விண்வெளியில் சொத்துரிமை உண்டா? உடைக்கப்படும் விண்வெளி மர்மங்கள்!

Who owns the Moon?
Who owns the Moon?Image credit: AI image
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on
Kalki strip
Kalki strip

மனித குல வரலாற்றில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது உரிமையாக்குவதைப் பார்த்திருக்கிறோம். எல்லைச் சண்டை என்பது தீராத ஒன்றாக இருப்பதை இன்று கூடக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ரஷியா உக்ரேனின் மீது போர் தொடுப்பதையும் சீனா தைவானை எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துடிப்பதையும் பார்க்கிறோம்.

இந்த மனித குல பேராசை தீராத ஒன்று என்றால் விண்வெளியில் சொத்துரிமை எப்படி, யாருக்குச் சொந்தமாகும்? (Who owns the Moon?)

எப்படியாவது 2030ம் ஆண்டிற்குள் சந்திரனில் ஒரு தளத்தை உருவாக்கி விடுவோம் என்று கூறுவதோடு அதற்கான முழு முனைப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அங்கு ஒரு தளத்தை அது அமைத்தால் அந்த இடம் யாருக்குச் சொந்தம்?

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த உலகப் பெருமக்கள் 1967ம் ஆண்டு சர்வதேச உடன்படிக்கை ஒன்றைச் செய்தனர்.

அவுடர் ஸ்பேஸ் ட்ரியடி (விண்வெளி உடன்படிக்கை - Outer Space Treaty) என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருக்கின்றன.

இதன்படி விண்ணில் இருக்கும் கிரகங்களோ, நட்சத்திரங்களோ, குறுங்கோள்களோ எதுவாக இருந்தாலும் சரி அவை மனிதகுலம் முழுவதற்குமே சொந்தம், யாரும் அவற்றின் மீது தனி உரிமை கொண்டாட முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி விண்வெளியில் உள்ளவற்றில் இருக்கும் கனிம வளங்கள், வைரம் உள்ளிட்ட விலை மதிக்கமுடியாத பொருட்கள் ஆகியவை அனைத்தும் அனைவருக்கும் உரிமையானவை என்பதே இதன் பொருள்.

விண்வெளி கிரகங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் தீங்கு நேராதபடி நடத்தப்பட வேண்டும் என்பதும் உடன்படிக்கையில் உள்ள ஒரு ஷரத்து.

இப்போது சந்திரனில் கால் பதிக்கும் முதல் நாடு அங்கு ஒரு தளத்தை உருவாக்கினால், அந்தத் தளத்தில் தொடர்ந்து மனிதன் இருந்தால் தான் அந்த இடத்தை அந்த நாடு தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

இந்தக் கேள்வி இப்போது அறிவியல் உலகத்தின் நவீன சாதனங்களை மனதில் கருதி முன் வைக்கப்படும் கேள்வியாகிறது.

ஒரு வேளை நாடுகள் தங்கள் நாட்டின் ரோபாட்டுகள் மற்றும் ஏஐ சாதனங்களை அங்கு வைத்து விட்டால் அந்த இடம் அவற்றிக்குச் சொந்தமாகி விடுமா?

சோதனைகளுக்காகவும், எதிர்கால தங்குமிடமாக அதை ஆக்குவதற்காகவும் எடுக்கப்படும் மண் உள்ளிட்ட சிலவற்றை நாடுகள் எடுப்பது உரிமை மீறல் ஆகாதே!

இப்படிப்பட்ட கேள்விகள் எழும் போதே அமெரிக்கா ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் (Artemis Accords), 2015 ஸ்பேஸ் ஆக்ட், யுஎஸ் எக்ஸ்ப்ளொரேஷன் அண்ட் ப்ரொடக்ஷன் அண்ட் ப்ராபர்டி லா என்று பலவிதமான சட்டங்களை இயற்றிக் கொண்டே வருகிறது.

இதையும் படியுங்கள்:
பூமியைச் சுற்றி இத்தனை ஆயிரம் ஆபத்துகளா... நாசா வெளியிட்ட பகீர் தகவல்!
Who owns the Moon?

பூமிக்கு மேலே மனிதன் சென்று ஓரிடத்தில் தங்கும் போது அந்த இடம் யாருக்கு எவ்வளவு காலம் சொந்தமாகும், அதற்கான உரிமை எப்படி யாரால் வழங்கப்படும் என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளாக இப்போது உள்ளன என்றாலும் இவற்றிற்குக் காலம் பதில் சொல்லித் தானே ஆகவேண்டும்!

பொறுத்திருந்தால் விண்வெளி சம்பந்தமான இந்த உரிமைப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தே தீரும்!

logo
Kalki Online
kalkionline.com