
முன்பெல்லாம் தற்கொலை என்கிற சம்பவம் எப்போதாவது எங்கேயாவது அத்தி பூத்தாற் போல் நடக்கும். பொதுவாக அந்த நாட்களில் மூன்று விதமான மக்கள் தான் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள்:
கணவனால் கைவிடப் பட்ட பெண்களோ அல்லது காதல் என்ற போர்வையில் விழுந்து காதலனால் கர்ப்பமாகி அவனால் நிராகரிக்கப்பட்ட பெண்ணோ அல்லது ஊனத்தோடு பிறந்து திருமணமாகாத பெண்களோ அல்லது கற்பழிக்கப்பட்டு அவமானத்தை தாங்க முடியாமல் போன பெண்களோ தான் இந்த தற்கொலையை நாடினார்கள். அவர்களால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் வேறு வழி இல்லாமலும் இருந்த காரணத்தினால் அப்படி ஒரு வழியை தேடினார்கள். அதுவும் விஷத்தை குடிப்பார்கள் இல்லை என்றால் கிணற்றில் குதிப்பார்கள் அதுவும் இல்லை என்றால் ஆற்றில் குதிப்பார்கள். அதையும் செய்வதற்கு பலமுறை யோசிப்பார்கள். அந்த நாட்களில் அத்தனை தைரியமும் கிடையாது. ஒரு பேச்சிற்கு நூறு பேர் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று சொன்னால் அதில் பத்து பேருக்கு கூட செய்து கொள்ள தைரியம் இருக்காது.
இந்த மாதிரி சூழ்நிலைகளை கொண்ட பெண்களுக்கு அடுத்த படியாக தற்கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யாரென்று பார்த்தால் கடன் வாங்கி கொடுக்க முடியாமல் திக்கு முக்காடியவர்கள். இவர்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் வேறு வழியும் தெரியாமல் பிரச்சினையிலிருந்து தப்பிக்க கோழைத் தனமாக இதை கடைபிடித்தார்கள்.
இதற்கும் அடுத்த படியாக வயதானவர்கள் முதுமைக் காலத்தில் இயற்கையாகவே ஏற்படும் மன அழுதத்தின் காரணமாக தன்னை அறியாமலேயே இத்தகைய செயலை செய்தார்கள். இப்போதும் வயதானவர்களிடையே இந்த பாதிப்பு இன்னும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இப்போதுள்ள நவீன மருத்துவம் காரணமாக அப்படிபட்ட எண்ணம் அவர்களிடையே குறைந்தும் வருகிறது.
ஆகவே அந்த நாட்களில் காரணத்தோடும் இயலாமையாலும் தான் அப்படிபட்ட ஒரு செய்கையை அதாவது தற்கொலையை செய்ய எண்ணினார்கள் மற்றும் முயற்சித்தார்கள். அதுவும் எண்ணிய எல்லோராலும் அதை செய்ய முடியவில்லை.
சரி இப்ப இன்றைய நிலைமையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...
இன்றைய காலத்தில் கடன் தொல்லை இருப்பவர்கள் கூட ஏதாவது ஒரு வங்கியின் உதவியோடு அதை சமாளிக்கும் திறனை பெற்று விட்டார்கள். முதியோர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை கொடுத்து அவர்களுக்கும் இந்த எண்ணம் வருவதில்லை. திருமண வயதிலிருக்கும்/திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உதவி புரிய நாடெங்கிலும் மகளிர் காவல் நிலையமும் மகளிர் நல மேம்பாட்டு குழுக்களும் நிறைந்திருப்பதால் அவர்களும் இத்தகைய செயலை அதிகமாக செய்வதில்லை, மாறாக ஆண்களுக்கு நிகராக துணிந்து நிற்கும் தைரியத்தை பெண்கள் பெற்று விட்டார்கள்.
அப்படி என்றால் சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலையை யார் தான் செய்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால் இக்காலத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தான்.
இவர்களிடத்திலே இது ஒரு trend ஆகி விட்டது. அதுவும் ரூமை உட்புறமாக தாழிட்டு கொண்டு தூக்கில் தொங்குவது ஒரு பெரிய modern trend ஆக இருக்கிறது. இவர்களுக்கு இதைப் போல் ஒரு துணிச்சல் எப்படி, எங்கிருந்து வருகிறது என்று நமக்கு இன்னும் புரியவில்லை. செய்தியை கேட்டாலே நமக்கு உடல் நடுங்குகிறது. ஆனால் மாணவர்களோ சர்வ சாதாரணமாக்கி விட்டார்கள் இச்சம்பவத்தை.
மாணவர்களே, நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை? நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது live video record செய்து விட்டு உங்கள் வேலையை முடித்து கொண்டு போய் விடுவீர்கள். அந்த வீடியோ நொடிப்பொழுதிற்குள் வைரலாகி விடும்.
அதற்கு பிறகு அந்த கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ படிக்கும் சக மாணவ மாணவிகளின் மனநிலை எப்படி மாறும்? அந்த வீடியோவை பார்த்து இன்னும் சில மாணவர்கள் முயற்சி செய்தால் என்ன ஆகும்? பரீட்சை நேரமாக இருந்தால் மற்றவர்கள் எப்படி மன அமைதியோடு எழுதுவார்கள்? கல்லூரி நிர்வாகத்தின் நிலை என்ன ஆகும்? பெற்றோர்களின் நிலைமை என்ன ஆகும்? இப்படி எதை பற்றியாவது சிந்தித்தது உண்டா? போராடி வாழவேண்டும் என்கிற எண்ணம் ஏன் உங்களிடம் தோன்றுவதில்லை? இதற்காகத் தான் உங்களின் பெற்றோர்கள் இத்தனை பாடுபடுகிறார்களா?
உங்களுடைய இத்தகைய செயலுக்கு உறுதுணையாக இருப்பது இணையதளமும் சோசியல் மீடியாவும் தான். பல தரப்பட்ட வீடியோக்களையும் ரீல்ஸையும் பார்த்து உங்களுக்கு அசட்டு தைரியத்தில் இதையெல்லாம் செய்யத் தோணுகிறது.
தினமும் செய்தியில் கோச்சிங் பயிலும் மாணவன் தற்கொலை, b.tech படிக்கும் மாணவி தற்கொலை, பிளஸ்டூ தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக மாணவன் தற்கொலை போன்ற செய்திகள் தான் அதிகமாக வருகின்றன.
மாணவர்களே, சற்று நினைத்து பாருங்கள், உங்களை வளர்க்க தாய் தந்தையர் எத்தனை பாடுபடுகிறார்கள். நீங்கள் இப்படிபட்ட முடிவை எடுத்தால் அவர்கள் மனம் என்ன பாடு படும். அதையும் மீறி அவர்கள் தங்களைத் தானே தேற்றிக் கொண்டு மற்ற பிள்ளைகளுக்காக மறுபடியும் எழுந்து போராடுகிறார்கள். ஒருவேளை இப்படி நடந்தால் என்ன ஆகும்? அதாவது குழந்தைகளை வளர்க்க முடியாமல் உங்களுடைய படிப்பிற்கு தேவையான பணத்தை புரட்ட முடியாமல் ஒவ்வொரு தாய் தந்தையரும் உங்களைப் போல் இத்தகைய செயலை செய்தால் என்ன ஆகும்? நீங்கள் அனைவரும் அனாதை ஆக வேண்டி இருக்கும்.
உங்களுக்கு தேர்ந்தெடுத்த படிப்பை படிக்க இயலவில்லை என்றால் பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்தாவது எடுத்துரையுங்கள். பெற்றோர்களிடம் challenge செய்து உங்களுக்கு பிடித்ததை எடுத்து நன்றாக பயின்று முன்னேறி காண்பியுங்கள். இல்லையென்றால் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த படிப்பிற்கு தேவையான கூடுதல் பயிற்சியை பெற்றோர்களின் உதவியோடு முடிந்த அளவிற்கு பயின்று தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.
இணையதளத்தில் நாள்முழுவதும் வேண்டாத விஷயங்களை பார்ப்பதற்கு பதிலாக உங்களின் கல்வி சம்மந்தபட்ட விஷயங்களை அலசி அறிவை மேன்மை படுத்தி கொள்ளுங்கள். படிப்பதில் பிரச்சினை இல்லாமல் வேறு எதாவது பிரச்சினை இருந்தால் தயவு செய்து பெற்றோர்களிடமோ அல்லது உங்களுக்கு பிடித்த ஆசிரியரிடமோ அல்லது உற்ற நண்பனிடமோ அல்லது hostel warden அவர்களிடமோ share செய்து தீர்வு காணுங்கள்.
இந்த செமெஸ்டரில் மார்க் குறைவாக வந்தால் பரவாயில்லை, அடுத்த பரீட்சையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். Placement-ல் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு பின்னர் வேற வேலைக்கு முயற்சி செய்யுங்கள். சில நேரங்களில் உங்களின் பெற்றோர்கள் கடினமான வார்த்தைகளை கூறி இருக்கலாம், அதனால் என்ன ஆயிற்று? அம்மா அப்பா தானே? அப்படி அவர்களின் பேச்சு உங்களை காயப்படுத்தி இருந்தால் அவர்களிடமே போய் உங்களின் வருத்தத்தை நேரடியாக கூறுங்கள்.
பிரச்சினைகளை எதிர் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு தற்கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? சம்பவத்திற்கு பிறகு கல்லூரி/பள்ளி நிர்வாக ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தனை கஷ்டபடுவார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஒரு மாணவனின் தற்கொலையால் பலபேருடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்று.
ஆகவே, மாணவச் செல்வங்களே, தயவு செய்து இந்த மாதிரியான எண்ணங்களை இனிமேலாவது வளராத படிக்கு உங்களை பார்த்து கொள்ளுங்கள். உங்களுடைய தோழிகள் மற்றும் தோழர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் இதை எடுத்துரைக்கவும்...
வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு தற்கொலை எப்போதும் தீர்வாகாது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தற்கொலை எண்ணம் தோன்றினால் தற்கொலை தடுப்பு மையங்கடிள தொடர்புக்கொண்டு ஆலோசனைப் பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தன்னார்வ தற்கொலை தடுப்பு மையமான சிநேகா தொண்டு நிறுவனத்திதை Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060 தொடர்புகொள்ளமுடியும்.