ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் கல்வி மிகவும் முக்கியமானதாகும். சில நாடுகள் மேம்பட்ட கல்வி கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளால் கல்வி மற்றும் எழுத்தறிவில் மிகவும் உயர்ந்த இடத்திலும், வறுமை, பொருளாதார சிக்கல்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க காரணங்களால் கல்வி முறையில் பின் தங்கியும் உள்ளன. அந்த வகையில் உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, உலகில் அதிக எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட டாப் 10 நாடுகள் குறித்து இப்பதிவில் காண்போம் .
1. உக்ரைன்
தற்போது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் உலகிலேயே மிக உயர்ந்த கல்வியறிவு விகிதமான 100% கல்வியறிவு கொண்ட நாடாக உள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே மிகச்சிறந்த கல்வி பெற்ற நாடாக இது திகழ்கிறது.
2. உஸ்பெகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கட்டாய கல்வி மற்றும் எழுத்தறிவு பிரச்சாரங்கள் மூலம் உஸ்பெகிஸ்தானின் சராசரி கல்வி அறிவு விகிதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போதும் 99 % அதிகமாக 100% ஆக உள்ளது.
3. வட கொரியா
வடகொரியா அரசியல் ரீதியாக உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு 'பூமியின் நரகம்' என்று அழைக்கப்படும் சர்வாதிகார நாடாக இருந்தாலும், உலகளாவிய கல்வியில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதோடு, இந்த நாட்டில் கல்வி இலவசம் மற்றும் கட்டாயம் என்பதால் குடிமக்கள் அனைவரும் 100 சதவீத கல்வியறிவு பெற்றுள்ளனர் .
4. அஜர்பைஜான்
அஜர்பைஜான் 1990களின் பிற்பகுதியில் இருந்து நன்கு நிறுவப்பட்ட பொது கல்வி முறையின் ஆதரவு மற்றும் கட்டாய கல்வி முறையின் காரணமாக சராசரி கல்வியறிவு விகிதம் 100 சதவீதம் ஆகும்.
5. கஜகஸ்தான்
கஜகஸ்தான் நாட்டில் சோவியத் பாரம்பரியமான தரமான கல்வி இன்றும் உயர்ந்து நிற்பதால் எழுத்தறிவு விகிதம் 100 சதவீதமாக உள்ளது. இந்த நாட்டில் தரமான கல்வியை பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் வழங்குகின்றன .
6. பின்லாந்து
உலகின் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் பின்லாந்து கல்வி முறையால், இந்த நாடு 100 சதவிகித கல்வியறிவு விகிதத்தை கொண்டுள்ளது. பிரபலமான வாசிப்பு கலாச்சாரம், மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விக் கொள்கை, அதிக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இந்த நாட்டின் சிறப்பாகும் .
7. நார்வே
நார்வே நாட்டில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதோடு, இங்குள்ள பொதுப் பள்ளி அமைப்பு, கல்வியின் தரம் மற்றும் சமத்துவத்தில் கவனம் செலுத்துவது, குழந்தை பருவக் கல்வித் திட்டங்கள், எழுத்தறிவை உலகளாவியதாக மாற்றியுள்ளதால், நார்வே நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதம் 100 சதவீதமாக உள்ளது.
8. ஜார்ஜியா
ஜார்ஜியா எப்போதும் தரமான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மற்றும் கல்வி கட்டமைப்பை ஆதரித்து வருவதோடு தேசிய அளவில் கல்வி அணுகலையும், புதுப்பித்த பாடத்திட்டத்தையும் வழங்கும் சீர்திருத்தங்களின் உதவியால் 100 சதவீத கல்வியறிவு விகிதத்தை எட்டியுள்ளது.
9. லக்சம்பர்க்
லக்சம்பர்க் நாட்டின் பன்மொழி பள்ளிப்படிப்பு கல்விமுறையின் சிறப்பு அம்சமாக இருப்பதோடு, குறைந்த மக்கள் தொகை மற்றும் வலுவான பொருளாதாரம் லக்சம்பர்க் கல்வியில் அதிக முதலீடு செய்ய வழிவகுத்து 100 சதவீத கல்வியறிவு விகிதத்தை எட்டுவதற்கு உதவி செய்துள்ளது.
10. குவாம் குவாம்
அமெரிக்க கல்வி முறையின் அடிப்படையில் செயல்படும் அமெரிக்க பிரதேசமான குவாம் குவாம், சராசரியாக 100 சதவீத கல்வியறிவு விகிதத்தைப் பெற்றுள்ளது.
மேற்கூறிய பத்து நாடுகளும் 100% கல்வியறிவு பெற்றுள்ள நாடுகளாக இருக்கும் நிலையில் இந்தியாவின் கல்வி விகிதம் 76% என்பது குறிப்பிடத்தக்கது.