Interview: பாரதிராஜா, பாலசந்தர் போல் சிந்திக்கும் இயக்குனர் சுசீந்திரன்!
வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, நான் மகான் அல்ல போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் '2 k லவ் ஸ்டோரி' என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார். இப்படம் வரும் காதலர் தினத்தில் வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷனுக்காக கோயம்புத்தூரில் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தார். சிறிது இடைவெளி விட்டு நம் கல்கி ஆன்லைன் இதழுக்கு அளித்த பேட்டி...
பட ப்ரோமோஷனுக்கு கல்லூரிக்கு செல்வது ஏன்?
நான் செல்வது ப்ரோமோஷனுக்காக மட்டுமல்ல. இந்த படம் 2K கிட்ஸை மைய்யமாக கொண்டது. எனவே படம் வெளியாக ஒரிரு நாட்கள் இருக்கும் சூழ்நிலையில் கோவையில் சில கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் படத்தை திரையிட உள்ளேன். மாணவர்கள் ஏதேனும் நியாமான திருத்தம் சொன்னால் படத்தில் திருத்தம் செய்து வெளியிட தயாராக இருக்கிறேன். மாணவர்கள் இப்படத்தை வரவேற்கும் விதத்தை பொறுத்துதான் படத்தின் வெற்றி அமையும் என நம்புகிறேன். மாணவர்களின் கதையை முதலில் மாணவர்களிடம் திரையிடுவது தான் சரியாக இருக்கும்.
இந்த படத்தை காதலர் தினத்தில் ரிலீஸ் செய்வது கூட ஒரு விளம்பர உத்திதானே?
இல்லை. கண்டிப்பாக இல்லை. சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகள் செய்தோம். பல்வேறு காரணங்களால் டிசம்பர் மாதம் 2K லவ் ஸ்டோரியை வெளியிட முடியவில்லை. பிப்ரவரி 14 காதலர் தினத்தில் இப்படம் வெளியாவது தற்செயல் நிகழ்வு தான்.
இன்றைய 2K கிட்ஸ் காதலை எப்படி படத்தில் காண்பித்து உள்ளீர்கள்?
இப்படம் முழுக்க முழுக்க காதலை பேசும் படம் கிடையாது. காதலர் தினத்தை கொண்டாட காரணமாக கருத்தப்படும் 'வாலன்டைன்' முழுவதும் அன்பை பற்றி மட்டுமே பேசி உள்ளார். இந்த அன்பு பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் நண்பர்கள் என பலரிடம் செலுத்தி வருகிறோம். காதலன் - காதலியிடம் செலுத்துவது கூட அன்புதான். நாம் பலரிடம் செலுத்தும் அன்பை பற்றி தான் சொல்ல போகிறேன். "இன்னைக்கு தலைமுறை சரியில்லை, எங்க காலத்துல இப்படி எல்லாம் நடந்ததா?" என எங்கோ நடக்கும் ஒரு தவறுகளை சுட்டிக்காட்டி இன்றைய இளைஞர்களை குறை சொல்லும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறைகளிலும் ஒரு சதவிகிதம் சமுதாய தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் அதே ஒரு சதவிகித தவறு தான் நடக்கிறது. இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத் தால் பூதாகாரமாக பார்க்க படுகிறது. இன்றைய இளைஞர்கள் புத்தி சாலிகள். தொண்ணூறு சதவீதம் இளைஞர்கள் சாரியானவர்கள் என்பதை இன்றைய பெற்றோர்களுக்கு புரிய வைப்பதே 2K லவ் ஸ்டோரி படத்தின் நோக்கம்.
நீங்கள் அனைவருக்குமான படம் என்று சொன்னால் கூட உங்கள் படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளதே..?
இன்றைய 2K கிட்ஸ் பயன்படுத்தும் இரண்டு வசனங்களை வைத்துள்ளேன். தணிக்கை குழுவினர் இந்த வசனம் வரும் போது Mute போட சொன்னார்கள். நான் மறுத்து விட்டதால் UA சான்றிதழ் தந்து விட்டார்கள். இந்த படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம் என நான் உறுதி அளிக்கிறேன்.
உங்களின் பல படங்களில் புது முகங்களையே அறிமுகம் செய்கிறீர்களே... ஏன் பெரிய ஹீரோகளிடம் செல்வதில்லை?
நான் பாரதிராஜா, பாலசந்தர் போல் பல புது முகங்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். திறமையும், ஆர்வமும் உள்ளவர்கள் என் அலுவலகத்தில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம். சந்தர்ப்பம் வரும் போது அறிமுகம் செய்ய தயாராக உள்ளேன்.
மீண்டும் ஒரு வெண்ணிலா கபடி குழு படத்தை எப்போது உங்களிடம் எதிர் பார்க்கலாம்?
சரியான ஸ்கிரிப்ட்டும், நடிகர்களும் அமையும் போது உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.