

மார்கழி வந்தாலே குரோம்பேட்டையின் வீதிகளில் ஒரு தனித்த உயிர்ப்பு தோன்றுகிறது. அதிகாலையின் குளிர் காற்றோடு, ஒலிப்பெருக்கியின் உதவி இல்லாது மென்மையாக எழும் குழந்தைகளின் குரல்கள் ஆண்டாளின் திருப்பாவையையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையையும் வீதிகளை நிரப்புகின்றன. இது, குழந்தைகளே வழிநடத்தும் 'குருக்ருபா'வின் மார்கழி வீதி பஜன். கோவில்களின் சுற்றுச்சுவர்களைத்தாண்டி வீதிகளில் பக்தி மணம் கமழ்கிறது.
நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த வீதி பஜனை, ஒரு நிகழ்வாக அல்ல... முப்பது நாட்கள் இடைவிடாமல் நடைபெறும் ஓர் ஆன்மீக வழக்கமாக மாறியுள்ளது.
பள்ளி, தேர்வுகள், வேலைப்பளு என எதுவும் தடையில்லை. மார்கழியின் ஒவ்வொரு நாளும், விடியற்காலையில் 50 முதல் 150 குழந்தைகள் உற்சாகத்துடன், கடமைக்காக அல்லாமல் மகிழ்ச்சி பொங்க கூடுகின்றனர்.
இந்த முயற்சியின் அழகு, அதன் குழந்தை மைய அணுகுமுறையில் தான் உள்ளது. பாடல்கள் பாடுவதும், ஆண்டாள்–மாணிக்கவாசகரின் பல்லக்கு தூக்குவதும், ஒழுங்கையும் ஒற்றுமையையும் பேணுவதும், அனைத்தையும் குழந்தைகளே பொறுப்புடன் செய்கிறார்கள்.
இங்கு பாசுரங்கள் பாடமாகக் கற்பிக்கப்படுவதில்லை. தினந்தோறும் பாடி, கேட்டு, உணர்ந்து உள்ளத்தில் தானாகவே பதிகின்றன.
குருக்ருபா வீதி பஜனையை உயிர்ப்புடன் வைத்திருப்பது, அதில் கலந்துள்ள உற்சாகமும் விளையாட்டுத் தன்மையும்தான்.
வீதி பஜனையை முடித்து, குழந்தைகள் குதூகலத்துடன் கோலாட்டம், அந்தாக்ஷரி, மார்கழி வினாடி வினாக்கள், ஜால்ரா பயிற்சிகள் என, 30 நாட்களும் குழந்தைகள் சோர்வின்றி, ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். வீதிகளே புனிதமான ஒரு வகுப்பறையாக மாறுகின்றன.
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்…” என்ற பாசுரம் குழந்தைகளின் இன்குரலில் ஒலிக்கும்போது, வீட்டின் வாசல் கதவுகள் திறக்கிறது. விளக்குகள் ஏற்றப்படுகின்றன, மக்கள் புன்னகையுடன் பக்தியை வரவேற்கின்றனர். இங்கே பக்தி ஒரு தனிப்பட்ட வழிபாடு அல்ல... அது சமூக அனுபவமாக மாறுகிறது.
ஓர் இயக்கமாக மாறியிருக்கும் இந்த முழுப் பயணத்திற்கும் வழிகாட்டியாக இருப்பவர் குரு ஸ்ரீமதி புவனா கார்த்திக்.
அவர்களின் தொலைநோக்கு வழிநடத்தலில், இந்த மார்கழி வழிபாடு குரோம்பேட்டையைத் தாண்டி, அடையாறு, கொடுங்கையூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், மாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் விரிந்திருக்கிறது. யூடியூப் நேரலைகள் மூலம், மூத்தோரும் தொலைதூர பக்தர்களும் இந்த தெய்வீகக் காலைகளை வீட்டிலிருந்தே அனுபவிக்கின்றனர்.
இந்த இயக்கத்தின் முக்கியத்தூண்களாக இருப்போர் குரு க்ருபா இசைப்பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் பொறுமையுடனும் பக்தியுடனும், திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, மார்கழியின் ஒழுக்கத்தையும் இசைத் தூய்மையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றனர்.
பெற்றோர்கள் அன்புடன் தயாரித்து வழங்கும் எளிய பிரசாதங்கள், இந்த மார்கழி பயணத்தை குடும்பங்களின் கூட்டு அனுபவமாக மாற்றுகின்றன. வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பு நாட்கள், இந்த அனுபவத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றன.
2026 ஜனவரி 4 அன்று நடைபெற்ற மாபெரும் வீதி பஜனில், 500க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பக்தியை அனுபவித்தனர்.
அன்றைய மாலை நடைபெற்ற கொண்டாட்ட விழாவில், 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
குரு க்ருபாவின் மார்கழி வீதி பஜனின் உண்மையான வெற்றி, எண்ணிக்கைகளில் இல்லை. ஒரு நாளும் தவறவிடக்கூடாது என்று விடியற்காலையில் எழுந்து, உற்சாகமாகக் கலந்துகொள்ளும் குழந்தைகளின் ஆர்வத்தில் உள்ளது.
“மார்கழித் திருவிழா எங்கள் திருவிழா” என்று அவர்கள் பெருமையுடன் சொல்வதில் உள்ளது. இப்பயணம் இங்கே முடிவதில்லை. அடுத்த ஆண்டை எதிர்நோக்கிக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!