
18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர்.
முதலில் மைதானத்திற்குள் ரசிகர்கள் செல்வதற்கு டிக்கெட் அல்லது பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. பின்னர் டிக்கெட், பாஸ் எதுவும் வேண்டாம், ரசிகர்கள் இலவசமாகவே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சின்னசாமி மைதானத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போலீசாரும் திணறினார்கள். இதற்கிடையில், சின்னசாமி மைதானத்தில் உள்ள 12 மற்றும் 13-வது நுழைவு வாயில் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு அந்த 2 நுழைவுவாயில்கள் வழியாக ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதியளிப்பட்டது. நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் தீவிரசோதனை செய்த பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பரிசோதனை செய்த பாதுகாவலர்களையும் இடித்து தள்ளியபடி முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.
நுழைவுவாயில் கேட்டையும் உடைத்து தள்ளிவிட்டு ரசிகர்கள் உள்ளே செல்ல முயன்றதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பாதுகாவலர்களும், போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். அதே நேரத்தில் எப்படியும் பெங்களூரு அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் கேட் அருகில் கூட்டமாக நின்றவர்கள் மீது சில வாலிபர்கள் ஏறி மைதானத்திற்குள் சென்றனர்.
இதன் காரணமாக பலர் நுழைவு கேட் முன்பாக வலி தாங்க முடியாமல் சரிந்து கீழே விழ, இவ்வாறு கீழே விழுந்தவர்களை மிதித்தபடி மற்ற ரசிகர்கள் சென்றார்கள். மறுபுறம் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மயக்கம் அடைந்த சிறுவர், சிறுமிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் கூட்ட நெரிசல் மற்றும் ரசிகர்களின் கால்களில் மிதிப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். ஆனால் மைதானம் முன்பாக ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது. பின்னர் போலீஸ் ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்களிலும் உயிருக்கு போராடியவர்களை வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 11 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். மேலும் காயமடைந்த 33 பேருக்கும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மேலும் சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாக பாதுகாப்பு குறைபாடுகளே முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் சோகத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த துயர சம்பவத்தால் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் கவலை அடைந்துள்ளனர்.