

இசை உலகின் பேரரசி, பாரத் ரத்னா திருமதி எம். எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் வாழ்க்கை சம்பவங்களைக் கோர்த்து “ThRee” தியேட்டர்ஸ், வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதியன்று நாரத கான சபாவில் 'காற்றினிலே வரும் கீதம்' நாடகத்தை புது மெருகுடன் மேடையேற்றுகிறர்கள்.
வி.எஸ்.வி. ரமணன் அவர்கள் எழுதிய 'காற்றினிலே வரும் கீதம்' என்னும் எம். எஸ் அம்மாவின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து, எம். எஸ் அம்மாவாக லாவண்யா வேணுகோபாலின் இயக்கத்தில், லாவண்யா, எம். எஸ். அம்மாவின் கணவர் சதாசிவமாக எம். வி பாஸ்கர் இருவரின் நாடகமாக்கத்தில், புது மெருகுடன் மீண்டும் மேடையேறுகிறது இந்நாடகம்.
வசனங்கள் எழுதிருப்பவர் சி.வி. சந்திரமோகன். இசையமைத்திருப்பவர் தக்ஷிண். லாவண்யா வேணுகோபால், பாஸ்கர் இருவரிடமும் நாடகத்தின் புது மெருகு குறித்து பேசினோம்.
இம்முறை என்ன மாற்றங்கள் செய்திருக்கிறீர்கள்?
“மிக முக்கியமாக, சென்றமுறை முன்பதிவு செய்தது போல் இல்லாமல் வசனங்களை அனைவரும் மேடையிலேயே பேசுகிறோம். இதனால், உணர்ச்சிபூர்வமாக நடிக்க முடிகிறது,” என்கிறார் லாவண்யா.
“இம்முறை எல் ஈ டி திரைகளை பின்னணியில் கொண்டு வந்திருக்கிறோம். அந்தந்த காட்சிக்கு ஏற்ப, போட்டோக்கள் மூலம் புரொஜெக்ட் செய்யப்படும். உதாரணமாக மதுரை சேதுபதி பள்ளியில் அம்மா பாடுகிறார் என்றால், அந்தப் பள்ளியின் படம் பின்னணியில் இருக்கும்.
“எம். எஸ். அம்மாவின் நாடகம் என்றாலும் பாட்டுகள் ஓரளவில் மட்டுமே இடம் பெறும். அம்மாவின் வாழ்க்கை சம்பவங்களும், அவரது தாராள மனசு வெளிப்படும் சம்பவங்களும் அதிக அளவில் இருக்கும். சில காட்சிகள் ஒரு சூத்திரதாரி, பின்னணியில் சொல்வது போல் (குரல் மட்டும்) அமைக்கப்பட்டிருக்கும். நாடகத்தின் மையக் கருத்தாக அம்மாவின் வாழ்க்கை சம்பவங்கள் இருக்கும்," என்று குறிப்பிட்டார் லாவண்யா.
பாஸ்கர் பேசும்போது:
"தியேட்டர் என்பது லைவ் ஆர்ட். அதனால் வசனம் பேசுவோர் அவரவர் குரலிலேயே பேசட்டும் என்று லேபல் மைக் தரப்படுகிறது. இதனால் கதாபாத்திரங்கள், மேடையில் எளிதாக அங்கும் இங்கும் நடந்து பேச முடியும். ஆடியன்ஸ் அனைவருக்கும் கேட்கும்.
“இரண்டரை மணி நேரமாக இருந்ததை இரண்டு மணி நேரமாக்கி, காட்சிகளை ஷார்ப் ஆக்கியிருக்கிறோம். இந்த ப்ரசென்டெஷனுக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே நாடகத்தில் வைத்திருக்கிறோம். சென்ற முறை நீங்கள் பார்த்ததை விட இம்முறை ப்ரசென்டேஷன் வித்தியாசமாக இருக்கும். எங்களது அருமையான குழுவினரும், கதாபாத்திரங்களில் ஒன்றி பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.
"எம். எஸ். அம்மாவின் தனிப்பட்ட குணாதிசயங்கள், வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், அவற்றை உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றதும், அடக்கமாக, அமைதியாக வாழ்ந்த விதம், அனைவருக்கும் உதவி செய்தது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறோம்.
நாடகம் பார்க்க வருபவர்களுக்கு, எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கை ஒரு நல்ல வாழ்க்கைப்பாடமாக, சிறந்த வழிகாட்டுதலாக அமையவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அவசியம் தெரியவேண்டும் . அதற்காகவே ஒவ்வொரு காட்சியையும் கவனமாக செதுக்கியிருக்கிறோம்.”
வாழ்த்துக்கள் ThRee Entertainers Team!