
சுட்டீஸ்! உங்களுக்காக சிறுகதைகள், நாவல்கள், சித்திரக்கதைகள், அறிவியல் கதைகள் என ஏராளமான நூல்களை எழுதி தன் வாழ்நாள் முழுவதும் உங்களை மகிழ்வித்தவர் வாண்டுமாமா. கோகுலம் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவரைப் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாமா ?
கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை வாண்டுமாமா ஆக்கியவர் ஆனந்தவிகடனில் ஓவியராகப் பணியாற்றிய மாலி. வாண்டுமாமா, கௌசிகன், மூர்த்தி போன்ற புனைப்பெயர்களிலும் கதைகள் கவிதைகளைப் படைத்துள்ளார்.
திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட வாண்டுமாமா, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமழம் என்ற கிராமத்தில் 21 ஏப்ரல் 1925 அன்று பிறந்தார். திருச்சி நேஷனல் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் 1944 ஆம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இவர் எழுதிய முதல் சிறுகதை “குல்ருக்” என்ற தலைப்பில் கலைமகள் இதழில் பிரசுரமானது. தொடர்ந்து எழுத்தில் அதிக ஆர்வம் ஏற்படவே பள்ளி நாட்களில் “பாரதி” என்ற கையெழுத்துப் பிரதியினை நடத்தினார்.
கௌசிகன் என்ற புனைப்பெயரில் இவர் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வந்தார். கல்கியில் சர்குலேஷன் மானேஜராகச் சேர்ந்து பின்னர் ஆசிரியர் குழுவில் இணைந்தார். இவருடைய சிறார்களுக்காக எழுதும் திறனைக் கண்ட கல்கி நிறுவனம், கல்கியில் “சிறுவர் விருந்து” என்றொரு பகுதியைத் தொடங்கியது. அது அதிக வரவேற்பு பெறவே கல்கி நிறுவனம் “கோகுலம்” என்ற சிறார்களுக்கான பிரத்யேகப் பத்திரிகையினைத் தொடங்கியது.
தொழிலாளர் பிரச்னை காரணமாக ஒரு கட்டத்தில் கல்கி, கோகுலம் இரண்டும் நிறுத்தப்பட்டன. பின்னர் இவர் குங்குமத்தில் இணைந்து பணியாற்றினார். ஒரு வருட இடைவெளியில் கல்கி, கோகுலம் இதழ்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. வாண்டுமாமா மீண்டும் கல்கி நிறுவனத்தில் இணைந்தார். தொடர்ந்து தினமணிக்கதிரிலும், “பூந்தளிர்” என்ற சிறார்களுக்கான இதழிலும் ஆசிரியர் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் வெற்றிகரமாக பூந்தளிர் இதழை நடத்தினார்.
தன் வாழ்நாள் முழுவதையும் சிறார் இலக்கியப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் வாண்டுமாமா என்றால் அது மிகையாகாது. வாண்டுமாமா சிறார்களுக்காக 65 சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்களையும், 28 சித்திரக் கதைப் புத்தகங்களையும், 45 அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.
சிறார் இலக்கியப் பணிகளுக்காக வாண்டுமாமா ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கோயமுத்தூரில் 1987 ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கத்தினர் நடத்திய எட்டாவது குழந்தைகள் இலக்கிய மாநாட்டில் இவருடைய சிறார் இலக்கியப் பணிகளைப் பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்தார்கள். விஜிபி சந்தனம்மாள் அறக்கட்டளையினர் 1990 ஆம் ஆண்டில் வாண்டுமாமாவின் இலக்கியப் பணிகளுக்காக சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்கள். திருப்பூர் தமிழ்ச் சங்கம் 1999 ஆம் ஆண்டில் இவருடைய “அறிவியல் தகவல்” என்ற மூன்று தொகுப்புகளுக்காக பரிசு வழங்கி கௌரவித்தது. திருச்சி தமிழ்ச் சங்கம் மற்றும் அழ.வள்ளியப்பா அறக்கட்டளையும் இணைந்து இவர் எழுதிய “வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம்” என்ற நூலுக்கு பாராட்டுக் கேடயம் வழங்கி சிறப்பித்தது. வாண்டுமாமா எழுதிய ஏழு நூல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
சிறார் இலக்கியமே தன் வாழ்வின் இலட்சியம் என்ற குறிக்கோளுடன் தன் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்த வாண்டுமாமா, 12 ஜீன் 2014 அன்று காலமானார். இவர் படைத்த சிறார் இலக்கியங்கள் என்றும் நம் குழந்தைகளை வழிநடத்திச் சென்று அழியாப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.