நக்கீரர் முதல் தருமி வரை: சிவாஜி பிறந்தநாளில் 'திருவிளையாடல்' ரீ-ரிலீஸ் – 1965ல் கல்கி சொன்னது என்ன?

தியேட்டரில் மீண்டும் ஒலிக்கும் கே.பி.சுந்தராம்பாளின் வெண்கலக் குரல்: 'திருவிளையாடல்' சிறப்புப் பார்வை.
திருவிளையாடல் ரீ-ரிலீஸ் - Sivaji Ganesan Classic
திருவிளையாடல் ரீ-ரிலீஸ் - Sivaji Ganesan Classic
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

தமிழ் சினிமா வரலாற்றில் புராண காவியங்களில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திருவிளையாடல். 1965ல் வெளியான இத்திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் என சொல்லலாம்.

இன்று சிவாஜி கணேசன் அவர்களின் 99 பிறந்த நாளை முன்னிட்டு (2026, அக்டோபர் முதல் தேதியன்று) திருவிளையாடல் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டு வெளியிட முயற்சி செய்யப்பட்டது. தொழில்நுட்பக் காரணத்தால் அன்றைய தினம் வெளியிட முடியாமல் போனது.

திருவிளையாடல் ரீ-ரிலீஸ் - Sivaji Ganesan Classic
சிவாஜி கணேசன்Image credt: Kalki gallery

01-08-1965 அன்று கல்கி வார இதழில் முழுப்பக்கத்தில் திருவிளையாடல் விளம்பரம் வெளியாகி உள்ளது.

22-08-1965 அன்று வெளியான கல்கியில் இத்திரைப்படத்தின் சிறப்புமிக்க விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.

தற்போது புதுப்பொலிவுடன் இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதோ அந்த (அன்றைய) சினிமா விமர்சனம் உங்களுக்காக…

ஆலவாய் அப்பனின் அருட்பெரும் திருவிளையாடல்கள் புராணக் கணக்குப்படி அறுபத்து நான்கு. அதற்குப் பிறகு பக்தர்களின் அநுபவ வாயிலாகக் கிடைக்கும் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனயோ. விஜயலக்ஷ்மி பிக்சர்ஸாரின் தயாரிப்பான 'திருவிளையாடல்' படத்தில் கண்ணுதற் கடவுளின் விளையாடற் பெருமைகளை முருகப் பெருமானுக்கு உமாதேவி கூறுவதாகக் கற்பனை செய்து சில நிகழ்ச்சிகளை கவினுறப் புனைந்திருக்கின்றனர்.

சிவபெருமான் தருமி என்ற ஏழை அந்தணனுக்குப் பொற்கிழிகளித்த வரலாற்றையும், இசைப்புலவன் பாண பத்திரனின் பக்திக்கு இரங்கி ஏம நாதன் என்ற செருக்குற்ற இசை வல்லுநனை அடக்க விறகு சுமப்பவனாக வந்த திருவிளையாடலையும், கயற்கண்ணி என்ற மீனவப் பெண்ணை ஆட்கொண்ட நிகழ்ச்சியையும் தொகுத்துப் படமாக்கியிருக்கின்றனர்.

திருவிளையாடல் ரீ-ரிலீஸ் - Sivaji Ganesan Classic
கல்கி வார இதழில் வெளியான விள்ம்பரம்...

ஒரு நல்ல நடிகன் முயன்று நடித்தால் எந்தப் பாத்திரத்திலும் சோபிக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சிவாஜி கணேசன். தக்ஷனின் யாகத்துக்குப் போகக்கூடாது என்று தாக்ஷாயணியைத் தடுத்தபோதும், பாண்டியன் சபையில் நக்கீரர் 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!' என்று நவின்றபோது நக்கீரனிடம் சினமுற்றுத் தீயெழ விழித்தபோதும், நான்மாடக்கூடலில் விறகு விற்று இசைப்புலவன் ஏமநாதனை வென்றபோதும் அவர் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

அவரது ஊர்த்துவ தாண்டவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சாவித்திரி கனகச்சிதமாக நடித்திருக்கிறார். சிவனுக்குச் சவால் விடும் சரியான சக்திதான்! பாண்டிமா தேவியாக வரும் தேவிகா சிறிது நேரமே வந்தாலும் எல்லாரையும் கவர்ந்துவிடுகிறார். என்றுமே பாராட்டுக்குரிய நடிகரான பாலையா, ஏமநாதனாகவே மாறிவிட்டதில் வியப்பில்லை; அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. நாகேஷின் 'திருவிளையாடலை'யும் இந்தப் படத்தில் காணலாம்.

டைரக்ஷன் பொறுப்பையும், திரைக்கதை வசனத்தின் பொறுப்யையும் ஏற்றுச் சிறப்பாய் வகித்திருக்கும் ஏ.பி. நாகராஜன் புலவர் நக்கீரராக வந்து மனத்தில் பதியும் வண்ணம் நடித்திருக்கிறார். கே.பி. சுந்தராம்பாளின் வெண்கல நாத இசை வெள்ளமான 'பழம் நீயப்பா', 'ஒன்றானவன்' என்ற பாடல்கள் நம் இதயத்தில் கலந்து ஒலிக்கின்றன. இன்னிசையின் சிறப்பில் சங்கீத டைரக்டர் கே.வி. மகாதேவனும், வண்ணப் படத்தின் மேன்மையில் கே.எஸ். பிரசாத்தும் முக்கியப் பங்கு பெறுகிறார்கள்.

அதியற்புத வண்ணப்படமான 'திருவிளையாடல்' தமிழ்ப் பட உலகத்துக்கு ஒரு வெற்றி!

இதையும் படியுங்கள்:
கவிஞர் கண்ணதாசன்: காலத்தை வென்ற காவிய வரிகளின் பின்னணியும் சுவாரசிய உண்மைகளும்!
திருவிளையாடல் ரீ-ரிலீஸ் - Sivaji Ganesan Classic

இந்தத் தொகுப்பின் வாயிலாக, தமிழ் சினிமா வரலாற்றின் மைல்கல்லான 'திருவிளையாடல்' திரைப்படம் அன்றைய காலத்தில் உருவாக்கிய தாக்கம், 1965 கல்கி விமர்சனத்தின் வரலாற்று மதிப்பு மற்றும் தற்கால நவீன திரையரங்குகளில் அப்படத்தைக் கண்டு ரசிப்பதற்கான முக்கிய அம்சங்களை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com