“சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறிய கதை
நமக்கெல்லாம் உயிரின் வாதை…….”
என்று தண்டனையைப்பற்றிப் புகல்வார் பாவேந்தர். அந்நாட்களில் தண்டனையானாலும், போர் ஆனாலும் அனைத்தும் அறத்தின் வழியே நடைபெற்றுள்ளன.
கொல்வதிலும் நேர்மையைக் கடைப்பிடித்துக் குவலயத்தாருக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள் நம் முன்னோர்கள். ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஆசையிலும், வணிகத்தைப் பெருக்கும் நோக்கத்திலும், அசுவமேத யாகங்கள் செய்கின்ற போதும், அடாவடித்தனம் செய்யும் அண்டை நாட்டினரை அடக்கி வைக்கவும், பிற நாட்டினரின் பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடிக்கவும், வரலாற்றில் பெயரைப் பிரகாசிக்கச் செய்யவும், பங்காளிச் சண்டைகளாலும், விரும்பாத பெண்களை விவேகமற்றுச் சிறையெடுப்பதாலும் அக்காலத்தில் போர்கள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னனுடன் மன்னன் பொருதுவதும், தளபதியுடன் தளபதி சண்டை இடுவதும், வீரர்களுடன் வீரர்கள் போரிடுவதுமே யுத்த நடைமுறை.
மாலையானதும் போரை நிறுத்தி விட்டு, காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும், இறந்தவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதுமே வழக்கம். போரின் உக்கிரமத்தில் யாராவது ஆயுதத்தை இழந்து நிராயுதபாணியாக நின்றால் அவர்களை சிரமப்படுத்தாமல் விட்டு விடுவார்கள்.
“இன்று போய் நாளை வா!” என்று ஶ்ரீராமன் ராவணனிடம் கூறியது இதனால்தான்! “இன்று போய் நாளை வா என்று எனை ஒரு மானிடனும் புகல்வதோ!” என்று ஆற்றாமையில் அவன் அகற்றியதும் வீரமே.
முதுகில் காயம் படுவது இழுக்கென்று நினைப்பதோடு, முதுகில் காயத்தை ஏற்படுத்துவதும் பெரும் இழுக்கென்றே வீரர்கள் நினைத்தார்கள். பயந்தோடுபவனைப் பின்பற்றிப் புண் ஏற்படுத்துவது பாவம் என்றே கருதினார்கள். சில சமயங்களில் வீரர்களின் எண்ணிக்கையைப் பெரிதாகக் காட்டி, எதிரியை மிரளச் செய்வதற்காகப் புலவர்களையும், பொது மக்களையுங்கூட வீரர்கள் உடையில் போர்க்களத்தில் இறக்குவார்களாம். ஆனால், அனைத்திலும் ஒரு நேர்மை இருக்குமாம். தந்திரத்திலும் ஒரு சர்வ நியாயம் கடைப்பிடிக்கப்படுமாம்.
வேண்டிய அளவுக்கும் மேலாகவே அக்கிரமங்களையும், விரோத, குரோதங்களையும், அனைத்துப் பாவச் செயல்களையும் துரோகங்களையும் அரங்கேற்றி விட்டு அதற்குப் பெயர் சாணக்கியத் தனம் என்று அவரையும் வம்புக்கிழுக்கும் வாழ்க்கை முறை அந்தக் காலத்தில் அறவே இல்லை. அதனால்தான் மன்னர்கள் மகேசன்களாகப் போற்றப்பட்டார்கள். நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஆழ் மனத்தில் தங்கள் வேந்தர்களைக் கடவுளாகவே பாவித்துப் பக்தி செலுத்தினார்கள்.
சரி! இப்பொழுது நம் காலத்திற்கு வருவோம்.
எல்லைகளில் அத்து மீறல்கள்; எதற்கெடுத்தாலும் சண்டைகள்;
யுத்த களமாக மாறிப்போகும் பள்ளி-கல்லூரிகள், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள்
எதிரிப்படையே இல்லாத இடங்களில் ஏகமாகக் குண்டு மழை!
இவர்கள் அழிப்பது யாரை? அப்பாவிப் பொது மக்களை!
அரும்பாய் இருக்கும் அழகுச் சிறுவர்-சிறுமிகளை!
மலர்ந்து மணம் வீசும் முன்னால் சிறார்கள் அழிக்கப்படுவது சிறப்புத்தானா?
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? யாரை வெறுத்தார்கள்? எவருக்குத் தீங்கிழைத்தார்கள்?
பார்த்துப் பார்த்து பல மாதங்களாக…வருடங்களாக உழைத்து உருவாக்கப்படும் உயர் கட்டடங்களை,
நொடியில் இடித்துத் தரைமட்டமாக்குவதால் என்ன பயன்? யாருக்கு லாபம்? ஏன் இந்தக் கொலை வெறி?
ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பிடிக்கவில்லையா? யுத்த களத்தை முதலில் தீர்மானியுங்கள். அங்கு இரு நாட்டு வீரர்களையும் அனுப்பிப் போரிடச் செய்யுங்கள்.
தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடா? சண்டைதான் தீர்வென்று முடிவு செய்கிறீர்களா? இரு தலைவரும் அடித்துக் கொள்ளுங்கள்.
உண்மையில் நடப்பது என்ன?
உரியவர்களை விட்டு விட்டு ஊராரைக் கொல்கிறார்கள்! சண்டையிட முடிவெடுக்கும் தலைவர்கள் பல அடுக்குப் பாதுகாப்புகளுடன் ஏ.சி.,யில் இன்பம் துய்க்க, வாழ வேண்டிய இளைஞர்களும், வாழ்க்கையில் காலடி வைக்கும் சிறார்களும், அமைதியாக வாழும் அப்பாவி மனிதர்களும் அநியாயமாகச் சாகடிக்கப்படுகிறார்கள்!
இதுதான் இன்றைய நிதர்சனம்!
நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதும் நிதர்சனம்!
‘வெந்ததைத் தின்று விட்டு விதி வந்த அன்றைக்குச் சாவது!’என்ற கூற்றல்லவா உண்மை!
இருந்தாலும் வெற்றிக்கு உரிமை கொண்டாடிப் புகழ் பெறுவது தலைவர்கள்தான்!