கொஞ்சம் கூலா இருங்கப்பா… ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், ஒரு போரின் தொடர் விளைவுகள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நாடுகளையும் தாண்டி, மற்ற நாடுகளுக்கும் பரவுகின்றன. காரணம் உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதாரங்கள், தகவல் தொடர்புகள், விநியோகச் சங்கிலிகள் இன்றைய காலத்தில் இறுக்கமாகப் பிணைந்துள்ளது தான். இதனால் வெகு தூர தொலைவில் நிகழும் ஒரு மோதல்கூட, உலகின் வேறொரு மூலையில் வசிக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைச் சீர்குலைக்கிறது. உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, இணையவழித் தாக்குதல்கள் மற்றும் அதிகரித்த அரசியல் பதட்டங்கள் போன்றவை, ஒரு போரால் தனிநபர்கள் எவ்வாறு மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் ஆகும். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி யோசிப்பது இப்போது அனைவருக்கும் அவசியமாக்குகிறது.
அவசியமான தற்காப்புகள்:
மிகவும் நடைமுறைக்குரியப் பாதுகாப்புகளில் ஒன்று நிதித் தயார்நிலை ஆகும்.
பல்வகைப்படுத்தப்பட்ட (diversified) சேமிப்புகளைப் பராமரிப்பது, ஒரே ஒரு வருமான ஆதாரத்தை அதிகமாகச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பது மற்றும் அவசரகாலதிற்கென்று நிதிகளை வைத்திருத்திருப்பது ஆகியவை போரினால் ஏற்படும் பணவீக்கம் அல்லது சந்தை நிலையற்றத் தன்மையின் தாக்கங்களைத் தணிக்க உதவும்.
டிஜிட்டல் பாதுகாப்பும் அதே அளவு முக்கியமானது. மோதல்களில் இணையவழிப் போர்கள் அதிகளவில் இடம்பெறுவதால்; தனிநபர்கள் தங்களுக்கான வலுவான கடவுச்சொற்கள் (passwords), மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளின்போது அடிக்கடி பரவும் இணையவழித் தவறான தகவல்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை செய்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தனிநபராக ஒருவர் குறிப்பிட்ட நாட்கள் வரை போராடலாம்; ஆனால், அதைத் தாண்டி நாம் ஏற்படுத்தியுள்ள சமூகத் தொடர்புகள் (community networks) அதைவிட ஒரு சக்திவாய்ந்த கேடயமாகச் செயல்படுகின்றன. உள்ளூர் குழுக்கள், அண்டை வீட்டார் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது, போர் போன்ற நிச்சயமற்றக் காலங்களில் பலரின் உதவிகளை அணுக வைக்கிறது. இது நம் உணர்ச்சியையும் கட்டுப்படுத்த உறுதி செய்கிறது.
மற்றொரு பாதுகாப்பு சுயசார்பு நடைமுறைகளில் அடங்கியுள்ளது. அடிப்படை முதலுதவி கற்றுக்கொள்வது, முன்கூட்டியே கணித்து அத்தியாவசியப் பொருட்களை அளவோடு சேமித்துவைப்பது அல்லது சிறிய அளவிலான உணவு பொருட்களைச் செடியாய் வளர்ப்பது போன்ற எளிய நடவடிக்கைகள் உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவும்.
மன உறுதித்தன்மையும் அதே அளவு முக்கியமானது. நினைவாற்றல் பழக்கங்களை வளர்த்துக்கொள்வது, மன உளைச்சல் தரும் செய்திகளுக்கு ஆளாவதைக் குறைப்பது, ஆக்கப்பூர்வமான வழக்கங்களில் கவனம் செலுத்துவது நம் மன அமைதியைத் தக்கவைக்க உதவுகிறது.
இறுதியாக உலகளாவிய விழிப்புணர்வும், தகவமைப்பும் மிக முக்கியமானவை. சர்வதேச நிகழ்வுகள் உள்ளூர் யதார்த்தங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செய்யவேண்டிய மாற்றங்களை முன்கூட்டியே கணித்து வாழ்க்கைமுறைகளைச் சரி செய்ய தனி நபர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.