலத்தில் வெளியாகி வெற்றி பெற்றது!
திரைப்பட வரலாற்றில் இவ்வளவு தாமதமாக வெளிவந்த படம் இதுவாக தான் இருக்கும்.
"அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன். தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை, கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்..."- தாமதம் மிகவும் கொடுமையானதாக சிலருக்கு அமைந்துவிடும்.
உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லாத வயதான பாட்டி ஒருவர் தன் மகளின் வாரிசு - பேத்தி என்றாவது ஒரு நாள் வந்து அழைப்பு மணி அடிப்பாள் என்று காத்திருக்கிறாள்.
தாமதம் மாதங்கள் தாண்டி வருடங்கள் ஆகிப்போனது. திடீரென்று ஒரு நாள் அழைப்பு மணி ஒலிக்க வந்து சேர்கிறாள் அந்த பேத்தி. 'பூவே பூச்சூட வா' படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் எவ்வளவு பெரிய சோகத்தை நமக்கு சொல்லி இருக்கிறது. வந்த பேத்தி உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். அவள் மீண்டும் வந்து அழைப்பு மணி அடிப்பாள் என்ற நம்பிக்கையோடு படம் முடியும்.
தாமதம் தொடர்பான சில பழமொழிகள்/ பொன்மொழிகள்:
'BETTER LATE THAN NEVER' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒரு காரியம் செய்யப்படாமல் இருப்பதை விட தாமதமாக நடப்பது மேல் என்பதே இதன் பொருள்.
"BETTER BE Mr.LATE THAN LATE Mr. - நெடுஞ்சாலைகளில் இந்த வாசகத்தை பார்க்கலாம். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி சொல்வதே இதன் உள்ளார்ந்த அர்த்தம்.
"JUSTICE DELAYED IS JUSTICE DENIED" - நீதித்துறையில் பயன்படுத்தப்படும் மிக மிக முக்கியமான நடத்தை விதி. விரைந்து செயல்பட்டு உரிய நீதியை பாதிக்கப்பட்டவருக்கு தாமதமில்லாமல் வழங்க வேண்டும்.
சில இடங்களில் தாமதம் அவசியமாகிறது. சில இடங்களில் தாமதம் தேவையற்றதாகி விடுகிறது. தாமதம் எப்போதும் நம்முடன் இருப்பதுதான். அதை தட்டி தூங்க வைத்து செயல்பட வேண்டும். சில சிக்கலான விஷயங்கள் நம்மை நோக்கி வரும் போது அந்த தாமதம் விழித்துக் கொள்ளும். அதை தட்டி எழுப்புவது நம் மூளை தான்.