சிவசங்கரியின் 6 கதைகள்... குறு நாடகங்களாக மேடையில்... கண்ணுக்கு விருந்து; மனதுக்கு நிறைவு!

Sivasankari & Dharini
Sivasankari & Dharini
Published on
mangayar malar strip
Mangayar malar

படைப்பாளிகளை கொண்டாடுவோம்... நாடகத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தாரிணி கோமல் இயக்கி, மேடையேற்றிய சிவசங்கரியின் ஆறு சிறுகதைகள்.

கடந்த அக்டோபர் 25ம் தேதி, நாரதகான சபாவில் கோமல் தியேட்டர் குழுவினர் வழங்கிய ஒரு இனிமையான, வித்தியாசமான, மனதுக்கு நிறைவான ஒரு நிகழ்ச்சி.

ஏற்கனவே படைப்பாளிகளைக் கொண்டடுவோம் என்ற தொடரில் சுஜாதா, தி.ஜானகிராமன், ஆர்.சூடாமணி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் சிறுகதைகளை, இயக்கி, மேடையேற்றி வெற்றி கண்டவர் தாரிணி.

இம்முறை சிவசங்கரி அவர்களின் ஆறு சிறுகதைகளை நாடக வடிவில் இயக்கியிருக்கிறார்! 83 வயதை நிறைவு செய்த, எழுத்துலகின் சிகரமாய் விளங்கும், சிவசங்கரி அவர்களின் இலக்கியப் பயணம், சமூகத் தொண்டுகள் குறித்த ஒரு குறும்படம் திரையிடப்பட்டது.

அவர் பெற்ற விருதுகள், இலக்கியப் பணிகள், சமூக நலனில் அக்கறை கொண்டு அயராது செய்து வரும் தொண்டுகள் இவற்றைப் பார்க்கும் போது, இத்தனை உயர்ந்த பெண்மணி எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.

ஆறு குறு நாடகங்களுக்கு முன், சிவசங்கரியின் கதைகளைத் தேர்ந்தெடுத்து மேடையேற்றியது குறித்து தாரிணி கோமல் ஒரு சிற்றுரை அளிக்க, தொடர்ந்து சிவசங்கரியின் சுருக்கமான, தெளிவான வாழ்த்துரை இரண்டும் சில மணித்துளிகளில் முடிந்து விட்டன.

சிவசங்கரி சிறுகதைகளில் தாரிணி தேர்ந்தெடுத்திருக்கும் ஆறுமே சிறப்பு.

நாடகமாக்கும் போது, ஒரு கதைக்குள் பார்வையாளர்களை ஒன்றிப் போக வைப்பது கதையின் சிறப்பும், நாடக இயக்குனரின் திறமையும் காரணங்கள். இதில், ஆறு நாடகங்களிலும் இருவருக்கும் வெற்றிதான்.

பக்க பலமாக விஷ்வா விஜய் அவர்களின் காட்சிக்கேற்ற இசையும், சேட்டா அவர்களின் ஒளி அமைப்பும் கூடுதல் சிறப்பு. பின்னணியில் சித்தரிக்கப் பட்டிருந்த முப்பரிமாணப் படங்கள் ஒவ்வொரு காட்சிக்கும் உண்மையான செட் போலவே உயிர் கொடுத்தன. தியாகராஜன் அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

வெல்டன் மேடை நிர்வாகம்!

இனி நாடகங்கள்

முதல் நாடகம் 'கழுதை தேய்ந்து' - எப்போதோ நம் வீட்டில் நடந்தாற்போல இல்லை..? என்று ஒவ்வொருவரையும் உணர வைக்கும் எதார்த்தமான நகைச்சுவை கலந்த கதை, வசனம் நடிகர்களின் நடிப்பு, இயக்கம்.

இன்றும் நாட்டில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், தலைவர் வருகிறார் நாடகத்தில் வசனங்களோடு அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார் தாரிணி. பெரும் கூட்டம், காவல்துறையினர் நிற்பது என்று பேக்ட்ராப் அமர்க்களம்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்குள் மெல்ல மெல்ல வார்த்தைப் போர் உருவாகி, அவர்களது காதல், கோபம், வருத்தம் எல்லாம் வெளிபடுகிறது சண்டை நாடகத்தில்.

தெய்வம் நின்று கொல்லும் நாடகம், ஒருவர் செய்யும் தவறுகள் அவருடைய வாழ்க்கையை எப்படி திரும்ப வந்து பாதிக்கும் என்னும் அழுத்தமான கதை.

ஆயா நாடகம்... கிராமத்திலிருந்து நகருக்கு தன்னை மகன் அழைத்துச் செல்வது பற்றி பெருமைப்படும் பெண்மணி, பேரக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலைக்குத்தான் என்று அறியும் போது ஏற்படும் ஏமாற்றம், திருநெல்வேலித் தமிழ், உடல் மொழி என்று அப்படியே ஒரு ஆயாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் நாஞ்சில் ரேவதி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கோலா உருண்டைக் குழம்பு!
Sivasankari & Dharini

குழந்தைப் பருவத்தில் குதித்து விளையாடிய தெப்பக் குளத்தை ஆவலாகப் பார்க்க வரும் பெண்மணிக்கு இன்றைய அதன் வறண்ட நிலை கண்டு மனம் உருகும் கதை தெப்பக் குளம். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க நாம் ஏன் தவறுகிறோம். மனதைப் பாதிக்கும் கதை.

சில நேரம் மைக்கில் சரியாக கேட்கவில்லை. ஓரிருவர் ஓவர் ஆக்டிங் போன்ற மிக லேசான முணுமுணுப்புக்களை முற்றிலும் மறக்கடிக்கும் நாடகமாக்கம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நூல் புடவை
Sivasankari & Dharini

ஒரு கதையையே நாடகமாக்கம் கடினம் எனும் போது, ஒரு சிறந்த எழுத்தாளரின் ஆறு கதைகளை எடுத்து, அவற்றை இயக்கி மேடையேற்றுவது ஒரு பெரிய சாதனை. தாரிணி கோமல் மற்றும் அவர் குழுவினருக்கு வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com