
கடந்த மார்ச் மாதம் 27 ம்தேதி, சர்சவதேச தியேட்டர் தினம். அன்று, புகழ் பெற்ற நாடகக் கலைஞரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான, மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்களின் மகளும், கோமல் தியேட்டர் நாடகக் குழுவின் நிறுவனருமான, தாரிணி கோமல், நாரதகான சபாவில், மிக வித்தியாசமான நிகழ்ச்சியை வடிவமைத்து வழங்கினார்.
“தெருக்கூத்து முதல் தற்கால நாடகம் வரை “ என்ற தலைப்பில்,சென்னையின் பல சபாக்களையும், நாடகக் குழுக்களையும் இணைத்து, தமிழ் நாடக மேடைகளில் புகழ்பெற்ற அத்தனை மேதைகளுக்கும் மரியாதை செய்த அற்புதமான நிகழ்ச்சி இது.
இதற்கான அழைப்பிலேயே, சங்கரதாஸ் சுவாமிகள் முதல், தற்கால மேடை ஜாம்பவான்கள்வரை அனேகமாக அனைவரின் தெளிவான புகைப்படங்கள் இடம் பெற்று சிறப்பாக இருந்தது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக, மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, இதற்கான ஸ்க்ரிப்டை தயார் செய்திருக்கிறார் தாரிணி.
நாடக உலகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார் உட்பட, இருபதாம் நூற்றாண்டு வரை, நாடகக்கலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞர்களைப் போற்றி நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி இது.
அன்று அரங்கம் நிறைந்து வழிந்தது. சேர்கள் நிரம்பியதால் வழியெங்கும் நின்று ரசித்தார்கள்
அவர்களின் புகழ்பெற்ற நாடகங்களிலிருந்து சில காட்சிகள், சில மணித்துளிகள் மேடையில் இன்றைய பிரபல குழுக்களால் நடித்துக்காட்டப்பட்டன.
தமிழ் நாடகக்கலையின் பரிணாம வளர்ச்சியை, திரையில் LED Projection மூலம் திரையிட்டு, ஒவ்வொரு கலைஞரும், நாடகமேடைக்கு தம் குழுவினருடன் எப்படி சிறப்பான பங்கைத் தந்திருக்கிறார்கள் என்று சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் தாரிணி.
உரைநடை பாணியில் நாடகத்தைக் கொண்டு வந்தவர், பம்மல் சம்பந்த முதலியார், பிரம்மாண்டமான செட் அமைத்தவர் நவாப் ராஜமணிக்கம் பிள்ளை.
சுதந்திரப் போராட்டத்தின்போது, தேசபக்தியைத் தூண்டும், எழுச்சி தரும் வகையில் பல நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன. அவை ஆங்கிலேய அரசால் தடை செய்ப்பட்டன. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
என்.எஸ். கிருஷ்ணன், அண்ணாதுரை , கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் நாடகங்கள் சமூக நீதியை வலியுறுத்தின.
கும்பகோணம் பாலாமணி அம்மாள் என்ற பெண்மணி, பெண்களை வைத்து “டம்பாச்சாரி போன்ற நாடகங்களை” வெற்றிகரமாக நடத்தினார்.(அதைப் பார்க்க நிறையப் பேர் ரயிலில் வந்ததால் அந்த ரயிலுக்கே பாலாமணி எக்ஸ்ப்ரஸ் என்று பெயர் வந்ததாம்.)
நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் தயாரிப்பில் வரலாற்றைச் சொல்லும் “சாணக்கிய சபதம்”, “மாலிக்காபூர்” போன்றவை இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டிய தகவல்கள்.
சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய ஞானப்பழத்தைப் பிழிந்து பாடல் சில நிமிடங்கள் கே,பி. சுந்தராம்பாளின் குரலில் ஒலித்த பிறகு, நவராத்திரி திரைப் படத்தில் இடம் பெற்ற சிவாஜிகணேசன் சாவித்திரி ஆடிய சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய சத்தியவான் சாவித்திரி தெருக்கூத்தை முதல் நிகழ்ச்சியாக கோமல் தியேட்டர் குழுவினர் நடத்திக்காட்டினர்.
உண்மையிலேயே சிவாஜியும் சாவித்திரியும் மேடையில் தோன்றியது போலவே அனைவரும் உணர்ந்தார்கள் என்பது அரங்கம் அதிர்ந்த, கூடவே போட்ட, தாளங்கள், கைதட்டல்கள் என ஆரவாரத்திலேயே தெரிந்தது.
90 நாடகங்களுக்குமேல் எழுதி இயக்கிய பம்மல் சம்பந்த முதலியாரின் சங்கீதப் பைத்தியம் நாடகத்திலிருந்து நகைச்சுவைக் காட்சிகளை ஷ்ரத்தா குழுவினர் வழங்கி அவையை கலகலப்பாக்க, கோமல் தியேட்டர்ஸ் வழங்கிய வாஞ்சிநாதன் நாடகக்காட்சி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட அந்த வீரர்களின் தேசபக்தியை அற்புதமாக வெளிப்படுத்தியது.
“ராமன் எத்தனை ராமனடி” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வீரசிவாஜியாகத் தோன்றிய காட்சியை கோமல் தியேட்டர்ஸ் விக்னேஷ் செல்லப்பன், நடித்து மெய்சிலிர்க்க வைத்தார்.
எம்.ஆர். ராதா நடித்த ரத்தக்கண்ணீர் திரைப் படத்திலிருந்து ஒரு காட்சி காணொளியாக திரையிடப்பட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி ஆர்., சிவாஜி கணேசன் போன்ற பல நடிகர்கள், நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்தவர்கள்.
டி. கே.எஸ் சகோதரர்களின் ஒளவையார் நாடகத்தில் ஒளவையாராக நடிப்பதற்காக தன் பற்களையே மாற்றினாராம், டி.கே.ஷண்முகம். (அவர் பெயரால் சென்னையில் ஒரு சாலையின் பெயர் அவ்வை ஷண்முகம் சாலை).
எஸ். வி. சஹஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜ், பல நடிகர்களின் பயிற்சிப்பட்டறையாக இருந்தது. முத்துராமன், தேவிகா, பி ஆர். துரை போன்ற நடிகர்கள், இங்கே அறிமுகமானவர்கள்.
விசு நாடக மேடையில் அருமையான குடும்ப நாடகங்களை அளித்தவர், அவர் எழுதிய “பட்டினப்பிரவேசம்” மூலம் திரைப்பட நடிகரானார் டெல்லி கணேஷ்.
வி.எஸ். ராகவன் பல மேடை நாடகங்களை வெற்றிகரமாக அரங்கேற்றியவர்.
கே.எஸ். நாகரஜனின் கலா நிலையம் குழுவினரின் நாடகங்கள், மற்றும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ராது, மௌலி ஆகியோரின் புகழ்பெற்ற நாடகங்கள், அவற்றில் நடித்துப் பெயர் பெற்ற நடிகர்கள், பாம்பே ஞானம் அவர்களின் நாடகங்கள்.
இவ்வாறாக, நாடக மேடையின் பரிணாம வளர்ச்சி பற்றி பல அரிய தகவல்களை, திரையில் ஒளிர்ந்த படங்களின் பின்னணியில் சிறப்பாக வழங்கினார் தாரிணி.
குடந்தை மாலியின் “நம்மவர்கள்” நாடகக் காட்சியை மாலி ஸ்டேஜ் வழங்கினார்கள்.
பூர்ணம் விஸ்வனாதன் இயக்கி, சுஜாதா எழுத்தில், “கடவுள் வந்திருந்தார்” நாடகத்திலிருந்து ஒரு காட்சியை குருகுலம் குழுவினர் சிறப்பாக நடித்தனர்.
ஆர்.எஸ். மனோகரின் சாணக்கிய சபதம், சோ, அவர்களின் “முகமது பின் துக்ளக்” நாடகம் இவற்றிலிருந்து காட்சிகள் சில நிமிடங்கள் காணொளியாக திரையிடப்பட்டன.
கோமல் சுவாமிநாதன் எழுதி இயக்கிய, மிகப்பிரபலமான நாடகம் ”தண்ணீர் தண்ணீர்” இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களால் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.
அதிலிருந்து உணர்ச்சிமயமான ஒரு காட்சியை கோமல் தியேட்டர்ஸ் குழுவினர் நடித்தனர்
ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் சார்பாக, காத்தாடி ராமமூர்த்தியின் “ஹனி மூன் கப்பிள்” நாடகம் காத்தாடி ராமமூர்த்தி மேடைக்கு வரும்போதே பலத்த கைதட்டல். இன்னும் கொஞ்ச நேரம் நடிக்க மாட்டாரா என்று ஆடியன்ஸை நினைக்க வைத்த காட்சி.
நாடகப் ப்ரியாவின் எஸ். வி. சேகர், “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி” நாடகத்திலிருந்து ஒரு காட்சியை மேடையில் தோன்றி நடித்தபோது அரங்கமே கலகல.
கிரேசி மோகனின் “மீசை ஆனாலும் மனைவி” நாடகக்காட்சி, மாது பாலாஜி நடிப்பில் மேடையேறிய போது, சிரிப்பில் அரங்கமே அதிர்ந்தது.
Y.G, பார்த்தசாரதி அவர்கள் நாடக மேடைக்கு ஆற்றிய பணி, அவரது மகன் மகேந்திரன், மூன்றாவது தலைமுறையாக மதுவந்தி வரை பாரம்பரியம் தொடர்வது குறித்தும் தாரிணி கோமல் எடுத்துரைத்த பின், இடம் பெற்ற, Y.G, மகேந்திரன் அவர்களின் “ரகசியம் பரம ரகசியம்” நாடகக் காட்சியில் அரங்கம் முழுவதும் சிரிப்பலைகள்.
கே. பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த் நாடகக்காட்சி கோமல் தியேட்டர்ஸ் நடிகர்களால் அன்று சிறப்பாக நடித்துக்காட்டப்பட்டது.
கூத்தபிரான் அவர்களின் நவபாரத் தியேட்டரின் மெரீனா எழுதிய “ஊர்வம்பு” நாடகத்தில் அவரது மகன் ரத்னம் கூத்தபிரான் அவர்கள், பட்டம்பியாகத் தோன்றிய காட்சியும்,
த்ரில்லர் நாடகங்களை அரங்கேற்றும் “அகஸ்டோவின் இருட்டல்ல நிழல்” நாடகக் காட்சியும், டம்மீஸ் ஸ்ரீவத்சன் குழுவினரின் “ வினோதய சித்தம்” நாடகக் காட்சியும் ரசிகர்களைக் கட்டிப்போட வைத்தன.
நிகழ்ச்சிக்கு நடுவே சிறிது நேரம், எல்லா சபாக்களுக்கும் ஸ்பான்ஸர் செய்து நாடகக் கலைக்கு உயிரூட்டிவரும், பத்மபூஷண் பெற இருக்கும் நல்லி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு நடந்தது. இதனை சென்னை நகர அனைத்து சபாக்களின் கூட்டமைப்பு (Federation of Chennai Sabhas) சிறப்பாக செய்தனர்.
நல்லி அவர்களும் சில நிமிடங்கள் உரையாற்றி நாடகக் கலைஞர்களுடான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தாரிணி கோமல் அவர்களை நாடக மேடையைக்காக்க வந்த தேவதை என்றும் பாராட்டினார்.
12 குழுக்களிலிருந்து 16 நாடக காட்சிகளும் 68 கலைஞர்களும் பங்கேற்பது என்பது எளிதான செயலல்ல. இந்த கச்சிதமான ஒருங்கிணைப்புக்குப் பின்னால் எத்தனை திட்டமிடல், உழைப்பு என்று நினைக்கும்போது நல்லி குப்புசாமி அவர்கள் குறிப்பிட்டது மிகச் சரியே.
தந்தை கோமல் சுவாமிநாதன் மற்றும் நாடக மேடைக்காக தங்களை அர்ப்பணித்த அனைவரின் ஆசிகளும் வாழ்த்துக்களும், ரசிகர்களின் அன்பும் தாரிணி கோமல் அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
கல்கியின் சார்பில் வாழ்த்துக்கள்.