
கனவுகள் பலிக்குமா? அனைவரும் கனவு காண்கிறோம். அவையனைத்தும் பலிக்குமா? எனில் கேள்விக்குறியே. ஆபிரகாம் லிங்கன் தன் வாழ்நாளில் நாட்டின் நலன் சார்ந்து பல கனவுகளை கண்டார். அவற்றில் சில அவர் வாழும் காலத்திலேயே நிறைவேறியது.
லிங்கன் தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரு கனவை கண்டதாகவும், 1865 ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி படுகொலை செய்யப்படுவதற்கு, மூன்று நாட்களுக்கு முன்பு அதை தனது மனைவி மேரி டோட் மற்றும் நண்பரும் சுயசரிதை வரலாற்றாசிரியருமான வார்டு ஹில் லாமனுடன் கலந்துரையாடியதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
அதன்படி..,
"நான் அதிக வேலைப்பளு காரணமாக மிகவும் தாமதமாக படுக்கைக்குச் சென்றேன். மிகுந்த களைப்புடன் இருந்ததால் உடனே தூங்கி விட்டேன். அன்று எனக்கு ஒரு கனவு வந்தது.
மயான அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன், பலர் அழுது கொண்டிருந்தனர். நான் என் படுக்கையிலிருந்து எழுந்து படிகளில் கீழே இறங்கி வந்தேன் என நினைக்கிறேன்.
அங்கே அதே அழுகையால் அமைதி குலைந்தது. ஆனால் அழுபவர்களை அங்கு காணமுடியவில்லை. நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்; எங்கும் யாரும் கண்ணில் தென்படவில்லை.
எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அறையில் இருந்த அனைத்து பொருட்களும் எனக்கு பரிச்சயமானவைகளாக இருந்தன.
ஆனால் துக்கம் மேலிட அழுத நபர்கள் யாருமில்லை. எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்!! நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தன.
கிழக்குப் பக்கமாகச் சென்று அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஓர் ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது.
அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடை அணியப்பட்ட ஒரு பிரேதம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.
அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது.
நான் அங்கிருந்த ஒரு படைவீரனிடம் கேட்டேன் "யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார்?” என்று. படைவீரன் பதில் சொன்னான் "ஜனாதிபதி. அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்”.
பிறகு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை ஏற்பட்டது. நான் விழித்துக் கொண்டேன். நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அது வெறும் கனவு தான் என்ற போதிலும், எனக்கு இதுவரை அதுதான் விநோதமாக தொல்லை தந்தது."
இதை தவிர்த்து, லிங்கன் தான் கண்ட பல கனவுகளை தன் அமைச்சரவை சகாக்களுடன் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்வுகள் கனவுகளின் முன்கணிப்பு சக்தியில் லிங்கனின் ஆர்வத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அவர் தனது சொந்த மரணத்தை முன்கூட்டியே உணர்ந்திருந்தார் என்பதற்கு போதுமான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை.
லிங்கன் தன்னை பற்றி கண்ட கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை போலவே, தன் தேசநலன் சார்ந்து அவர் கண்ட கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றே விரும்பினார். தோல்விகள் துரத்திய போதும் அது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தனக்கான வாய்ப்பு வரும் என்று தன் கடமையைத் தொடர்ந்து செய்து வந்த ஆபிரகாம் லிங்கன், இல்லாது போயிருந்தால் கறுப்பினத்தவர்கள் சுயமரியாதை பெற்றிருக்க முடியாது என்பதை விட, அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்ற மாபெரும் சிறப்பை இழந்திருக்கும்.
ஆக.., கற்பனைகள் கொண்டு வரும் கனவுகளை நனவாக மாற்றும் பெரும் முயற்சியில், சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள் + கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது!