
டானிக் கதை 1 - காந்தியின் குரங்குகள்:
சொர்க்கத்திலிருந்த மகாத்மா காந்திக்குத் திடீரென தனது மூன்று குரங்குகள் என்னவாயின என்ற எண்ணம் மேலோங்க, கடவுளிடம் அது குறித்து விசாரித்தார்!
"கண்களைப் பொத்திய குரங்கொன்றும், காதுகளை மூடிய குரங்கொன்றும், வாயைப் பொத்திய குரங்கொன்றுமாக, மூன்றுகுரங்குகளைப் பூலோகத்தில் விட்டு வந்தேன். அவற்றின் தற்போதைய நிலை என்னவென்பதை அறிய மனது ஆசைப்படுகிறது. தெரிந்து சொல்ல வேண்டும்..." என்று விண்ணப்பித்துக் கொண்டார்!
"ஓகே, காந்தி அவர்களே! இப்போதே சொல்கிறேன்," என்றபடியே, கையிலிருந்த லேப் டாப்பைத் தட்டிப் பார்த்தபடி சொன்னார் கடவுள்...
"அவை மூன்றுமே மிகச் சந்தோஷமாக இருக்கின்றன. கண்மூடிக் குருடனாக இருந்த குரங்கு இந்தியாவின் நீதித்துறையைக் கவனித்துக் கொள்கிறது. இரண்டாவதாக, காதுகளை மூடிச் செவிடாக இருந்த குரங்கு அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மூன்றாவதாக, வாய் மூடிப் பேசா மடந்தையாக இருந்தது, குடி மக்களாகி விட்டது!"
சொல்லி விட்டு கடவுள், தன் லேப்டாப்பை கையில் தூக்கிக்கொண்டு கிளம்பினார்.
"ஐயோ கடவுளே! என் தாய் நாடு இப்படியா ஆக வேண்டும்?" காந்தி தன் தலையில் கைவைத்து அமர்ந்தார்.
டானிக் கதை 2 - தலைமுறை மாற்றங்கள்:
லண்டனில் பணி புரியும் மகனும் மருமகளும் கூப்பிட்டதில் அந்த வயதான தம்பதியருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்! மகனும் மருமகளும் கல்லூரிக் காதலர்கள். இருவருக்கும் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதுடன், விமரிசையாகத் திருமணமும் செய்து வைத்தனர்.
துணிமணிகள், ஸ்வெட்டர், டிராக் பேன்ட் போன்றவற்றை அவர்கள் 'பாக்' செய்த போது, அரைக்கால் பேன்ட் வேண்டாமென்று அவர் மறுத்து விட்டார். "இல்லங்க! ரெண்டு மட்டுந்தானே எடுத்தோம். அதை மட்டுமாவது.." என்று முணகிய மனைவியிடம் அவர் சொன்னார்...
"என்ன நீ! மருமக முன்னாடி நான் எப்படி அதைப் போட்டுக்கிட்டு.... வேண்டாம் விட்டுடு!"
லண்டன் விமான நிலையத்தில், வெளியில் வந்தபோது மகனும், மருமகளும் மகிழ்ச்சி பொங்கக் கையசைத்தபடி ஓடி வந்தனர். மருமகள் போட்டிருந்ததோ... அரைக்கால் ட்ராக்!