
1. தலைமுறைகள்!
செல்லப்பா, அந்தப் பள்ளி வளாகத்தினுள் அன்றைக்குத்தான் முதன்முறையாக நுழைகிறான்! வாசல் கேட்டைத் தாண்டியதுமே, பூஞ்சோலைக்குள் புகுந்தாற்போல் ஒரு குளிர்ச்சி! அவன் மனைவி ரமாவின் வகுப்புத் தோழி டீச்சராக அந்தப் பள்ளியில் இருந்ததாலேயே, அவர்கள் பையனுக்கு அங்கு மூன்றாம் வகுப்பில் அட்மிஷன் கிடைத்தது!
செல்லப்பா வாழ்க்கையில் எல்லாமே லேட்தான்! 22 வயதில் கிடைத்த அரசுப்பணி 32 வயதில்தான் பர்மணன்ட் ஆனது! ஒரே பையனை ஒழுங்கான பள்ளியில் சேர்த்தேயாக வேண்டுமென்ற ரமாவின் பிடிவாதத்தால்தான் அவன் ஒத்துக் கொண்டான்!
இன்னமும் அவன் பயம் தெளியவில்லை! நிறைய செலவாகுமே! 'எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம்!' என்று ரமா சொன்னாலும், 'எப்படி? எப்படி?' என்று இப்பொழுதும் அவன் உள்மனம் கேட்டுக் கொண்டுதானிருந்தது!
செல்லப்பாவுக்கு அவன் பெயரின் மீதே பெரும் வெறுப்பு! ஒன்றாம் வகுப்பு ஆசிரியரிலிருந்து, பி.ஏ.,படித்தபோது இருந்த பேராசிரியர் வரை சொல்லி வைத்தாற் போல் அவன்மீது ஏதாவது குறை கண்டுபிடித்து 'செல் அப்பா வகுப்பை விட்டு!' என்று சொல்லும்போதெல்லாம் மனசுக்குள் புழுங்கி, பெயர் வைத்த அப்பாவைத் திட்டுவான்! பெயரை மாற்றிக்கொள்ளவும் உள்ளூற பயம்; மாற்றிக் கொண்டாலும் அதையே காரணங்காட்டி நண்பர்கள் கேலி செய்வார்களோவென்று!
கையில், பையனின் உணவுப் பை லேசாகக் கனத்தாலும், மனதில்...செலவு பயத்தையும் மீறி, ஒரு கர்வம் குடி கொண்டிருப்பதை நன்றாகவே உணர்ந்தான்! 'என் பையன் எவ்வளவு மதிப்பான பள்ளியில்!' என்று ஆனந்தப் பட்டது உள்மனது!
பெஞ்சில் அமர்ந்திருந்த அவன் பையன் சக பையன்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும், மறைவாக நின்று கொண்டு அவன் பேசுவதை தொடர்ந்து கேட்டான்!
"ஆமாண்டா! எங்கப்பா அம்மாவுக்கு நான் செல்லந்தாண்டா! எங்க தாத்தா இதை எப்படியோ முன்னாலே தெரிஞ்சுக்கிட்டு, எங்க அப்பாவுக்கு 'செல்ல அப்பா' அதாவது செல்லப்பான்னு பேர் வைச்சிருக்கார்னா பார்த்துக்கோயேன் அவர் புத்திசாலித்தனத்தை!" என்றான் பையன்!
செல்லப்பாவுக்குப் பொறியில் அடித்தாற் போலிருந்தது! அப்பாவின் மீதும் அவர் வைத்த பெயரின்மீதும் திடீரென ஒரு மரியாதை தோன்றியது! அவன் கண்கள் பனிக்க, அப்பாவை மானசீகமாகப் பாராட்டினான்!
****************
2. தத்து!
டாக்டர் நண்பனின் வார்த்தைகள் ரவிக்கு ஆறுதலாய் இருந்தன!
"டேய் ரவி! உனக்கோ...உன் மனைவி உஷாவுக்கோ எந்த விதமான உடல் ரீதியான பிரச்னைகளும் இல்ல! நிச்சயமாக உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும்! கவலைப் படாதேடா! உஷாக்கிட்டயும் சொல்லு!"
"சொல்லியாச்சுடா! பலமுறை சொல்லியாச்சு! ஆனா அவதான்... வயசாகிக்கிட்டே போகுது! இனி என்னத்த... என்று சந்தேகத்தைக் கிளப்பி 'உடனடியா ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிடணும்'னு நச்சரிக்கிறாடா!"
"அப்புறம் உங்களுக்குப் பிறக்கிற குழந்தையை...."
"அப்படிப் பிறந்தா அதையும் வளர்ப்போம்! தத்து எடுத்த பிறகாவது பிறக்கட்டுமேங்கறா! காசுக்கா பஞ்சம்! நம்மாலதான் ரெண்டுக்கு நாலா வளர்க்க முடியுமேங்கறா! அந்த வசதியைத்தான் ஆண்டவன் நமக்குக் கொடுத்து இருக்கானேங்கறா! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைடா!"
சாலையோர டீக்கடையைத் தாண்டி காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி இருவரும் பேசிக்கொண்டிருக்க... பையன் கொண்டு வந்து தந்த டீயை வாங்கிப் பருகியபடி ரவி தொடர்ந்து சொன்னான்...
"போன மாதம் வரைக்கும்... மெல்லப் பொறக்கட்டுங்க! நமக்கு என்ன வயசா ஆயிட்டுதுன்னுதான் சொல்லிக்கிட்டு இருந்தா! ஆனா எதிர்பாராத விதமா அவளோட அப்பா அம்மாவை ஆக்சிடன்ட்ல பறி கொடுத்ததும் இப்படிப் பேச ஆரம்பிச்சிட்டா!தனிமைடா...தனிமை! அவளை வாட்டுது!" சொல்லிக்கொண்டே டீயை உறிஞ்சியவன் காதுகளில், சாலையோரத்தில் நின்றிருந்த அந்த வயதான தம்பதியரின் பேச்சு விழுந்தது!
'இதப் பாரு சீத்தா! இங்கிருந்த நம்ம புள்ள சொல்லாமக் கொள்ளாம வெளி நாடு போவான்னு நமக்குத் தெரியலியே! இருக்கற காசுல ஆளுக்கொரு டீத் தண்ணியைக் குடிச்சுட்டு ஊரு போய்ச் சேர்ற வழியைப் பார்ப்போம் வா!' - பெரியவர் சொல்ல...சீதாப்பாட்டியோ, 'க்கும்! ஊர்ல என்ன பெரிசா இருக்கு? எதை வெச்சு சாப்பிட? நட்ட நூறு குழியும் நீர்ல மூழ்கி...அவிஞ்சி…அழுகிப்போச்சு!' என்று அங்கலாய்க்க...
ரவிக்குப் பொறி தட்டிற்று! தத்து என்பது குழந்தைக்கு மட்டும்தானா? இந்தப் பெரியவர்களை நான் தத்து எடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றால்... உஷாவும் மகிழ்வாள்! இறந்த தாய் தந்தையரே திரும்பி வந்ததைப் போல வீடும் கலகலப்பாகும்!வாழ வழியின்றித் தவிக்கும் அந்த வயதானவர்களும் மகிழ்வார்கள்!
ரவி முகத்தில் புதுப் பிரகாசம்! அந்த வயதான தம்பதியரை நோக்கி நடந்தான். டாக்டர் நண்பரும் பின் தொடர!