

ராம்கோ நிறுவனத்திலிருந்து அந்த நிறுவனத்தின் தலைவர் ராமசுப்ரமணிய ராஜாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும் என்று பிரபல பத்திரிகையாளர் ராணிமைந்தனுக்கு கோரிக்கை வந்தது. மதுரைக்கு விமான டிக்கெட், ராஜபாளையம் செல்ல கார் என்று சௌகரியமான ஏற்பாடு. ராம்கோ விருந்தினர் மாளிகையில் போய் இறங்கினார் ராணி மைந்தன். ராம்கோ உயர் அதிகாரி ஒருவர் பிற்பகல் நான்கு மணிக்கு ராமசுப்ரமணிய ராஜாவுடன் சந்திப்பு என்று தெரிவித்தார். எத்தனை மணிக்கு நாம் புறப்பட வேண்டும்? என்று ராணி மைந்தன் கேட்க, அந்த அதிகாரி, “ நீங்கள் எங்கேயும் போகவேண்டாம்! சேர்மன் இங்கே வருவர் உங்களை சந்திக்க!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட, அதிர்ந்து போனார் ராணி மைந்தன்.
“ராணி மைந்தனை நாம்தான் அழைத்திருக்கிறோம். நமது விருந்தினரான அவரை முதன் முதலில் நான் போய் சந்திப்பதுதான் முறை!“ என்று சேர்மன் சொல்லிவிட்டார் என்று அவர் சொன்னபோது, ராணி மைந்தன் வியந்து போனார். சொன்னபடியே நான்கு மணிக்கு வந்து வெகுநேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றார் ராம்கோ சேர்மன்.
ராம்கோ சேர்மன் உட்பட எழுபதுக்கும் அதிகமானவர்களின் வாழ்க்கை வரலாற்றினை புத்தகமாக எழுதிய பெருமைக்குரியவர் ராணிமைந்தன். இந்தப் பட்டியலில் ஏவி.மெய்யப்பன், ஆர்.எம்.வீரப்பன், பாலமுரளி கிருஷ்ணா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, பத்திரிகை ஆசிரியர் சாவி, முன்னாள் சபாநாயகர் க.ராசாராம், மலைச்சாமி ஐ.ஏ.எஸ். எக்ஸ்னோரா எம்.பி. நிர்மல், இலக்கியவீதி இனியவன் என பலரும் அடங்குவர்.
ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட மூத்த பத்திரிகையாளர் ராணிமைந்தன், எண்பது வயதில் “வந்த பாதை – ஒரு பார்வை” என்ற பெயரில் தன் சுய வரலாற்றினை புத்தகமாக எழுதி இருக்கிறார். அதில் அவர் பதிவு செய்துள்ள ஒரு அனுபவம்தான் மேலே கூறியது.
திருக்கழுக்குன்றத்தை பூர்வீகமாகக் கொண்ட ராணி மைந்தன் சென்னை ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபடியே பல பத்திரிகைகளில் ஏராளமான பேட்டிக் கட்டுரைகள் எழுதியவர். ரிசர்வ் வங்கி ஊழியர்களில் படைப்பு ஆர்வத்துக்கு வடிகாலாக ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட அன்றைய தினமணி கதிர் ஆசிரியர் சாவியை அழைத்தபோது ஏற்பட்ட அறிமுகம், அவரை ஒரு துணுக்கு எழுத்தாளராக்கியது. அதன் பின் சாவி அளித்த ஊக்கத்தில் பத்திரிகையாளராக உருவானவர். கதிர், குங்குமம், சாவி என்று சாவியுடனேயே பயணித்தவர்.
ஆம்! ஆசிரியர் சாவி ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என்று சென்றபோது இவரையும் உடன் அழைத்துச்சென்று பயணக்கட்டுரைகள் எழுதச் செய்தார். “பர்சை வெளியில் எடுக்காமல் இப்படிப் பல அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன்” என்று சொல்கிறர் ராணிமைந்தன்.
ஒரு பத்திரிகையாளராக ராணிமைந்தன் இந்தப் புத்தகத்தில் பல சுவாரசியமான அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். உதாரணமாக, சில பிரபலங்கள் தங்கள் ஆரம்பக்காலத்தில் செய்த வேலையை மறுபடி நினைவூட்டும் வகையைல் செய்யச்சொல்லி, பேட்டி கண்டிருக்கிறார். அதற்காக வி.ஜி.பன்னீர்தாஸ், சைதாப்பேட்டை பகுதியில் மீண்டும் காலை நேரத்தில் சைக்கிளில் சென்று நியூஸ் பேப்பர் போட்டார். ம.பொ.சி. செங்கோல் அச்சகத்தில் அச்சுக் கோப்பாவர் ஆனார். ஈசன் குழுமத் தொழிலதிபர் ஈஸ்வரன், சைக்கிள் ரிப்பேர் பார்த்தார், இயக்குனர் பாரதிராஜா ஒரு பெட்ரோல் பங்க்கிற்குப் போய் பெட்ரோல் போட்டார்.
அன்னக்கிளி படம் வெளியாகி, தமிழ் ரசிகர்கள் இளையராஜா என்ற பெயரை பரவசத்துடன் உச்சரித்த நேரத்தில் இளையராஜா தன் ஒலிபப்திவுப் பணிகளை முடித்த பிறகு இரவு எட்டு மணிக்கு மேல் அவரோடு உட்கார்ந்து அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை பேட்டி கண்டு 30 வாரங்களுக்குத் தொடராக எழுதி இருக்கிறார்.
சேலத்துக்கு அருகில் எருமைநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தில் வயது வந்த பெண்கள் ரவிக்கை அணிவதற்குத் தடை கடைபிடிக்கப்படுவதாக தகவல் அறிந்து அந்த கிராமத்துக்கு நேரில் சென்று ரவிக்கை பிரச்னையின் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசி அங்கே திடீர் சிக்கல்களை சாமர்த்தியமாக சமாளித்துக் கட்டுரை எழுதியது ஒரு சவாலான அனுபவம்தான்.
மெரீனா பீச்சில் சுண்டல் விற்ற வித்தியாசமான அனுபவத்தையும் விவரித்திருக்கிறார்.
தன் மகன் லண்டனில் பணியாற்றியபோது அங்கே சென்று பார்த்த டூசாத் மெழுகுச் சிலை மியூசியம், இங்கிலாந்து பாராளுமன்றம், அரண்மனை, விம்பிள்டன், கிரீன்விச் பற்றியெல்லாம் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.
ஆசிரியர் சாவிக்கு 85 வயதானபோது “சாவி-85” என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார் ராணிமைந்தன். அதன் ஒரு பிரதியில் சாவி ,”என் வாழ்க்கையை ஒரு ஜூசாகப் பிழிந்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்” என்று தன் கைப்பட எழுதிக் கையெழுதிட்டுக் கொடுத்ததை நன்றியோடு பதிவு செய்திருக்கிறார்.
பொதுவாக பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் இதுபோன்ற வாய்ப்புகளும், அனுபவங்களும் கிடைக்காது. ராணிமைந்தன் தன் பலதரப்பட்ட அனுபவங்களையும், தான் சந்தித்த, பழகிய மனிதர்களையும் சுவைபட பதிவு செய்திருக்கிறார்.