புயலும், சுனாமியும் ஒன்றாக வந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ராஜதானி ராஜப்பாவும், சீவர சிந்தாமணியும் கல்கி ஆபீசுக்குள் ஒன்றாக வந்தார்கள்.
''லே லோ! அகர்வால் பவன் சோனே அல்வா! '' - ரா.ரா. பார்சலை நீட்ட, அவனை முந்திக்கொண்டு, சீ.சி. ஒரு பார்சலை நீட்டினாள். ''அத ஏன் தின்னுகிட்டு? இத தின்னு! அசல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா!'' அவள் நீட்ட, இரண்டு பேருக்கும் தகராறு வலுத்தது.
''நீ லோக்கல் மாடல்னா, நான் சூப்பர் மாடல் தெரிஞ்சுக்க'' ரா.ரா. உறுமினான். ''நீயே சொல்லு வாத்யாரே! இரண்டெழுத்து சி,ஏ. பெரிசா? நாலு எழுத்து எஸ்.எஸ்.எல்.சி. பெரிசா?'' அப்ப இரண்டெழுத்து ஈடியை விட நாலு எழுத்து டி.வி.ஏ.சி. பெரிசா?'' - ராஜப்பா சொல்ல, மீண்டும் கூச்சல் அதிகரித்தது. ''உங்க சண்டைய நிப்பாட்டு, நடந்ததைச் சொல்லுங்க'' - நான் கெஞ்சினேன்.
''நீயா... நானா பார்க்கலாம்னு, சம்பவங்கள் அரங்கேறிக்கிட்டு இருக்கு'' ராஜப்பா சொன்னான். போன வாரம் துரைமுருகன் 60,000 கோடி பற்றி பேசிட்டு இருந்தேன் இல்லையா? அது தொடர்பான ஆவணங்கள் எல்லாம் மதுரை ஈ.டி. ஆபீஸ்ல இருந்திருக்கு.
அந்த ஆபீஸ்ல வேலை பார்த்த அன்கிட் திவாரினு ஒருத்தர், இருபது லட்சம் ரூபாய் கையூட்டு வாங்கினதா சொல்லி, அவரை கைது பண்ணி, அவரோட அறையை சோதனை போடற சாக்குல, ஈ.டி. வசம் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்ற பார்த்திருக்காங்க டி.வி.ஏ.சி. சரியா அவங்க ஈ.டி. அலுவலக பூட்டை உடைக்க, டக்குனு துணை ராணுவம் அங்க வந்துட்டாங்க. ''ஒன்றியத்துக்கும், மாடலுக்கும் போர் ஆரம்பமாயிடிச்சு! பாரு அன்கிட் திவாரி எங்ககிட்டே. சிறையிலே தள்ளிடுவோம், கபர்தார்'' - சிந்தாமணி சீறினாள்.
''ம்ஹும்! நீ புழலுல இருக்கிற செந்திலுக்கு, பைனாப்பிள் கேசரி வாங்கிக் கொடுத்தால், நாங்கள் அங்கிட்டுக்கு, அகர்வால் அசோகாவுக்கு அல்வா வாங்கித் தருவோம், தெரிஞ்சுக்க.'' மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஆரம்பமாக, பேச்சை மாற்றினேன்.
''மழை நிலவரம் எல்லாம் எப்படி"? உடனே ரா.ரா. திரும்பினார். ''அட, ஆமாம்! இந்த கலாட்டாவுல அதை மறந்து போயிட்டேன். இந்த மழையில ஊர் மிதக்குது. இன்னும் புயல் கரையைக் கூட கடக்கலை. மைலாப்பூர் சிவசாமி சாலைல இடுப்பு வரைக்கும் தண்ணீர். நாலாயிரம் கோடி செலவழிச்சு, பணிகள் செஞ்சு இருக்கோம்னு சொன்னாங்க. இன்னும் தண்ணி தேங்கிட்டுத்தானே இருக்கு. நாலாயிரம் கோடிதான் தேங்கலைனு பேசிக்கிறாங்க மக்கள்."
''நீயே சொல்லுப்பா... தண்ணீர் எங்கே தேங்கிச்சு?''- சிந்தாமணி தனது செல்போனில் கொண்டு வந்த படங்களைக் காட்டினாள். ''அடடே! இது சிங்கபூர்! நான் போயிருக்கேன், அங்கே ஒரு தமிழர் ரெஸ்ட்டாரெண்ட் இருக்கு. அங்கே அல்வா நல்லா இருக்கும்.'' மீண்டும் இருவருக்கிடையே அல்வா சண்டை. ''சரி! சண்டையை நிப்பாட்டிட்டு, ஆளுக்கொரு ரகசியத்தை சொல்லிட்டு, இரண்டு பேரும் நடையைக் கட்டுங்க."
''ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் exit polls, மத்திய அரசுக்கு கொடுத்த எச்சரிக்கையாத்தான் பார்க்கிறாங்க. தேர்தல் முடிவு வந்த பிறகு, பல அறிவிப்புகள் வர இருக்காம். சிலிண்டர் மான்யம், வருமான வரி குறைப்பு, அப்படி... இப்படினு நடுத்த வர்க்கத்துக்கு ஐஸ் வைக்கப் போறாங்களாம்.
ஜனவரி மாசம் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை செம்ம கிராண்டா நடத்தி, பக்திப் பரவசத்தை மூட்டி, அதை சாதனையா 2024 தேர்தல்ல முன்வைக்கப் போறாங்களாம். தேர்தல் நெருங்க நெருங்க, தாமரையை இன்னும் பெரிய அளவுல மலர வைக்க ஏற்பாடு நடக்குது'' ராஜப்பா சொன்னார்.
''முதல் பெரியவருக்கு, அவரை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலையாம். எல்லா அதிகாரிங்களும் ஆட்டம் ஆடறாங்களாம். அவங்கவங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்கிறாங்களாம். அவங்களுக்குள்ள இருக்கிற போட்டியில, வெளியில பேசக் கூடாத விஷயங்களையெல்லாம், ஆளுங்க மூலமா அவுங்களே பரப்பி விடறாங்களாம். வேலூர் ஊமைத்துரை செம காண்டுல இருக்காராம். தன் பிள்ளையை காப்பாத்த நடவடிக்கை இல்லைனு குமுறிக்கிட்டு இருக்கார்.
வேலூர்காரரும், டெல்டாகாரரும் பேசியே மூணு நாளாகுதாம். சின்ன முதல் சீக்கிரமே துணை முதல் ஆகிடுவாரு. அப்ப பழைய பெருச்சாளிகளை எல்லாம் ஓரமா ஒதுக்கிட்டு, சின்னவங்களுக்கு இடம் கொடுக்கணும்னு சொல்லி இப்பவே பழம் தின்னு கொட்டை போட்டவங்களுக்கு விளக்கெண்ணெய் கொடுத்துக்கிட்டு இருக்காறாம்!" - சிந்தாமணி சொன்னாள்.
''ஆக, அதிகாரிங்க தங்களுக்குள்ள நடக்கிற போட்டியில, எல்லா விவரங்களையும் வெளியே விடறாங்கன்னு சொல்றீங்க. அதனாலதானே கல்கி, உங்க ரெண்டு பேரையும் வேலையில வச்சிருக்கு. உங்களுக்குள்ள இருக்கிற சண்டையில, நிறைய விஷயங்களைச் சொல்றீங்க. இப்படியே சண்டை போட்டுக்கிட்டு ஒற்றுமையா இருங்க" என்று சொல்ல, இருவரும் வெளியே நழுவினார்கள்.