
இன்று பல இடங்களில் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழ் இலக்கிய பண்பாட்டு நூல்கள், கதை, கவிதை, நாடகம், விஞ்ஞானம், ஆராய்ச்சி கட்டுரைகள், சுயசரிதைகள், பழைய மற்றும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என்று அனைத்தும் மக்களின் கவனத்தை கவரும் வகையில் விற்கப்படுகின்றன.
நாம் ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும்? அதனால் மனித சமுதாயத்திற்கு என்ன பலன்கள் கிடைக்கும்?
வாருங்கள் ... இந்த கட்டுரையில் அதை பற்றி யோசிப்போம்.... வாசிப்போம்.!
புத்தக வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. அதனால் நமக்கு பல நற்பலன்கள் கிடைக்கின்றன. இதை இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீந்தி திளைக்கின்ற நமது இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் இந்த காலகட்டத்தில் புத்தக வாசிப்பு என்பது பொறுமை தேவைப்படுகிற, ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.
"அதென்ன எப்ப பாத்தாலும் புத்தகத்திலேயே மூழ்கி கிடக்கிறே! அதை வைத்து விட்டு, வெளியே போய் விளையாடு. சொந்த பந்தங்களோடு பேசு. பழகு."என்றெல்லாம் பெற்றோர்களிடம் திட்டு வாங்கி கொண்டிருந்த 80s – 90s கால பிள்ளைகள் போல இன்றைய இளைய சமுதாயத்தினர், ‘ஸ்மார்ட்போன் ‘ எனப்படும் கைபேசி சாதனத்தில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
இந்தக் கைபேசிகள் உபயோகத்தில் வந்த பிறகு, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்கள் காணாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. அதில் புத்தகங்களும் விதிவிலக்கல்ல.
வலைத்தளங்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் எல்லாம் வந்த பிறகு, கையடக்க கணினியாக கைபேசி செயல்படுவதால புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கம் என்பது குறைந்து விட்டது.
இன்று பள்ளி கல்லூரிகளில், நூலகங்களில் புத்தக வாசிப்பை ஓரளவில் காண முடிகிறது. அங்கேயும் கணினி வழியாக படிப்பது அறிமுகம் ஆகி விட்டது.
இன்றும் பொழுதை கழிக்க, தினசரி பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் வாசிப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அதே சமயத்தில் பெரும்பாலானவர்கள், ஏதாவது ஒரு பிரபலமான விஷயங்கள் பிரச்சனைகள் பேசப்படும் போது மட்டும் (கொரானோ, ரஷ்யா உக்ரைன் போர், தேர்தல்..) தலைப்புச் செய்திகளை படித்து விட்டு அலுவலக வேலை, அல்லது அவசர வேலை இருக்கு என்று அதை ஓரமாக தூக்கி போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். தொலைக்காட்சி வந்த புதிதில் தமிழில் பொதிகை சேனல் மட்டுமே பிரபலமாக இருந்தது.
தமிழ் செய்திகள், ஒலியும் ஒளியும் அல்லது கிரிக்கெட் ஒளிபரப்பும் போது மட்டுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களுக்கு தேவையாக இருந்தது. இப்போது தனியார் தொ(ல்)லைக்காட்சிகள் பெருகிய பிறகு, சீரியல் எனப்படும் தொடர் நிகழ்ச்சிகளில் மெய்மறந்து, வீட்டு வேலைகளை செய்வதைக் கூட குறைத்துக் கொண்டார்கள்.
விடலைப் பருவ சின்னஞ்சிறுசுகளோ, வாலிப வயது பிள்ளைகளோ இணையதளத்தில் தேடித்தேடி, தேவையான அல்லது தேவையற்ற தகவல்களைப் படித்து, பகிர்ந்து, அதற்கு அடிமையாகி காலத்தைக் கடத்துகிறார்கள்.
இன்றைய நவீன உலகில் பொதுவாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நல்ல பழக்கங்களில் ஒன்றாக புத்தக வாசிப்பும் ஆகி விட்டதை உணர முடிகிறது. அதே சமயத்தில், ஆங்காங்கே புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பேச்சுகளும், செய்தி பரிமாற்றங்களும் புத்தக கண்காட்சிகள் மற்றும் புதிய எழுத்தாளர்களால் மீண்டும் புது அவதாரமாக பிறந்து வளர்ந்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
புத்தக வாசிப்பு மனதில் அமைதியைத் தர வல்ல தியானம் போன்றது. அது நம் நினைவாற்றலை அதிகப்படுத்தும். சிந்தனை வளத்தை செழுமையாக்கும் .
"புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால் சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால் அறிவு பெருகும்; அறிவு பெருகினால் முன்னேற்றம் ஏற்படும்.
எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், அதையே படிப்பேன். என் முயற்சியில், தடங்கல் ஏற்பட்டால், அந்த புத்தகமே, எனக்கு வழித்துணையாக இருக்கும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். அதே சமயம் ஒரு நல்ல நண்பன் நூறு புத்தகங்களுக்கு சமம். ”
என்றார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
“நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்றார் ஔவையார்.
ஆம்பல் என்றால் அல்லி மலரை குறிக்கும். குளத்து நீரின் அளவை பொறுத்து மேலே உயர்ந்து எழுந்து நிற்கும் அல்லி மலரை போல, நீங்கள் கற்று அறிந்து கொள்ளும் போது உங்கள் அறிவாற்றலும் சிறப்பாக அமையும்.
“தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைதூரும் அறிவு”
நீரை இறைக்க இறைக்க ஊரும் கிணறு போல, நீங்கள் படிக்க படிக்க உங்கள் அறிவாற்றலும் பெருகும் என்றார் திருவள்ளுவர்.
“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
“உயிரின் சுவாசமல்லவா புத்தகம்.
உனக்குள் ஒரு சூரியன் அல்லவா புத்தகம்.
அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்.
உனக்கு வரம் தர…
யாரோயிருந்த தவமல்லவா புத்தகம்!”
என்கிறார் கவியரசு வைரமுத்து
ஒவ்வொரு துறையிலும் அதற்கான புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. நாம் படிப்பது கவிதை, கதைகளாக, ஆன்மீக தகவல், வரலாறாக அல்லது ஒரு உயர்ந்த மனிதரின் சுய சரிதையாகக் கூட இருக்கலாம். எல்லாவகையிலும் நம்மை மேம்படுத்திக்கொள்ள, அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள நமக்கு எப்போதும் புத்தக படிப்பு அவசியம் .
நாம் தலைகுனிந்து படிக்க, நம்மை தலை நிமிர்ந்து வாழ வைக்குமாம் புத்தகம். ஆகவே புத்தகங்களை வாசியுங்கள்..! முன்னேறுங்கள்..!