
தேசிய விநாயகம் பிள்ளை பாடிய கதர் பாடல்
சுதந்திர போராட்ட காலத்தில் கதர் ஆடையால் காங்கிரஸ்காரர்களுக்கும், அவர்களால் கதராடைக்கும் ஒரு மதிப்பும், மரியாதையும் பொது மக்களிடம் இருந்தது. ஆனாலும், கதர் கனமானது ; சாக்கு போன்றது, நனைத்துத்தோய்க்க முடியாதது, கிழிந்தால் தைக்க முடியாது என்று பல குறைபாடுகள் பொதுமக்களால் சொல்லப்பட்டன.
இதையடுத்து கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தெருவில் கதர் விற்பனை செய்யும் தொண்டர்கள் பாடும் விதமாக எழுதிக்கொடுத்த பாடலில், ஒரு இடத்தில்...
'அஞ்சு வயது சிறுமி கோலமிட்டால் அதை அழகில்லை என்று அழிக்கும் தாயுமுண்டோ?'
என்று குறிப்பிட்டுள்ளார்.
தாய், தன் குழந்தை கோணல் மாணலாக போட்டிருக்கும் கோலத்தை அழகாக எடுத்துக்கொள்வதைப்போல, இந்திய பாமரர்களின் முதல் முயற்சியான கதர் துணியை போற்ற வேண்டுமே தவிர குறை காணக்கூடாது என்பதற்காகவே அப்படி பாடினார்.
ஆனாலும், அவர் கதராடை அணிய முடியவில்லை. காரணம், திருவிதாங்கூர் மன்னரின் மகளிர் கல்லூரியில் அவர் தமிழ்ப்பேராசிரியர். கதர் ஆடை அணிபவர்களை தேச பக்தர்களாக மக்கள் கருதினாலும், அதிகாரிகள் தேச விரோதிகளாகவே கருதினர்.
பலவீனர்களுக்கே முதல் உரிமை
இந்திய ஜனாதிபதி மாளிகையில் ஒரு முறை நடைபெற்ற திட்ட கமிஷன் கூட்டத்திற்கு குதிரை வண்டியில் சென்றார் கிராம பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, வழியில் பல இடங்களில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இது பற்றி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் முறையிட்டார்.
அதற்கு "ராணுவ வாகனங்கள் விரைந்து வரும் சாலையில் குதிரை வண்டி செல்வது பாதுகாப்பானதல்ல" என்று விளக்கம் தந்தார் நேரு.
ஆனால் குமரப்பா "ஜனநாயக நாட்டில் பலவீனர்களுக்கே முதல் உரிமையும், பாதுகாப்பும் தரப்பட வேண்டும்" என்று வாதாடினார்.
கொடுப்பதில் தாமதம் கூடாது
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அப்போது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். அப்போதைய பிரதமர் நேரு வானொலி மூலம் நிதி உதவி கேட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அதை கேட்ட நடிகராக அப்போது இருந்த எம்.ஜி.ஆர் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் முதல்வர் காமராஜர் வீட்டில் தொடர்பு கொண்டு, அவரை சென்னை விமான நிலையத்தில் பிடித்து அங்கேயே 75,000 ரூபாய்யை நிதியாக காமராஜரிடம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்.
நிதியை பெற்றதும் காமராஜர் கூறியது "நீங்கள் தலை சிறந்த நடிகர் மட்டுமல்ல, தலை சிறந்த மனிதரும் கூட." அந்த நிதியை உடனே நேருவிடம் டெல்லியில் கொடுக்கிறார் காமராஜர். நிதியை பெற்றவுடன் நேரு கூறினார் "யுத்த நிதி வேண்டுகோள் ஏற்று கிடைக்கும் முதல் நிதியே உங்கள் தமிழ் நாட்டு எம்.ஜி.ஆர் நிதிதான்" என்று.
அது ஒரு பொற்காலம்!