பணத்தை அதிகமாக அச்சிட்டால் ஒரு நாடு பணக்கார நாடாக மாற முடியுமா?

அரசு ஏன் அதிகப்படியான பணத்தை அச்சிட்டு மக்களை பணக்காரர்களாக மாற்ற முடியாது? பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவின் பின்னணியை தெளிவாக அறியுங்கள்.
பணம் | Money
பணம் | MoneyImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

‘பணம் பத்தும் செய்யும், பதினொன்றும் செய்யும்’ என்று சொல்வார்கள். சொல்லப்போனால் ஒரு மனிதனின் அடையாளமாக பார்க்கப்படுவதே முதலில் பணம்தான். அப்படிப்பட்ட பணம் மனித நாகரிகத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

அடிப்படையில் பணம் என்பது காகிதத்தில் அச்சிடப்பட்டதாகவோ அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட நாணயங்களாகவோ உள்ளது. எதார்த்தத்தில் பார்த்தால் பணம் என்பது செல்வத்தின் மொத்த அளவுகோலாக இல்லாமல், ஒரு பரிமாற்றத்திற்கானப் பொருளாகவே செயல்படுகிறது. ஒரு நாடு அதிகப் பணத்தை அச்சிடுவதன் மூலம் எளிதாகச் செல்வந்த நாடாக மாறிவிட முடியுமே என்று நம்மில் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் உற்பத்தி, வர்த்தகம், புதிய விஷயங்கள் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் மூலமே ஒரு நாட்டின் செல்வம் உருவாக்கப்படுகிறது.

பொருட்கள், சேவைகளின் உற்பத்தியில் உரிய அதிகரிப்பு அல்லது எண்ணிக்கை இல்லாமல் ஒரு அரசாங்கம் எக்கச்சக்கமானப் பணத்தை அச்சிட்டால், அது பணவீக்கத்திற்கு (Inflation) வழிவகுக்கும். அதாவது ‘ஒரு பொருளை வாங்க அதிகப் பணத்தைத்தான் கொடுப்போம் தவிர நம்மிடம் வேறெதுவும் மிஞ்சாது.

‘மொத்த பொருட்களைவிட பணம்தான் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளதே; அதனால் இருக்கும் பொருட்களை இரட்டிப்பாக வியாபாரம் செய்வோம்’ என்ற எண்ணம்தான் மேலோங்கும். இது மக்களின் வாங்கும் திறனைக் குறைப்பதோடு; பணத்தின் மதிப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கக்கூடும்.

பணம் | Inflation
பணம் | InflationImage credit: AI Image

பணவீக்கத்தைத் தாண்டி அளவுக்கு அதிகமாகப் பணத்தை அச்சிடுவது ஒரு நாட்டின் சர்வதேச நிலையையும் பலவீனப்படுத்தக்கூடும். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையலாம்; இதன் விளைவாக வர்த்தகம், மூலதன வரத்து பாதிக்கப்படலாம். இறுதியில், நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைவது இறக்குமதிகளை அதிகச் செலவு மிக்கதாக மாற்றி; எரிபொருள், தொழில்நுட்பம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
Interview: செய்தித்தாளில் உணவு உண்பது ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவரின் விளக்கம்!
பணம் | Money

பணத்தை அச்சிட அவசியமானவை:

பணத்தை அச்சிடும் அதிகாரம் அந்தந்த நாட்டின் மத்திய வங்கி (எ.கா., இந்தியாவின் ரிசர்வ் வங்கி அல்லது அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ்) அல்லது பணவியல் ஆணையத்திடம் (monetary authority) உள்ளது. இந்த நிறுவனங்கள் பொருளாதாரச் சூழல், பணவீக்க இலக்குகள் மற்றும் வளர்ச்சித் தேவைகளின் அடிப்படையில் பண விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பணத்தை அச்சிடுவது என்பது சாதாரணமான ஒரு முடிவல்ல; அதற்குப் பணவியல் கொள்கை (monetary policy), நிதி ஒழுக்கம் மற்றும் சில சமயங்களில் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியம்.

நாணயங்களைப் பொறுத்தவரை, சிறிய மதிப்புள்ள நாணயங்களுக்கான தேவையின் அடிப்படையில் அரசாங்கங்கள் அவற்றை அச்சிட முடிவு செய்கின்றன; ஆனால், இதிலும்கூட கடுமையானக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

அனைத்து நாடுகளிலும் இதே நிலையா?:

உலகளவில் பெரும்பாலான நாடுகள் ஒரே கொள்கையையே பின்பற்றுகின்றன. பணம் என்பது வெறும் காகிதம் அல்லது உலோகத்தால் ஆனது மட்டுமல்லாமல், ஒரு பொருளாதாரத்தின் நம்பிக்கையாகவும் செயல்படுகிறது.

வரலாற்று ரீதியாக பணம் தங்க இருப்புகளுடன் (தங்கத் தரநிலை முறையாக) இணைக்கப்பட்டிருந்தது; ஆனால் இன்று அது பெரும்பாலும் 'ஃபியட் கார்ரேன்சியாக' (fiat currency) உள்ளது. அதாவது அதன் மதிப்பு அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையிலிருந்தே பெறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் சுகாதாரம்: ஏழைகளின் வரமா? கார்ப்பரேட்களின் வேட்டையா?
பணம் | Money

அதனால் நாடுகள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னிச்சையாகப் பணத்தை அச்சிடமுடியாது. (எ.கா) ஜிம்பாப்வே, வெனிசுலா போன்ற நாடுகளின் உதாரணங்களைத் தெரிந்துகொண்டால் இது நன்றாக புரியும்.

தேவையற்ற பணத்தை அச்சிடுவது எவ்வாறு கடும் பணவீக்கத்திற்கும் (hyperinflation) பொருளாதாரச் சரிவுக்கும் வழிவகுத்தது என்பதைக் காட்டுகின்றன.

ஆக, பணம் என்பது ஒரு செல்வத்தைப் (Wealth) பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவி மட்டுமே; அந்தச் செல்வமே இல்லையேல் அது வெறும் வெத்து காகிதம்தான்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com