
நாலு வகை கொழுக்கட்டைகள்:
1. தேங்காய் பால் கொழுக்கட்டை
தேவை:
பச்சரிசி - 2 கப்
தேங்காய் பால் - 2 கப்
வெல்லத்தூள் - ஒன்றரை கப் உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சரிசியை நீரில் ஊற வைத்து, ஊறியதும் நீரை முழுவதும் வடித்து விட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக, மிருதுவாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, மாவை போட்டு கிளறி எடுக்கவும். மாவு வெந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு பெரிய காகிதத்தில் பரவலாக போட்டு வைக்கவும். தேங்காய் பாலில் வெல்லத்தூள், ஏலக்காய் தூள் கலந்து கொதிக்க வைத்து, ஒரு கொதி வந்ததும், கொழுக்கட்டை உருண்டைகளை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும். சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை ரெடி.
*******
2. ராகி கொழுக்கட்டை
தேவை:
ராகி - 2 கப்
நெய் - 1ஸ்பூன்
தண்ணீர் - ஒன்றரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ராகியை வறுத்து அரைத்து மாவாக்கவும். அதில் உப்பு கரைத்த நீரை தெளித்து, பிசிறி கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்து, நீராவியில் வேக வைத்து எடுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறினால், சுவையான, சத்தான ராகி கொழுக்கட்டை தயார்.
********
3. பருப்பு கொழுக்கட்டை
தேவை:
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 5 ஸ்பூன்
பச்சரிசி மாவு - 2 கப்
வர மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
இரண்டு பருப்புகளையும் ஊற வைத்து நீரை முழுவதும் வடித்து விட்டு உப்பு மிளகாய் இஞ்சி துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இரண்டு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் பச்சரிசி மாவை போட்டு கட்டி இல்லாமல் கிளறி எடுத்து வைக்கவும். இந்த மாவில் கொழுக்கட்டை சொப்புகள் பிடித்து, அரைத்த பருப்பு கலவையை உள்ளே பூரணமாக வைத்து, இட்லி தட்டில் வைத்து, நீராவியில் வேக வைத்து எடுத்தால், சுவையான, சத்தான பருப்பு கொழுக்கட்டை தயார்.
*******
4. புழுங்கல் அரிசி கொழுக்கட்டை
தேவை:
புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய் துருவல் -1 கப்
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு - 3, வர மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற போட்டு நீரை முழுவதுமாக வடித்து விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அரிசி மாவில் கொட்டி கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து, முக்கால் பதம் வேக வைத்து இறக்கி வைக்கவும். அதைக் கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் நிரப்பி, நீராவியில் வேகவைத்து எடுக்கவும்.
******