திரைப்பட நகைச்சுவை காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது அரசுப் பேருந்து ஒன்றின், பின்னால், ‘இது உங்கள் சொத்து, சேதம் விளைவிக்காதீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவர் வாசகத்தின் முதல் பகுதியைப் படித்துவிட்டு அந்தப் பேருந்தை இன்னொருவருக்கு விற்க முற்படுவார். அதாவது அறிவித்திருப்பதன்படி அந்தப் பேருந்து அவருடைய சொத்தாம், அதனால் விற்கிறாராம்!
அது ரீலு.. ஆனால் ரியலில் சென்னை நகரில் சில இடங்களில் பொதுசொத்துகளைக் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் தனக்குரியதாக அபகரித்துக் கொள்ளும் அநாகரிகச் செயல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
வடசென்னைப் பகுதியில் ஓரிடத்தில், தெரு விளக்குகள் தனி நபர்களின் வீடுகளுக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அநியாயத்தை சில செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தன. குறிப்பிட்டப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கே போக்குவரத்துக்கென 30 அடி அகலத்தில் சாலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. பாதசாரிகள் வசதிக்காக சாலையின் இரு புறங்களில் நடைபாதைகளும் இருக்கின்றன. ஆனால் சாலையின் இரு புறங்களிலும் உள்ள வீட்டுச் சொந்தக்காரர்கள் ஆளாளுக்கு சில அடிகள் என்ற கணக்கில் ஆக்கிரமித்து தம் வீட்டை விரிவாக்கம் செய்தார்கள். இதனால் நடைபாதையில் இருந்த தெருவிளக்குகள் அந்த வீட்டுக்குள் சென்றுவிட்டது! இதனால் இரவில் சாலை ஒளி இழக்க, குறிப்பிட்ட வீடுகள் ஒளிர்கின்றன! என்ன அக்கிரமம் இது!
அதேபோல இன்னொரு பகுதியில் மாநகராட்சி பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ஒரு அம்மன் சிலையை அந்தப் பூங்காவிற்குள் வைத்தனர். நாளாக ஆக, கோயில் பகுதி அதிகரித்து பூங்கா சுருங்கி விட்டது. பூங்காவுக்கு முன் வைக்கப்பட்டிருந்த தெருப் பெயர்ப் பலகை மற்றும் பூங்காவினுள் கணிசமான ஒரு பரப்பு இரண்டும் முற்றிலும் காணாமல் போய்விட்டன!
இன்னொரு வேடிக்கைச் சம்பவம் - ஒருவர் வீடு கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்போதைக்கு சைக்கிள் அல்லது இரு சக்கர மோட்டார் வாகனம் மட்டுமே வைத்திருப்பார். ஆனால் நாளாவட்டத்தில் கார் வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டிருக்கும். ஆனால் காரை எங்கே நிறுத்துவது? இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு மட்டுமே முன்னால் இடம் விட்டு அவர் வீடு கட்டியிருந்தார். இப்போது என்ன செய்வது? உடனே அவர் தன் வீட்டை ஒட்டி உள்ள நடைபாதையை ஆக்கிரமிக்கிறார். அதாவது, காரை உள்ளே நிறுத்தி, அது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் சுமார் நான்கடி நீளத்துக்கு ‘ப’ வடிவில் பெட்டி போன்ற இரும்பு கம்பிச் சுவர் ஒன்றை அமைத்துக் கொள்கிறார். அதாவது நடைபாதையை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தன் உரிமையாக அவர் கருதுகிறார் போலிருக்கிறது!
வேறு சிலர், தம் வீட்டுக்குள் சுவரை ஒட்டி செடிகள் வளர்க்காமல், அதற்கு இடமில்லாததால், வெளியே நடைபாதையில் இரண்டு அல்லது மூன்றடிக்கு, பூச்செடிகளையும், வேறு சில செடிகளையும் வளர்க்கிறார்கள். இவர்கள் சுற்றுச் சூழலைக் காப்பவர்கள் போலத் தங்களைக் காட்டிக் கொண்டாலும், நடைபாதையை ஆக்கிரமிக்கத்தானே செய்கிறார்கள்! இதுவும் தவறுதானே?
வேறு சிலர் தம் வீட்டிற்குள்ளேயே கார் வைத்துக் கொள்ள வசதியை உருவாக்கிக் கொண்டாலும், அந்தக் கார் வெளியே வருவதற்காக ஒரு சாய்வுப் பாதையை வீட்டு முன் அமைத்துக் கொள்கிறார்கள். இந்த சாய்வுப் பாதை நடைபாதையையும் மீறி சாலையிலும் நீண்டு விடுவது இன்னொரு அக்கிரமச் செயல்.
இவர்கள் மேல் வழக்குப் போடுவதும், தண்டனை கொடுப்பதும் எந்த அளவுக்கு இத்தகைய ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் தாமாக உணர்ந்து, பொது நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற ஆக்கிரமிப்புகளிலிருந்து விலகி இருப்பதுதான் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கு அவர்கள் செய்யும் சரியான சேவை என்று சொல்லித்தான் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ள வேண்டும்.