
இந்திய நாடு வல்லரசு ஆகப் போகிறதென்று வாய்ஜாலம் காட்டுகிறார்கள். பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தி விட்டது என்கிறார்கள். நாட்டு மக்களெல்லாம் நல்வாழ்வு பெற்று விட்டதாக ஏகமான பீற்றலுக்கு இங்கு ஏதும் குறைவில்லை. ஆனாலும் நடப்பதென்னவோ, ஏறுக்கு மாறுதான்!
கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.
1. விமான நிலையத்தில் உணவுப் பொருட்களின் விலை மட்டுமே உயரத்தில் இருந்தது போய் ‘மீட் அன்ட் க்ரீட்’ சேவை (Meet & Greet service), இவற்றைச் சேவை என்று சொல்வதே தவறென்றே தோன்றுகிறது! இது வரை ஒரு ட்ராலிக்கு ரூ 500/-வாங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென அதனை டபுளாக, அதாவது ரூ 1000/- மாக உயர்த்தி விட்டார்கள்.
அதாவது நம் லக்கேஜை ட்ராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்து கவுண்டரில் விடுவார்கள். ரூ 500 கம்பனிக்குப் போய் விடுமென்று சொல்லி, தள்ளி வருபவர்கள் தலையைச் சொறிவார்கள். சிலர் 100, 200 என்று நாம் கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். பலரோ மீண்டும் பேரம் பேசுவார்கள்.
சற்றே நல்ல மனம் கொண்ட ஒரு ஊழியர் சொன்னார்! ”சார்! முன்பு ஏஏஐ (AAI-Airports Authority of India) கண்ட்ரோலில் இருந்த இதை, இப்பொழுது கேரள நிறுவனம் ஒன்றுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். அவர்கள் ரேட்டைக் கூட்டி விட்டார்கள்!” என்று. இது எவ்வளவு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. ரேட் கூடி விட்டது மட்டும் மெய். ”நீங்கதான் சார் இதைப்பற்றிக் கேட்கறீங்க! மற்ற எல்லாரும் கேட்டதைக் கொடுத்து விட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க!” என்றார் அந்நிறுவன சூபர்வைசர். தவறு எங்கிருக்கிறது என்பதை அப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. சிந்தியுங்கள் மக்களே!
2. ட்ராபிக் ஜாமை எளிதாக்கப் பல்லாவரத்தில், ஜிஎஸ்டியில் மேம்பாலம் கட்டினார்கள்.
விமான நிலையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைந்து செல்ல என்று கூறி, 3 லேன் போட்டார்கள். போக மட்டுமே என்றும் கூறினார்கள். ஆனால் இப்பொழுதோ அதை இரண்டாகப் பிரித்து, போக-வர என்றாக்கி, ஒன்றரை ஆக்கி விட்டார்கள். எந்த பர்பஸுக்காகப்போட்டார்களோ, அது செர்வ் ஆகவில்லை. மீண்டும் ஜாம்தான்! நாம்தான் எதையும் ஏற்றுக்கொள்வோமே! சிந்தியுங்கள் மக்களே!
3. வண்டலூர் மிருகக் காட்சி சாலை உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்கூட பார்க்க ஆசைப்படும் இடம். வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் மாலை சுமார் 4 மணிக்கு உள்ளே செல்ல முயன்றோம். வாசலிலேயே காரை மறித்தார் பெயர் சொல்லப் பயந்த காவலாளி ஒருவர். ”சார்! மூடப்போற நேரம். நீங்க போயி பெரிசா எதையும் பார்க்க முடியாது. பாட்டரி காரும் இல்லை!” என்றார்.
“இல்லையா! வெப் சைடில் 6 மணி வரை என்று போட்டிருக்கிறதே!” என்றோம்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்றார்.
கவுண்டரில் இருந்தவரும் காவலாளி சொன்னதையே சொன்னார். நாங்கள் பாட்டரிக் கார் ஒன்றை முழுதாகவே வாடகைக்குக் கேட்டும் “இல்லை” என்ற பதிலே வந்தது.
வெப் சைடில் 6 மணி வரை என்று போட்டிருக்கிறீர்களே என்றார் ஃபாரின் நண்பர்!
“அப்படியெல்லாம் இருக்காது சார்!” என்றவரிடம், வெப் சைடை ஓபன் பண்ணிக் காட்ட, ரொம்பவும் சர்வ சாதாரணமாக “அப்டேட் பண்ணல போல” என்றார்! சரி என்று திரும்பி விட்டோம். கூட வந்த குழந்தைகள் ஏமாற்றத்தில் அழ ஆரம்பித்து விட்டனர். சிந்தியுங்கள் மக்களே!
4. ஜிஎஸ்டி என்றவுடன் ஹோட்டல்கள் நடத்துபவர்கள், ரெஸ்டாரண்ட்காரர்கள் என்று அனைவரும் வெகுண்டு எழுவது போல நடித்தார்கள். பாலச்சந்தர் சார் படமொன்றில், வரும் ஒரு காட்சிதான் இங்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஐந்தாறு பிள்ளைகள் உள்ள அந்த வீட்டில் மூத்தவன் அடுத்தவனை அடிக்க, அவன் கீழுள்ளவனை அடிக்க, அப்படியே போய், கடைசிப் பையனும் அடி வாங்குவான். அங்காவது ஒவ்வொருவரும் சிறு அடி வாங்குவார்கள். இங்கோ, எல்லா அடியும், இடியும் கன்ஸ்யூமர் ஆகிய கடைசிப் பிள்ளையாகிய நம் தலையில்தான்! வரியில் இருவகை உண்டு. நேர் மற்றும் மறைமுக வரி. (Direct & Indirect tax) நேர்முக வரியை மற்றவர்கள் தலையில் கட்ட முடியாது.
ஓட்டல்களின் ஒரு நாளைய அல்லது மாத டர்ன் ஓவரைக் கணக்கில் எடுத்து அவர்களுக்கு நேர்முகவரி விதித்து, அதீத லாபம் பார்க்கும் அவர்களைக் கட்டச் சொல்வதுதானே முறை! ஏன் நம் தலையில் கட்ட அனுமதிக்க வேண்டும்? சிந்தியுங்கள் மக்களே!
5. கார் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க ஆர்வம் காட்டும் அரசியலார், அவற்றை அதிக அளவில் வாங்குவதற்கும் வங்கி லோன்கள் வழங்குகின்றனர். ஓகே! நல்லதே! போகும் இடங்களில் காரை நிறுத்தும் போதுமான பார்க்கிங் வசதிகள் வேண்டாமா? எத்தனை பேர் காரை வாங்கி, பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வீட்டிலேயே போர்த்தி வைத்துள்ளனர் தெரியுமா? இந்த அவலத்தைப் போக்க அரசுகள் முன்வர வேண்டாமா? சிந்தியுங்கள் மக்களே!
6. ரூபாய் பத்துக்கும் இருபதுக்கும் சாலையோரங்களில் கிடைக்கும் பாப்கார்ன், தியேட்டருக்குள் நுழைந்து விட்டால் 600, 700 என்று ஆகிப்போகிறது எவ்வாறு?
யாராவது ஆராய்ந்தது உண்டா? அப்படி என்னதான் அதற்கு அவர்கள் மெருகேற்றுகிறார்கள்? சிந்தியுங்கள் மக்களே!