World's First Fiberglass Embedded Structure Anatomy Museum! உலகின் முதல் கண்ணாடியிழை உட்பொதி அமைப்பு உடற்கூறியல் அருங்காட்சியகம் நம் தமிழ்நாட்டில்!

Fiberglass Embedded Structure Anatomy Museum
Fiberglass Embedded Structure Anatomy Museum

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 1600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தேனி மாவட்டத்திலிருந்தும், அருகிலுள்ள கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்தும் மூன்றாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இம்மருத்துவமனையில் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக்கல்லூரியின் உடற்கூறியல் துறையில் (Department of Anatomy) மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ‛பார்மலின்' எனும் திரவ வேதிப்பொருளால் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இறந்த மனித உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. பார்மலின் வேதிப்பொருட்கள் கொண்டு பதப்படுத்தப்படும் உடல்களை, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையே வைத்திருக்க இயலும். அதன் பிறகு, பார்மலின் திரவம் உடல் உறுப்புக்களை அரிக்கத் தொடங்கிவிடும். அதனால் உடல் உறுப்புகளின் திறன் முற்றிலும் மாறுபட்டுப் போய்விடும் நிலை இருந்தது.

இந்நிலையை மாற்ற பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், 1977 ஆம் ஆண்டில், ஜெர்மனியைச் சேர்ந்த சுந்தர் என்பவரால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டினேசன் எனும் முறையில் இறந்த உடல்களையும், உடல் உறுப்புகளையும் மேலும் கூடுதலாகச் சில ஆண்டுகள் பாதுகாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இம்முறையினை இந்தியாவில் வேலூரிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் கல்லூரிகள் மட்டுமேப் பயன்படுத்தி வருகின்றன.

Fiberglass Embedded Structure Anatomy Museum
Fiberglass Embedded Structure Anatomy Museum

படம்:

கண்ணாடியிழை உட்பொதி அமைப்பு முறையில் பாதுகாக்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளைக் கொண்ட மருத்துவமனை அருங்காட்சியகம்.

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் எதிலும் பிளாஸ்டினேசன் முறை பின்பற்றப்படாத நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முதலாக, பிளாஸ்டினேசன் முறை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளை கண்ணாடியிழை உட்பொதி அமைப்பு (Fibre Glass Embedded System) எனும் புதிய முறையில் பாதுகாக்க முடிவு செய்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறியல் துறைத்தலைவர் மருத்துவர் எழிலரசன் தலைமையிலான குழுவினர், அதற்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அதில் வெற்றியையும் பெற்றிருக்கின்றனர்.

இதன் மூலம், உலகிலேயே முதன் முதலாக இறந்த உடல்களையும், உடல் உறுப்புகளையும் கண்ணாடியிழை உட்பொதி அமைப்பு முறையில் பாதுகாக்கும் முதல் மருத்துவமனை எனும் பெருமையினைத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றிருக்கிறது. மேலும், இந்தப் புதிய தொழில்நுட்ப முறைக்கான காப்புரிமை வேண்டியும் விண்ணப்பித்துள்ளது.

சந்தையில் கிடைக்கும் பிசின் என்ற வேதிப்பொருளை உயர் வெப்பத்தில் (100 டிகிரி) பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல் மற்றும் உடல் உறுப்புகள் மீது ஊற்றி, அந்த உடல் மற்றும் உடல் உறுப்புகளை மிகவும் குறைவான வெப்பம் (20 டிகிரி சென்டி கிரேட்) கொண்ட அறையில் 24 மணி நேரம் வரை வைத்திருந்து, பின்னர் அவ்வுடல்களை உலர வைத்துவிடுவது என்று இத்தொழில்நுட்பம் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நச்சுப்பொருள் ஆய்வுகளுக்கு 'ரெடி' விருது! யார் இந்த ரெடி?
Fiberglass Embedded Structure Anatomy Museum

இந்த கண்ணாடியிழை உட்பொதி அமைப்பு முறையில் பாதுகாக்கப்படும் மனித உடல் உறுப்புகள் மற்றும் உடல்களை எளிதில் அழிக்க முடியாது. மேலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் பல ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இம்முறையில் பார்மலின் திரவத்தின் பக்க விளைவுகள் எதுவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்ணாடியிழை உட்பொதி அமைப்பு முறையினைப் பயன்படுத்திப் பாதுகாக்கப்படும் உடல் உறுப்புகள் மற்றும் மனித உடல்களைக் கொண்டு புதிதாக அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதன்முறையாக கண்ணாடியிழை உட்பொதிப்பு முறையிலான உடற்கூறியல் அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய தொழில்நுட்ப முறை குறித்தத் தகவல்களை கல்லூரியின் முதல்வர் பாலசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்லுாரியின் துணை முதல்வர் தேன்மொழி, துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் செல்வக்குமார், மருத்துவமனை அலுவலர் மருத்துவர் சந்திரா, உதவி மருத்துவமனை அலுவலர் மருத்துவர் ஈஸ்வரன், உடற்கூறியல் துறைத் தலைவர் மருத்துவர் எழிலரசன் மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com