

மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு. ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதைப்போல, உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உலக சுகங்களை அனுபவிக்க முடியும் என்பதும் உண்மையே!
அந்த உணவைச் சுவையாக, நாவினுக்கும் உடலுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் தயாரித்து அளிப்பவர்கள், மக்கள் மத்தியில் மகிழ்ந்து கொண்டாடப்படுவார்கள். என்னதான் ஆன் லைனில் ஆர்டர் செய்து, கதவைத் தட்டி, கேட்ட உணவுகளைக் கொடுத்து விட்டுச் சென்றாலும், குடும்பத்தாருடன் ஒன்றாகக் கிளம்பி, ஊர் சுற்றி விட்டு, மனதுக்குப் பிடித்த ஓட்டலில், விரும்பிய ஐட்டங்களை, குடும்பத்தாருடன் சேர்ந்து உள்ளுக்குத் தள்ளுவதில் உள்ள மகிழ்ச்சியே அலாதியானது தானே!
அதிலும் நம் மனதுக்குப் பிடித்த இடத்தில், ஓட்டல் உள்ளோ, வெளியில் உள்ள லானிலோ, ஏன் நமது காரிலேயோ அமர்ந்து சாப்பிட வசதி இருந்தால், மனம் குதி போட்டுக் கொண்டாடத்தானே செய்யும்.
அந்தக் கொண்டாட்டத்தைக் கொடுத்து வந்ததுதான் சென்னை மாநகரின் மத்தியில், தேனாம்பேட்டையில் அமைந்திருந்த உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல். 40 வருடப் பாரம்பரியம் கொண்டது!
- ஏப்ரல் 1962ல் அப்போதிருந்த வேளாண்-தோட்டக்கலை சொசைட்டியிடமிருந்து (Agri-Horticultural Society) நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்து ஆரம்பிக்கப்பட்டது இந்த உட்லண்ட்ஸ் டிரைவ் இன்!
- 18 ஏக்கர் பரந்து விரிந்த நிலத்தில் மரம், செடி, கொடிகளுக்கிடையே, வெப்பச் சென்னையில் குளிர் தரும் இடமாய் ஒளிர்ந்தது.
- புகழ் பெற்ற ஜெமினி ஸ்டூடியோஸ், உயர்ந்த செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல், பணக்கார அமெரிக்கன் கன்சலேட் ஆகியவை இதன் அருகில் இருந்தன. 1973ல் ஜெமினி ப்ளை ஓவரும் வந்தது.
- ரெகுலர் சர்வீசுடன், க்யிக் பைட்ஸ் (Quick Bites) விரும்பிகளுக்காக அதனைத் தொடர்ந்து செல்ப் சர்வீஸ் (Self-Service) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
- பழமை விரும்பிகளுக்காக ஓட்டலில் அமர்ந்து சாப்பிடும் வசதியும் , வானத்தை ரசித்தபடி சாப்பிடுபவர்களுக்காக லானும், நிழலையும், மரங்களையும் விரும்புபவர்களுக்கு மரங்களின் கீழே டேபிள்களும் என்று எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்திய எழில் சார்ந்தது இது! ஏசி டைனிங் ஹாலும் உண்டு. காரில் அமர்ந்தும் கதை பேசிச் சாப்பிடலாம்.
-‘டிரைவ் இன்னில் மீட் பண்ணலாம்!’என்ற வசனம் அக்காலத்தில் மிகவும் பிரபலம்!
- தயிர் சேமியா, மசாலா தோசை, ரவா இட்லி, சோலே படூரா, பிரட் பீஸ் மசாலா இவையெல்லாம் இங்கு இருந்த பிரபல அயிட்டங்கள்!
- பம்பாயிலிருந்து சென்னைக்குத் தனி விமானத்தில் பறந்து வரும் பிரபல இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஒருவர், புறப்படும் முன்னதாக உட்லண்ட்சுக்குப் போன் செய்து தோசை மாஸ்டர் யார் என்று கேட்ட பிறகே புறப்படுவாராம். நேராக அங்கு வந்து விடுவாராம்!
- தனித்துவமான சுவை நிறைந்த காபி இவர்களின் அடையாளமாம்! (Unique Madras Version of Coffee House)
- ஃபில்டர் காபியைச் சுவையுடன் தயாரிக்க நல்ல பால் வேண்டுமென்பதற்காக, ஓட்டல் வளாகத்திலேயே ஒரு பசுப்பண்ணையும் செயல்பட்டு வந்ததாம்.
- காரில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் தங்கள் குழந்தைகளைப் பக்கத்திலுள்ள குழந்தைகள் விளையாட்டு இடத்தில் விட்டாலும், அங்குள்ள வெயிட்டர்களின் கண்கள் குழந்தைகள் பாதுகாப்பிலேயே லயித்து இருக்குமாம்!
- காரின் ஜன்னலில் மாட்டும் விதமாக ட்ரேக்கள் உண்டாம். அவற்றில் காபியையும், பிற உணவுகளையும் வெயிட்டர்கள் வைத்துச் செல்வார்களாம்!
- வெயிட்டர்கள் அனைவருமே சுறுசுறுப்புடன் இயங்குவதுடன், நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களாம்!
- திரு மணி என்பவர் அங்கு கிளீனராகச் சேர்ந்து, சீனியர் வெயிட்டராகப் பதவி உயர்வு பெற்றவராம். 30 ஆண்டுகள் சர்வீஸ் போட்ட அவர், மின்னல் வேகத்தில் சப்ளை செய்வதிலும், யார் என்ன சாப்பிட்டார்கள் என்பதைச் சரியாக ஞாபகத்தில் வைத்துக் கணக்குப் போடும் வல்லமையும் படைத்தவராம்!
- சிறுவர்கள் விளையாட, வேண்டிய உபகரணங்களும் ‘போனி ரைடும்’ கூட வைத்திருந்தார்களாம். (சிறு குதிரைச் சவாரி!)
- சாப்பிட்ட பின் வாயை ரெப்ரஷ் செய்து கொள்ள பீடா ஸ்டாலும் உள்ளேயே உண்டு.
- திரைப்படக் கதாநாயகர்கள், இயக்குனர்கள், சிரிப்பு நடிகர்கள், பிற நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என்று அத்தனை பேரும் அங்கு மீட் செய்யவும், சாப்பிடவும் வருவார்களாம்!
- கமல், ரஜினி, கார்த்திக், மணிரத்னம், விசு, நாகேஷ், கிரேசி மோகன், கண்ணதாசன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், P.B.ஸ்ரீனிவாஸ், இசைஞானி இளையராஜா போன்றோர் முக்கியமானவர்கள்.
- பல கம்பெனிகள் தங்கள் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நேர்காணலை (Job Interviews) இங்கு நடத்துவார்களாம்.
- பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புப் பொருட்களை இங்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தி விற்பனையை ஆரம்பித்து வைப்பார்களாம்.
- பலர் தங்கள் நிறுவன ஊழியர்களுக்குச் சில மணி நேரப் பயிற்சி அளிக்க இங்கு தான் வருவார்களாம்.
- இங்கு ரொமான்ஸுக்கும் குறைவிருக்காதாம்!
- ஸ்டெல்லா மேரிஸ் கேர்ல்சும், லயோலா காலேஜ் பாய்சும் இங்கு சந்தித்துத்தான் காதலை வளர்ப்பார்களாம்!
- சென்னை மாநகரின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் இடமாக 40 ஆண்டுகளாக விளங்கி வந்தது உட்லண்டஸ் டிரைவ் இன்!
- திருஷ்டி காரணமாகச் சிலருக்கோ, சிலவற்றுக்கோ முடிவு வரும் என்பார்கள். அப்படித்தான் இதற்கும் முடிவு வந்ததோ தெரியவில்லை!
- கோர்ட் ஆர்டர்படி 2008 ஆம் ஆண்டு 'டிரைவ் இன்'னுக்கு முடிவு வந்தது.
அது மூடப்பட்டாலும் அதன் வரலாறு சென்னை மாநகரின் வரலாற்றோடு இணைந்து கிடக்கிறது. யாமும் ஓரிரு முறை அங்கு சென்ற பசுமையான எண்ணம் மனத்தை நிறைக்கிறது! எமக்கே இப்படியென்றால், அங்கு அடிக்கடி சென்று வந்தோரின் மனங்களில் உட்லண்ட்சின் பிம்பத்தை எவராலும் அழிக்கவே முடியாது! அதன் பெருமைக்கு என்றும் இல்லை அழிவு!