
பாகிஸ்தான் நம் எல்லையை மீறி நம்மைச் சீண்டினால் எல்லை மீறிய பயங்கரவாதம் என்பது நமக்குப் புரிகிறது. நாம் ஒரு பொழுதுபோக்கு விசயத்தை ரசனையின் எல்லையை மீறிக் கொண்டாடத்தொடங்கினால் என்ன நடக்கும்? சமீபத்தில் நடந்த IPL கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கொண்டாட்டத்தில் நடந்ததே நிகழும்.
பதினோரு பேர்கள், அனைவரும் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள், இறந்தும், மேலும் சுமார் ஐம்பது பேர்கள் காயம் ஏற்பட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதற்காக? கிட்டத்தட்டச் சூதாட்டம் ஆகிவிட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற ஒரு குழுவின் வெற்றி கொண்டாட்டத்திற்காகக் கூடியபோது. 32000 பேர்கள் மட்டுமே கண்டு களிக்கக்கூடிய மைதானத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் கூடி கும்மாளம் அடித்ததன் விளைவு இது. நடந்து முடிந்த பிறகு விசாரிக்க ஆணையம் அமைத்தும், துணை முதல்வர் வருத்தம் தெரிவித்தும், பொறுப்பை தட்டிக்கழித்துக் கடந்து போக நினைக்கிறது மாநில அரசு.
அரசாங்கம் நீதிபதியை நியமித்து விசாரிக்கட்டும். நாம் குடிமகனாக இந்த சமூக நிகழ்வை ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டிய பாடம் என்ன. எதையும் யாரையும் கண்மூடித்தனமாகக் கும்பலாகப் பின்பற்றும் போக்கு ஒரு வளர்ந்த சமூகத்திற்கு ஆரோக்கியமானதா?
தனி மனிதன் குழுவாகக் கொண்டாட காலச்சூழல் அவசியமாகி விட்டது. குறிப்பாக உறவுகளைத் தள்ளி வைத்துவிட்டு, எல்லா பண்டிகை தினங்களையும் உறவுகள் கூட்டிக் கொண்டாடாமல், தொடர் விடுமுறையாக்கி பிரயாணம் செய்யும் தனிமனிதனுக்கு, இது ஒரு குற்றவுணர்வின் வடிகால் தான். வேலையில் டார்கெட், பல்வேறு கடன் சுமைகள் என்று சதா சர்வ காலமும் திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு இந்த கொண்டாட்டம் அவசியமாகிறது.
யாரோ ஒருவரின், ஏதோ ஒரு குழுவின் வெற்றியை நமது வெற்றியாகக் கொண்டாட நினைக்கிறோம். அந்த வெற்றியில் நம் பங்காகக் கூட்டத்தில் நின்று கொக்கரிப்பதில் திருப்தியடைகிறோம். பல சமயங்களில் திரை பிம்பங்களில் நம்மை காணும் மனநிலை போல நாமே ஆடி வெற்றிப்பெற்றதாய் நினைத்துக்கொள்கிறோம். நாம் தான் அவர்களால் அடிக்கப்படும் பந்து என்று உண்மை புரியாமல், நம்மை மறந்து கொண்டாடுகிறோம்.
நாம் கடுமையாக உழைத்து ஈட்டும் பணத்தை கேளிக்கை என்ற பெயரில் கொட்டிக்கொடுத்து, அவர்களை நாம் தான் பெரும் பணக்காரர்களாகவும் அந்தஸ்து மிகுந்தவர்களாகவும் ஆக்குகிறோம். அவனது புகழுக்கு நம் ஆராதிப்பும் அவனது வெற்றிக்கு நம் பணத்தால் அவன் செல்வந்தன் ஆவதும் போதும்.
நாம் ஏற்படுத்திய பிம்பத்தில் நாமே மயங்கி விழுந்து அண்ணாந்து பார்த்து அர்ப்பரிப்பது அவசியமா. குறைந்த பட்சம் அதற்கான விலை மிகவும் அதிகம் என்றோ அதனை பெற அந்த நிகழ்வுக்கு தகுதி இல்லை என்றோ ஒரு அடிப்படை சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறோம். தன் நேரத்தை, பணத்தை, என்று ஒவ்வொன்றாக இழக்க தொடங்கி நம் உயிரையே மாய்க்கும் அளவுக்கு மூழ்கடித்துக்கொள்கிறோம். இந்த மூடப்பபழக்கத்தில் இருந்து விடுபட தன்னை உணர்தலும் தள்ளி நின்று ரசிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ளவதும் அவசியமில்லையா?சற்றே தள்ளி நில்லும் பிள்ளாய் என்று சொல்லதோன்றுகிறது.
நாம் என்ன ஞானியா, தத்துவம் பேசி எட்ட நின்று நோக்க? சராசரி மனிதன் தானே, தனி மனிதனுக்கும் ஆசைகள் அபிலாசைகள் இருக்கக்கூடாதா? பிறர் வெற்றியை தனதாக்கி கொண்டாட திறந்த மனம் வேண்டாமா? எல்லா வெற்றியும் நாமே பெற்றுவிட முடியுமா? மற்றவர்களை பாராட்டி மகிழ்ந்தால் என்ன குறை நிகழ்த்து விடப்போகிறது என்று கேட்பதில் நியாயம் இருப்பது போல தோன்றும்.ஆனால்...
அத்தகைய கொண்டடத்தின் அளவுகோல் என்ன என்பதே கேள்வி. தன்னை தன் இருப்பை வரையறுத்து வாழ்வது அவசியம் தானே. நமது எல்லை கோடுகளை நாம் தானே போட்டுக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியை, மகிழ்வாக கொண்டாட வேண்டுமேயன்றி மகிழ்ச்சியே சோகமாக மாற்றிவிடக்கூடாது. நம் வினையே நம்மை சுடும்! சுட்டெரிக்கும்! மகிழத்தானே போகிறோம், மகிழ்ந்து விட்டு வருவோம், மயங்கி ஏன் விழவேண்டும். எல்லைத்தாண்டி வெற்றிக்கோப்பையில் கையில் ஏந்த ஏன் விழையவேண்டும்? அது நமதானது இல்லையே. இந்த விழிப்பே அவசியம்.
வண்டி ஓட்டும்போது நாம் சக்கரமாக மாறி உராய்ந்து தேய்ந்து விடுவதில்லை. நீச்சல் அடிக்கும் போது நீரினில் அமிழ்ந்து மூழ்கி விடுவதில்லை. விமானத்தில் செல்லும் போது நாம் நம் இல்லாத இறக்கையை விரிப்பதில்லை. அதை போல உள்ளிருந்தாலும் உணர்வை இழக்காமல் இருப்போம்.
நாம் ரசிக்கும் வீரனோ அணியோ வெற்றிப்பெறுவதை கைதட்டி ஆராதிப்போம். ஆனால் அதனுடன் நிறுத்திக்கொள்வோம். அவனது வெற்றி அவனுடையது. நமது நோக்கம் அதனை கண்டு களிப்பது மட்டுமே. ஆட்டக்காரன் தான் மைதானத்தில் விளையாடுகிறான் நாம் அரங்கில் அமர்ந்து பார்பவர் மட்டுமே என்ற தெளிவு பெறுவது அத்தியாவசியம். எல்லை தாண்டாமல் ரசனையை வெளிப்படுத்துவோம். சேதாரம் இல்லாமல் சீர்தூக்கி வாழ்வோம்.