

எளிமை, நேர்மை, கொள்கை நிலைப்பாடு ஆகியவற்றுக் காக “மக்கள் தலைவர்” எனப் பாராட்டப்படுபவர்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு. நல்லகண்ணு அவர்கள் (CPI மூத்த தலைவர்) அரசியல் என்பதையும் தாண்டி ஊழல் கறைபடியாத நல்ல மனிதராகவே அனைவரிடமும் அறியப்பட்ட தனித்துவமிக்க தலைவராக வாழ்ந்தவர். அவர் மறைந்த செய்தி தமிழக மக்களுக்கு வருத்தத்தைத் தருகிறது.
இந்த நேரத்தில் நல்லகண்ணு அவர்களை போற்றும் விதமாக அவரைப் பற்றிய சில சிறப்பு தகவல்கள் இங்கு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு, திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவாவினால் ஈர்க்கப்பட்டு அதன் வழி சென்று இறுதிவரை கம்யூனிஸ்ட் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்.
எதிரிகளையே சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர்தான் இந்த "நவீன கக்கன் நல்லகண்ணு"! மக்களால் புகழப்படும் நல்லகண்ணு 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1942ல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது நெல்லை மாணவராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தவர். கம்யூனிஸ்ட் கொள்கைகளை நாடகங்கள் மூலம் மக்களுக்கு அரிய வைத்தவர்.
இளமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் உரிமை போராட்டங்களிலும் கலந்து கொண்டு கைதாகி சிறையில் இருந்த காலத்திலும் தனது விருப்பமான மார்க்சிய நூல்கள் படித்து அரசியல் சிந்தனையை வளர்த்துக்கொண்டார்.
நிலம், நீர், விவசாயி உரிமைகள் குறித்து பல போராட்டங்கள் நடத்தியவர். ஆறுகள் இணைப்பு, நீர்ப்பாசன பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்டவர். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கான குரலாக இருந்தவர். குறிப்பாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத் தருதல் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர்களில் முதன்மையானவர் நல்லகண்ணு.
Communist Party of India மூலம் விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் உரிமைக்காக போராடியதுடன் நதி நீர் பகிர்வு, ஆறுகள் இணைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். அத்துடன் பெரும் பிரச்னைகளாக இருந்த மணல் கொள்ளை, நில அபகரிப்பு போன்ற பிரச்னைகளில் திறம்பட எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்னும் பெருமை கொண்டவர் . கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் , மாநில செயற்குழு மத்திய செயற்குழு உறுப்பினராகவும், விவசாயிகள் & தொழிலாளர் அமைப்பின் முன்னணி தலைவராகவும் 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் இயக்க தலைவராக இயங்கியவர் நல்ல கண்ணு.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத போதிலும் மக்கள் இயக்க அரசியலை முன்னிறுத்தி இயங்கியவர். அரசு பதவி வகிக்கவில்லை எனினும் கட்சித் தலைமையுடன் மக்கள் இயக்கங்கள் வழியாக அரசியல் தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் எளிமையின் சின்னமாக வெள்ளை வேஷ்டி–சட்டை, சைக்கிள் அல்லது சாதாரண போக்குவரத்து என மிக எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டு வாழ்ந்தவர். அரசியல் தலைவராக இருந்தும் தனிப்பட்ட சொத்து சேர்க்காதவர் என்று அறியப்படுவது சிறப்பு. குறிப்பாக நல்லகண்ணு கட்சியின் முழுநேரப் பணியில் ஈடுபட்டதால் நல்லாசிரியர் பணியிலிருந்த அவரது மனைவி ரஞ்சிதம்தான் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பார்த்துக்கொண்டார்.
மார்க்சிய சிந்தனைகளில் ஆழ்ந்த அறிவுடன் பொதுக்கூட்டங்களில் எளிய தமிழில் விளக்கும் திறன் கொண்டவர். கட்சி வேறுபாடு இருந்தாலும் மற்ற அரசியல் தலைவர்களிடமும் மரியாதையுடன் தனிப்பட்ட மதிப்பு அதிகம் கொண்டவர் என்பது சிறப்பு.
சென்னை சிஐடி நகரில் தமிழக வீட்டுவசதி வாரியத்தின் வீட்டில் வசித்து வந்தார், அதை அவரே தன் சொந்தப் பணத்தில் பழுதுபார்த்து வசித்தார், பின்னர் 2019-ல் வீடு காலி செய்தபோது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததால், தமிழக அரசு புதிய வீடு வழங்க ஒப்புக்கொண்டது இவரது எளிமையின் சான்றாக குறிப்பிடத்தக்கது.
சமத்துவ சிந்தனை மற்றும் சமூக மாற்றப் பணிக்காக பெரியார் விருது, சமூக விழிப்புணர்வு மற்றும் பொதுச்சேவைக்கான பங்களிப்புக்கு பாரதி விருது என இவர் பெற்ற விருதுகளும் பணப்பரிசுகளும் ஏராளம். எனினும் அவற்றை தனது கட்சிக்கே அர்ப்பணித்ததும் சிறப்பு.
உதாரணமாக 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவர். அப்போது தமிழக அரசு வழங்கிய ரூபாய் 10 லட்சம் பணத்துடன் தனது சொந்த பணம் 5000 ரூபாய் சேர்த்து அரசு நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கிய அவரது பெருந்தன்மை பேசப்பட்ட பொருளாகியது. அதேபோல் சமூக நீதி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்காக தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருதும் ஒரு லட்சம் பரிசும் கொடுத்த பொழுது அந்த பணத்தை கட்சிக்கும் விவசாய சங்கத்தினருக்கும் பிரித்துக் கொடுத்தார்.
26 டிசம்பர் 1925.ல் பிறந்து நூற்றாண்டைக் கடந்து உடல் நலக்குறைவு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டுக்காக, எளிய மக்களுக்காக அர்ப்பணித்த மகத்தான தலைவர் 24 நாட்களாக இயற்கையோடு போராடி, தற்போது விண்ணுலகம் சென்ற வாழ்நாள் முழுவதும் மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு எளிமையான, நேர்மையான தலைவருக்கு அஞ்சலிகள்.
உலகம் உள்ளவரை தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர் எனும் பெருமையுடன் அரசியலில் தோன்றிய துருவ நட்சத்திரம்போல நல்ல மனிதராக நிலைத்து நிற்பார் தோழர் நல்லகண்ணு அவர்கள்.