உலகிலேயே... 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் யார் தெரியுமா?

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவரான வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
VO Chidambaram Pillai
VO Chidambaram Pillai img credit - Wikipedia
Published on

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம். அதிலும் கோவை சிறைதான், வ.உ.சிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்.

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்.

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டு தான் வஉசியை அடைத்து வைத்தனர்.

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்; அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரிசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்.

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்.

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்னை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

இதையும் படியுங்கள்:
சுதந்திர போரின் முதல் வீரர் பூலித்தேவர் மறைந்த இடம் எங்குள்ளது தெரியுமா?
VO Chidambaram Pillai

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்! இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்!

ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை.)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி.

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி. ஆனால், வஉசியின் வரலாற்றை மறைத்துவிட்டு வாஞ்சிநாதனை பிரதானப்படுத்த காரணம் என்ன?

1806-ல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857-ல் வந்த சிப்பாய் கலகத்தை பெரிதுபடுத்த காரணம் என்ன?

இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!

இதையும் படியுங்கள்:
சுதந்திரப் போராட்ட வீராங்கனை உதாதேவியின் தைரியமும் தியாகமும் பற்றி தெரியுமா?
VO Chidambaram Pillai

தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com