உலக அழிவு நாளை குறிக்கும் கடிகாரம் (Doomsday Clock)!

Doomsday Clock
Doomsday Clock

இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் பேரழிவைச் சந்தித்தன. அணுகுண்டுகளால் ஏற்பட்ட பேரழிவைக் கண்ட அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளரும், அணு ஆயுதங்களின் தந்தை என்று அறியப்படுபவருமான ஜே ராபர்ட் ஓப்பன் ஹெய்மர் (J. Robert Oppenheimer) மற்றும் அவரோடு சேர்ந்து அணுகுண்டை உருவாக்கிய அமெரிக்க அறிவியலாளர்களும் பெரும் கவலையடைந்தனர்.

அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பேரழிவைத் தரும் என்பதைப் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாகவும், அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாது என்பதை உலகத் தலைவர்கள் உறுதி செய்யவும் விரும்பிய அவர்கள், 1947 ஆம் ஆண்டில் அணுசக்தி உலக அழிவுக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக “உலக அழிவு நாளுக்கான கடிகாரம் (Doomsday Clock) ஒன்றை உருவாக்கினர்.

இக்கடிகாரத்தில் நேர முட்கள் நள்ளிரவு 12.00 (24.00) மணியை நெருங்குவது உலகம் பேரழிவை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அணுசக்தி மற்றும் இயற்கையை முறை தவறிப் பயன்படுத்தியதன் விளைவாகவே இக்கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடிகாரம் முதன் முதலில் 1947 ஆம் ஆண்டு நள்ளிரவைத் தொட 7 நிமிடங்கள் (23:53) இருப்பது போன்று கடிகார முட்கள் வைக்கப்பட்டன. உலகில் நிகழ்ந்த மனித இருப்புக்கு ஆபத்தான நிகழ்வுக்கும், அதனால் ஏற்படவிருக்கும் விளைவுகளுக்குமேற்பக் கடிகாரத்தின் முட்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

1949 ஆம் ஆண்டில் சோவியத் ரசியா, முதன் முதலாக அணு ஆயுதச் சோதனை நடத்திய போது, இந்தக் கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 3 நிமிடங்கள் (23:57) இருப்பதாக முட்கள் நகர்த்தி வைக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டதால், இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 2 நிமிடங்கள் (23:58) இருப்பதாக முட்கள் நகர்த்தப்பட்டன.

1960 ஆம் ஆண்டில் அணு ஆயுதம் பயன்பாட்டின் தீங்குகள் தொடர்பான பொதுவான புரிந்து கொள்ளலும், அறிவியல் ஒத்துழைப்பு அதிகரித்தமையும் காரணமாக, போர்களில் அணு ஆயுதம் பயன்படுத்துவதில்லை என்ற உடன்பாடு ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் சோவியத் நாடுகள் நேரடி மோதல்களைத் தவிர்த்தன. அப்போது இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 7 நிமிடங்கள் (23:53) இருப்பதாக முட்கள் பின்னோக்கி நகர்த்தப்பட்டன.

1963 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் வானில் அணு ஆயுத சோதனையில் ஈடுபடாமைக்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. அதனைத் தொடர்ந்து இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 12 நிமிடங்கள் (23:48) இருப்பதாக முட்கள் மேலும் பின்னோக்கி நகர்த்தப்பட்டன.

1968 ஆம் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான் இடையே 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற போர், 1967 ஆம் ஆண்டில் வியட்நாம் போர், பிரான்சு மற்றும் சீனா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தது போன்ற பல காரணங்களால், இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 7 நிமிடங்கள் (23:53) இருப்பதாக முட்கள் நகர்த்தப்பட்டன.

1969 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவையில் அணு ஆயுதப் பரவலாக்கக் கொள்கையைச் சீரமைத்ததைத் தொடர்ந்து, இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 10 நிமிடங்கள் (23:50) இருப்பதாக முட்கள் பின்னோக்கி நகர்த்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:
தோல்வியை உணர்த்தும் வெற்றி!
Doomsday Clock

1972 ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் யூனியன் இடையே மூலோபாய ஆயுத வரம்பு ஒப்பந்தம் (Strategic Arms Limitation Treaty) மற்றும் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம் (Anti-Ballistic Missile Treaty) ஏற்பட்டதைத் தொடர்ந்து, இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 12 நிமிடங்கள் (23:48) இருப்பதாக முட்கள் மேலும் பின்னோக்கி நகர்த்தப்பட்டன.

1974 ஆம் ஆண்டில், இந்தியா அணுசக்தி சாதனத்தைச் சோதனை செய்தது, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத் ஒன்றியம் ஆகியவை சுயாதீனமான இலக்குடன் மறுநுழைவு வானூர்தி (Reentry Vehicles) நவீனப்படுத்தியமை போன்ற காரணங்களால், இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 9 நிமிடங்கள் (23:51) இருப்பதாக முட்கள் நகர்த்தப்பட்டன.

இதேப் போன்று, உலகில் நடைபெற்ற பல்வேறு அழிவுக் காரணங்களைக் கொண்டு இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட, 1980 ஆம் ஆண்டில் 7 நிமிடங்கள் (23:53) என்றும், 1981 ஆம் ஆண்டில் 4 நிமிடங்கள் (23:56) என்றும், 1984 ஆம் ஆண்டில் 3 நிமிடங்கள் (23:57) என்றும் இருப்பதாக முட்கள் நகர்த்தப்பட்டன.

1988 ஆம் ஆண்டில், அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் இடைநிலை அணுசக்திகளை அகற்றுவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டு உறவை மேம்படுத்திக் கொண்ட நிலையில், இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 6 நிமிடங்கள் (23:54) இருப்பதாக முட்கள் பின்னோக்கி நகர்த்தப்பட்டன.

1990 ஆம் ஆண்டில், பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் இரும்புத்திரை, ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்பு போன்றவற்றால் பனிப்போர் அதன் முடிவை நெருங்கியதாகக் கொண்டு, இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 10 நிமிடங்கள் (23:50) இருப்பதாக முட்கள் மேலும் பின்னோக்கி நகர்த்தப்பட்டன.

இதேப் போன்று, உலகில் நடைபெற்ற பல்வேறு அழிவுக் காரணங்களைக் கொண்டு இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட, 1990 ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை பல முறைகள் முட்கள் நகர்த்தப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் உக்ரைனில் போர், அணுசக்தி, உயிர் மற்றும் காலநிலைக் கவலைகள் போன்றவைகளால் இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 90 நிமிடங்கள் என்று முட்கள் நகர்த்தப்பட்டன. 2024 ஆம் ஆண்டில் உக்ரைனில் போர், அணுசக்தி, உயிர், காலநிலை ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவுக் கவலைகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், இக்கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட 90 நிமிடங்கள் என்றேத் தற்போதும் இருக்கின்றன.

உலக அழிவு நாளுக்கான கடிகாரத்தில், இதுவரை 25 முறை முட்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிகாரம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதில் குறிப்பிடப்படும் கால அளவு தவறானது என்று சொல்லும் சில நாடுகளும் இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com