

ஹோட்டல் கல்லாப்பெட்டி மேஜை அழைப்பு மணி, காதில் பென்சில் சொருகிய சர்வர், பஸ் கண்டக்டர், டாக்டர், ஹெட் மாஸ்டர், பேங்க் ஏஜெண்ட், பங்களா வீட்டு காலிங் பெல் என பல காலங்களின் அனுபவங்களை நகைச்சுவை கலந்த நினைவுகளாக இந்த கட்டுரை பதிவு செய்கிறது. தொலைபேசி, பேஜர், மொபைல், AI வந்தாலும் அழைப்பு மணி மட்டும் அரசு அலுவலகம், டாக்டர் மேஜை, வீடுகளில் இன்னும் ஒலிக்கிறது.
அந்தக்காலத்து கிளப்புக் கடைகள் என்றழைக்கப்படும் ஹோட்டல்களில் கல்லாப்பெட்டி மேஜைகளில் அழைப்பு மணி கட்டாயம் இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு எதிரில் வந்து நிற்பவருக்கு சாப்பிட்ட பில் எவ்வளவு என்பதை அறிய ஹோட்டல் முதலாளியோ மேனேஜரோ அழைப்புமணியை ஒரு அமுக்கு அமுக்குவார்.
உடனே உஷாராகும் அவருக்குப் பரிமாறிய சர்வர் உள்ளே நின்றுகொண்டு முன்னால நிக்கிற கதர்சட்டை, “சார்வாளுக்கு ஆறணா, கடுக்கன் போட்ட அண்ணாச்சிக்கு எட்டணா...” என்று குரல் கொடுப்பார்.
அந்தக்காலத்தில் பில் எழுதுவது, துண்டுச்சீட்டு கொடுத்து அனுப்புவதெல்லாம் கிடையாது. படிக்காத முதலாளிகளுக்கும் சர்வர்களுக்கும் அனைத்தும் மனக்கணக்குதான்.
கொஞ்ச காலம் கழித்துதான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் சப்ளையர் வேலைக்கு வந்த பிறகு உடுப்பி ஹோட்டல் பிராமணாள் கபே என்கிற கிளப்புக்கடைகளில் துண்டுச்சீட்டில் பில் எழுதிட, காதில் பென்சிலை சொருகிக்கொண்டுதான் சர்வர்கள் பிஸியாக திரிவார்கள். அது போலவே பஸ் நடத்துனர்களும் கணக்குப் பிள்ளைகளும் காதில் பென்சில் சொருகி வைத்துக்கொள்வார்கள்.
அவர்களுக்குக் காதுகள் படைக்கப்பட்டதே பென்சில் சொருகத்தான் என்பது போல.
பஸ்ஸர், காலிங் பெல் என்றழைக்கப்படும் இந்த அழைப்புமணி டாக்டர்களின் இருக்கைகளிலும் ஹெட் மாஸ்டர் ரூமிலும், பேங்கு ஏஜெண்ட் அறையிலும் கட்டாயம் இருக்கும்.
அந்தக்கால பங்களா டைப் வீடு களிலும் வாசலில் அழைப்பு மணி பொத்தான் இருக்கும். அதை அமுக்கினால் அழைப்பு மணி சத்தம் நமக்கு மட்டும் கேட்காது.
அந்தக்கால கல்கியில் ஒரு ஜோக் வந்தது. ‘தயவு செய்து வீட்டுக்காரர்களிடம் அனுமதி பெற்று காலிங் பெல்லை உபயோகிக்கவும்.’
ஏனெனில் காலிங் பெல் அறிமுகமான காலகட்டங்களில் சிறுவர்களின் தொல்லை பெருந்தொல்லையாக இருக்கும். அமுக்கிவிட்டு ஓடி விடுவார்கள். சினிமாவில்கூட வடிவேலு ஒரு சிறுமிக்கு உயரம் எட்டாத அழைப்பு மணியை அமுக்கி அழைத்து வீட்டுக்காரனிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்.
நமக்கு சின்னப்பிள்ளையிலிருந்து இந்த பஸ்ஸரையும் பஸ் ஏர் ஹாரனையும் அமுக்கி அந்த சத்தத்தை கேட்டு ரசிப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். அதே போல ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாதபோது அழைப்பு மணியை அமுக்கி நர்சு அக்காவிடமும், டிரைவர் இல்லாதபோது பஸ் ரப்பர் ஹாரனை அமுக்கி கண்டக்டரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டதும் ஊர் பஞ்சாயத்து வரை வந்த ஆவலாதிகள் ஏராளம்.
காலப்போக்கில் தொலைபேசி, பேஜர் பட்டன், மொபைல் போன், டச் மொபைல், ஆப்பிள் போன் டேப்லட், லேப்டாப், டி.வி, இன்டர்காம் AI என்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.
ஆனாலும் இந்த கிராம போன், லவுட் ஸ்பீக்கர், பயாஸ்கோப் சினிமா புரொஜக்டர், ஃபிலிம் சுருள் கைக்கேமிரா வானொலிப் பெட்டி டிரான்ஸ்சிஸ்டர். டூ இன் ஒன் டேப் ரிக்கார்டர், பூனைக்கரப்பெட்டி எனப்படும் கிராமபோன் இசைத்தட்டு, LP ரிக்கார்டு, டேப் ரிக்கார்டர், சி.டி. பென்டிரைவ், தந்தி, டெலிபோன், பேஜர், டைப் ரைட்டர் என்று கற்பனைக் கெட்டாத அற்புதங்கள் என்று நாம் நினைத்தவையெல்லாம் காயலாங்கடைக்குப் போனாலும் இந்த அழைப்பு மணிகள் இன்னமும் அரசு அலுவலகங்களிலும் டாக்டர்களின் மேஜைகளிலும் வீடுகளிலும் எஜமானர்களின் குரல்போல ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியிலும், நமது பாரம்பரிய காலத்தின் அழகான ஞாபகங்களையும் சுவாரஸ்யமான கலாச்சார அனுபவங்களையும் மீட்டெடுத்து, மனதிற்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் பெறுங்கள்.