
'உண்டி கொடுத்து உயிர்கொடுத்த உழவர்கள் கூட்டம், இன்று ஒரு வேளை சோற்றுக்கே அல்லாடி, அடுத்துச் செய்வதறியாது திகைத்துக் கலங்கி நிற்கிறது! உண்ண உணவில்லை; உடுத்த மாற்று உடையில்லை; உட்கார்ந்து சாப்பிட, உறங்கியெழ இருந்த ஓலைக் குடிசையும் புயலின் கைங்கரியத்தால் காற்றில் பறந்தே போனது!
அரசாங்கத்தால் மட்டும் அனைத்துத் துயரங்களையும் போக்கி விட முடியாது. பெருந் தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், தனவந்தர்கள் ஆகியோரும் களத்தில் குதிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இவர்கள் கூட்டணி இல்லை. அரசியலில் மட்டுமே, அதுவும் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களின் கைகளில் மை வைக்கும் நேரத்தில் மட்டுமே கூட்டணி வருகிறது. அதுவும் பேரத்தின் அடிப்படையில்.
அரசியல் வாதிகளுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பாதிப்பவர்கள் நடிக, நடிகைகளும், பிரபல விளையாட்டு வீரர்களும் என்று கூறப்படுகிறது! இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சில நடிகர்கள் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் வழங்கி உதவுவதாகவும், மற்ற நடிகர்கள் சொற்பத் தொகையை வழங்கிவிட்டுக் கழன்று கொள்வதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. "பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை! மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை!" என்பதுதானே உலக நியதி? வள்ளல்தன்மை எல்லோருக்கும் எளிதில் வந்துவிடுவதில்லை!
தனது முதுகுத்தோல் உரிக்கப்பட்ட பின்னரே, பக்தனொருவன், ஜீசசிடம் இவ்வாறு கூறினானாம்: "இயேசுவே! இப்பொழுதுதான் உங்கள் கஷ்டங்களை நான் முழுமையாக உணர்ந்தேன். முதுகுத்தோல் போனதற்கே என் ஆன்மா இப்படி அல்லாடுகிறதே, நீங்கள் சிலுவையைச் சுமந்தபோது உங்களின் ஆத்மா எவ்வாறெல்லாம் துடித்திருக்கும் என்பது இப்பொழுது நன்கு விளங்கி விட்டது!" என்று. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதும் நமது தமிழகத்தின் சொலவடைதான்.
இன்றைய உலகின் மக்கட்தொகை, சற்றே ஏறத்தாழ, 803 கோடி என்றும், அதில் இந்தியாவின் மக்கட்தொகை 144 கோடி என்றும், ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதாவது உலக மக்கட் தொகையில் நம் நாட்டுப் பங்கு 18 விழுக்காடு! தற்பொழுது, முதல் இடத்தில் இருந்த சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாம் முதலிடத்தைப்பிடித்துச் சாதித்துள்ளோம்! மக்கள் உற்பத்தியில் சாதனைதான்! மற்ற உற்பத்தியில்?
சீனாவின் பொருள் உற்பத்தி நம்மை வாய் பிளக்கச் செய்கிறது! உலகத்தின் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள், சீனாவின் தயாரிப்பே. சரி! இயற்கைப் பேரிடர்களால் எதிர்பாராவிதமாகப் பாதிக்கப்படும் மக்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர என்னதான் வழி? அவர்களின் துயரைப் போக்கி, சுக வாழ்வு கிடைக்க என்ன செய்யலாம்? கொடுப்பவர்களும் பாதிக்கப்படாமல், பெறுபவர்களும் திருப்தி பெற வழிகள் உண்டே! இப்படிச் செய்தால் எளிதாகுமே வாழ்க்கை...
நமது நாட்டில் எங்கு இயற்கைப் பேரிடர் நிகழ்ந்தாலும், உடனடியாக நாட்டு மக்கள் அனைவரும் தலைக்குப் பத்து ரூபாய் என்ற கணக்கில், பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும்! நிவாரணத்திற்கான வங்கிக் கணக்கில் இத்தொகை வரவு வைக்கப்படலாம்! ஒவ்வொரு மாநிலமும் இதற்கென தனி வங்கிக் கணக்கு ஏற்படுத்தி, அதனை நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்!
தற்போது ₹10/- என்பது மிகச்சிறிய தொகை. 144கோடி மக்களில், அன்றாடங்காய்ச்சிகள், நிலையான வீடு இல்லாதவர்கள், விபரம் அறியாதவர்கள் என்ற அடிப்படையில் 44 கோடியை விட்டு விட்டாலும்,100 கோடி மக்களின் ₹10 என்பது ₹1000/- கோடி, மிக எளிதாகக் கிடைத்து விடும். இதன் மூலம் யாருக்கும் சிறு பாதிப்பு கூட ஏற்படாது. 'சிறு துளிபெரு வெள்ளம்' என்பது நிரூபணமாகும். நாட்டுப்பற்றும் மிகும். நாட்டு மக்களில் பெரும்பாலானோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பதால் இதில் சிரமம் இருக்காது. 5 பேர் கொண்ட குடும்பம் ₹50 அனுப்பினாலே போதுமானது!
ஆபத்து நேரத்தில் எனது சகோதர, சகோதரிகளுக்கு எனது சிறு தொகையும் உதவிற்று என்ற திருப்தி ஒவ்வொரு இந்தியனின் மனதையும் நிறைக்கும்! இந்தியாவில் எங்கு இயற்கைச் சீற்றம் நிகழ்ந்தாலும், தானும் சிறு தொகை ஈன வேண்டுமென்ற வேட்கை மிகும்! ஒற்றுமை வளரும்! புரிந்து கொள்ளுதல் பெருகும்! உனக்கு நான்; எனக்கு நீ! என்ற மனோபாவம் மேலோங்கும்.
கல்கி குழும வாசகர்கள் அனைவருக்கும் 2025ம் வருட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!