

போலீஸ் இன்னோவாவிலிருந்து இறங்கிய ஏஎஸ்பி அதர்வாவை ஊட்டி குளிர் சில்லென்று தாக்கியது. இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவென தேய்த்துக் கொள்ளத் தோன்றிய எண்ணத்தை உடனடியாக கைவிட்டான்.
"குட் மார்னிங் சார்." விரைப்பாக இன்ஸ்பெக்டர் சல்யூட் அடித்தார்.
அதர்வா பதிலுக்குச் சல்யூட்டி விட்டு பேட்ஜிலிருந்த பெயரை கவனித்து "மார்னிங் நட்ராஜ்" என சுற்றிலும் நோக்கினான்.
நவீன தொழில்நுட்பத்துடன் அல்ட்ரா மாடர்னாக கட்டப்பட்ட வீடு ரிசார்ட்டை போலிருந்தது. உயர காம்பவுண்டில் சிசிடிவிகள் காவலிருந்தன. முசுமுசுவென்று இருந்த கொரியன் புற்களுக்கிடையே துஜா செடிகளில் மான், மயில் உருவங்களை வெட்டியிருந்தனர். லானில் பதிக்கப்பட்ட சுத்தமான மார்பிள் கற்களில் ஷூவை தயக்கத்துடன் எடுத்து வைத்தான்.
வேலைக்காரர்களை அதட்டி விசாரித்துக்கொண்டிருந்த போலீஸ்காரர் தோரணையைச் சட்டென மாற்றிக்கொண்டு விரைப்பானார்.
அவர்கள் அருகே நெருங்கியதும் ஓசையின்றி திறந்த கண்ணாடிக் கதவு காஷ்மீர் செந்நிற கார்பெட்டை விரித்தது. அது உண்மையில் கண்ணாடி டைல்ஸ், கார்பெட்டைப் போன்ற வீடியோவைப் பிரதிபலிக்கிறதென நடக்கையில் உணர்ந்தான். ஹெச்விஏசியின் தயவால் வீடு வெதுவெதுப்பாக இருந்தது.