‘உங்களுக்கும், சிவாஜி கணேசனுக்கும் கருத்து வேற்றுமை எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவாது நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன?’ என்று எம்.ஜி.ஆரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, சிரித்துக் கொண்டே அவர் கூறியது.
"எங்கள் இரண்டு பேரையும் போட்டு படம் எடுத்தால் அந்தப் படம் ஒழுங்காக வெளிவரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? நானும் படப்பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவன். சிவாஜியும் படப்பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவர். காமிராவை எந்தப் பக்கமாக வைத்தால் யாருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று இரண்டு பேருக்கும் தெரியும். அவருக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி காமிரா வைக்கப்பட்டால் நான்தான் ஒத்துழைப்பேனா? அல்லது எனக்கு முக்கியத்துவம் வரும்போது அவர்தான் ஒத்துழைப்பாரா? படம்தான் ஒழுங்காக வெளி வருமா?
அப்படியே படம் முடிந்து வெளி வந்தாலும் ஒரு காட்சியில் என்னைப் பார்த்து விட்டு என் ரசிகர்கள் கை தட்டுவார்கள். அடுத்தக் காட்சியில் அவர் ரசிகர்கள் அவரைப் பார்த்து கை தட்டுவார்கள். கை தட்டல், கைகலப்பாக மாறி தியேட்டர் இரத்தக் களரியாகி விடுமே!
‘இயற்கையான நடிப்புக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும், மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது’ என்று தென் இந்திய சினிமா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீங்கள் பேசினீர்கள் அல்லவா? சிவாஜி கணேசனை தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக் கொள்கிறார்களே, அது உண்மையா?
அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில், "இயற்கையான நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும்போது, உடனடியாக அவர்கள் சிவாஜி கணேசனை ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியானால், இவர்கள் கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறார்களா? இப்படிப் பேசுவதன் மூலம் சிறந்த நடிகரான சிவாஜி கணேசனின் பெருமையை இவர்கள் களங்கப்படுத்த முயல்கிறார்கள்.”
‘உங்கள் படங்களில் சண்டை காட்சிகளில் ஒரே ஆள் பத்து பேர், பதினைந்து பேரை அடித்து வீழ்த்தும்படி வருகிறதே? இது இயற்கைக்கு மீறிய மிகையான நடிப்பு இல்லையா?’
இதற்கு எம் ஜி ஆர் கூறிய பதில், “அபிமன்யு பத்மவியூகத்துக்குள் நுழைந்து ஒரே நேரத்தில் பல பேர்களை சாய்த்ததாக புராணத்தில் இருக்கிறதே, அதை ஏற்றுக்கொள்ளும்போது, வீரன் ஒருவன் 15 பேர்களை அடித்து வீழ்த்துவதை ஏன் ஏற்றுக்கொள்ள கூடாது. நல்ல வீரனால் 10, 15 பேர்களைச் சமாளிக்க முடியும்.
நான் தங்க பஸ்பம் சாப்பிடுகிறேனா என்று பலருக்கும் சந்தேகம். தங்க பஸ்பம் சாப்பிடுவது எளிதல்ல. தங்க பஸ்பம் செயல்முறை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு குண்டூசி முனையில் தங்க பஸ்பத்தை தொட்டு நெய்யிலோ, பாலிலோ கலந்து சாப்பிடுவார்களாம். குண்டூசி முனையை விட அளவு அதிகமாகி விட்டால் குடல் வெந்து செத்து விடுவார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் உடலைப் பாதுகாப்பது என்பது மனதைப் பொறுத்ததாகும். ஒன்றை திடமாகச் சொல்கிறேன், நமக்கு வயதாகிப்போச்சு என்ற எண்ணத்தை ஒழித்து எனக்கு எங்கே வயசாச்சு? என்று இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்களை வயோதிகம் நெருங்காது.
தோள் இருக்கிறதா? தட்டிப் பாருங்கள்! அது இல்லாமல் என்னடா என்று சலிப்பதில் பிரயோஜனம் இல்லை. இதை நான் ஏன் இவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறேன் என்றால், எனக்கு இன்று என்ன வயது என்று நான் எண்ணத் தயாராக இல்லை. மற்றவர்கள்தான் அதை எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர, நான் அதை எண்ணுவதும் இல்லை, எண்ணிப் பார்ப்பதும் இல்லை.”