தினசரி பார்க்கும் ₹ குறியீட்டை வடிவமைத்த தமிழர் யார் தெரியுமா?

இந்திய ரூபாய் குறியீடு ₹ உருவான வரலாறு, வடிவமைத்தவர் யார்? வடிவமைப்புப் பயணம் மற்றும் அதில் மறைந்திருக்கும் அர்த்தங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய ரூபாய் குறியீடு ₹ | Indian Rupee Symbol
இந்திய ரூபாய் குறியீடு ₹ | Indian Rupee SymbolImage credit: Chatgpt
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 
Kalki strip
Kalki strip

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணத்துக்கான ₹ என்ற ஒரு சிறிய குறியீட்டுக்குப் பின்னால் ஒரு தமிழரின் திறமையான படைப்பாற்றலும், பல ஆயிரம் வடிவமைப்புகளுடன் போட்டியிட்ட சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

தினசரி இந்த குறியீட்டுடன் பயணம் செய்யும் நாம் இதைப்பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? இது உருவான விதம் மற்றும் இது குறித்து திரட்டிய தகவல்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

₹ குறியீடை வடிவமைத்த பெருமைக்குரியவர் டி. உதயகுமார் (D. Udaya Kumar). தமிழகத்தின் திருவண்ணாமலை அருகே உள்ள மரூர் பகுதியைச் சேர்ந்த இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைப் படிப்பை முடித்தவர்.

மும்பை ஐஐடியில் (IIT Bombay) வடிவமைப்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் எழுத்துரு வடிவமைப்பு (Typography) மற்றும் கிராஃபிக் டிசைனில் ஆர்வம் கொண்டவர். தமிழரான இவர் வடிவமைத்த குறியீடுதான் இன்று இந்திய ரூபாயின் அதிகாரப்பூர்வ அடையாளமாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது என்பது நமது பெருமை.

₹ குறியீடு உருவானது இப்படித்தான்..

2009-ம் ஆண்டு மத்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு தனித்துவமான சர்வதேச அடையாளத்தை உருவாக்க முடிவு செய்து அதை பொதுமக்களிடமிருந்தே பெற முனைந்தது.

இதற்கான அறிவிப்பு போட்டியாக வெளியிடப்பட்டு பொதுமக்களிடமிருந்து வடிவமைப்புகள் வரவேற்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
பிதாகரஸ் தேற்றம் மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி சொல்லும் வாழ்க்கைப் பாடம் என்ன?
இந்திய ரூபாய் குறியீடு ₹ | Indian Rupee Symbol

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து அவற்றிலிருந்து ஐந்து வடிவமைப்புகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் தமிழரான உதயகுமார் வடிவமைத்த குறியீடு சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது.

2010 ஜூலை 15-ம் தேதி மத்திய அமைச்சரவை இந்தக் குறியீட்டுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

₹ குறியீட்டில் மறைந்திருக்கும் அர்த்தம் இதுதான்..

இந்தக் குறியீட்டை உற்றுப் பார்த்தால் இரண்டு எழுத்துக்களின் கலவையைப் பார்க்க முடியும்.

இந்திய மொழி மற்றும் கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஆதி எழுத்தான தேவநாகரி 'ர' (र) யும், சர்வதேச அளவில் இந்திய ரூபாயை அடையாளப்படுத்த உதவும் ஆங்கில 'R' யும் (Roman எழுத்தான R-ஐ அடிப்படையாகக் கொண்டது இது) இணைத்து நடுவில் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண அமைப்பை நினைவுபடுத்தும் வகையில் இரண்டு கிடைமட்டக் கோடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கணிதத்தில் பயன்படுத்தப்படும் சமன்பாட்டுக் குறியான (=) அர்த்தத்தையும் இந்த கோடுகள் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறு இந்தியத் தன்மையையும் சர்வதேச அடையாளத்தையும் ஒரே குறியீட்டில் இணைத்து வடிவமைத்து வெற்றியை ஈட்டினார் உதயகுமார்.

இந்திய ரூபாய் குறியீடு ₹ | Indian Rupee Symbol
இந்திய ரூபாய் குறியீடு ₹ | Indian Rupee SymbolImage credit: Chatgpt

இந்த வடிவமைப்புக்குக் கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா?

ஆயிரக்கணக்கான வடிவமைக்களில் இருந்து சிறந்ததாக உதயகுமாரின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மத்திய அரசு அவருக்கு அன்று ரூ. 2.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கியது.

ஆனால் அந்தப் பரிசுத் தொகையைவிடப் பெரிய அங்கீகாரமாக இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்கிய பெருமை இந்திய வரலாற்றில் என்றும் அவருக்கு மட்டுமே உரித்தானது.

மேலும் இந்தக் குறியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, கணினி மற்றும் செல்போன்களில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு 2010-ம் ஆண்டு Unicode தரநிலைக்கான நடைமுறை தொடங்கியதாகவும் பின்னர் இந்தக் குறியீடு Unicode-ல் U+20B9 என்ற குறியீட்டு எண்ணைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் ஆவணங்கள், இணையதளங்கள், மின்னஞ்சல்கள், செல்போன்கள் எனப் பல இடங்களில் ₹ குறியீட்டைப் பயன்படுத்த முடிந்தது.

ஒரு நாட்டின் நாணயத்துக்கு அடையாளம் கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

அமெரிக்க டாலருக்கு $, பிரிட்டிஷ் பவுண்டுக்கு £, ஐரோப்பிய யூரோவுக்கு € இருப்பதைப்போல இந்திய ரூபாய்க்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் ஒரு தமிழராக இருப்பது தமிழர்களான நமக்கெல்லாம் பெருமிதமே.

இதையும் படியுங்கள்:
1857-க்கு முன்பே வெடித்த வேலூர் புரட்சி: சுதந்திரப் போரின் முதல் முழக்கம்!
இந்திய ரூபாய் குறியீடு ₹ | Indian Rupee Symbol

ஒரு சிறிய குறியீடுதானே என்று நினைப்போம். ஆனால் அதன் பின்னால் ஒரு பாரம்பரிய நாட்டின் அடையாளமும், ஒரு அறிவார்ந்த தமிழரின் பெருமையும் இருக்கிறது. அத்துடன் உதயகுமார் ரூபாய் குறியீட்டை வடிவமைத்தவர் மட்டுமல்ல; 'பராசக்தி' (Parashakti) என்ற தமிழ் எழுத்துருவையும் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி நீங்கள் கடைக்குச் செல்லும்போதும், ஆன்லைனில் பணம் செலுத்தும்போதும், வங்கிக் கணக்கைப் பார்க்கும்போதும் காணும் அல்லது பணம் குறித்த தகவல்களை எழுதும் போதும் பயன்படுத்தும் ₹ குறியீட்டுக்குப் பின்னால் தமிழரான உதயகுமாரின் கற்பனைத் திறன் நினைவுக்கு நிச்சயமாக வரும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலும் உள்ள அடையாளத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.