

'தேவி மில்ஸ்' அரை வட்ட போர்டின் கீழேயிருந்த வாசலின் வழியே வெளியே வந்த சிவாவின் மனம், போனஸ் குறித்து பலவிதமாய்ப் கவலைப்பட்டது.
ஊரெல்லாம் போனஸ் அறிவித்தும், அரசுக்கும் பஞ்சு ஆலை அதிபர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம்... முடிவு எட்டப்படவில்லை.
அதுவும், சிவாவைப் போல அடிப்படை தொழிலாளிக்கு நாலாயிரோமோ அல்லது ஐயாயிரோமோ கிடைத்தால் பெரிய விஷயம்.
“அண்ணே..” குரல் கேட்டுச் சிவா திரும்ப,
“நாளைக்கு எப்படியும் முடிவு பண்ணிடுவாங்கன்னு தலைவர் சொன்னாருண்ணே. நான் வர்றேன்.“ சைக்கிளில் பறந்தவாறு முருகன் சொன்னது, காற்றில் கலந்து இவன் காதில் விழுந்தாலும் சிவாவின் மனம் அதில் லயிக்க மறுத்தது.
சென்ற முறை போனஸ் வந்த சமயம்...
“டேய் சிவா, எனக்கு நல்லதா ஒரு நூல் புடவை எடுத்துக் கொடு. கட்டியிருக்கிற புடவையைத் தவிர, கயிற்றுக்கொடியிலே தொங்கிற ஒரேயொரு புடவை தான் பாக்கிடா“ அம்மா பழனியம்மாள் பேசின வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தன.
“இதப்பாருங்க... அம்மாவுக்குப் புடவை வாங்கினேன், ரவிக்கை வாங்கினேன்... கையில பணம் மிச்சம் இல்லைன்னு வந்தீங்க..? நான் மனுஷியா இருக்கமாட்டேன். வர்ற ஐப்பசியில் என் தம்பிக்குக் கல்யாணம். நாலு விரல் அகல ஜரிகையில பட்டுப் புடவை கண்டிப்பா எனக்கு வேணும். அப்ப தான், எங்க வீட்ல எனக்கு மரியாதை கிடைக்கும், உங்களுக்கும் சேர்த்து புரியுதா?“ சிவாவிடம் மனைவி மேகலா கத்த,
“மேகலா... இங்கே பாரும்மா. நீ புடவை வாங்கிக்க. நல்லதா வாங்கிக்க. எனக்கு ஒரேயொரு புடவை.. நூல் புடவை மட்டும் வாங்கிக்கொடு போதும். என் மகராசா அதான் சிவாவோட அப்பா இருந்தவரைக்கும் எனக்கு எந்த ஒரு குறையும் இல்லாம வைச்சு இருந்தாரு. எனக்கு இந்த ஒரு புடவை மட்டும்...”
“இங்கே பாரு மேகலை, அம்மாவுக்கும் என்னைய விட்டா. இல்லையில்லை, நம்மளை விட்டா யாரு இருக்கா? புரிஞ்சுக்கோ. அதனால...” ஆரம்பித்த சிவா, மேகலாவின் கோபப்பார்வையைக் கண்டு வாய் மூடிக்கொண்டான்.
“இதப்பாருங்க... உங்கம்மாவுக்குச் சோறு போடறதே பெரிசு. அதுவும், உங்க சம்பளத்தில. இதுக்கு மேல என்ன செய்யறதாம்? இதில, புடவை வேற வேணுமா? எனக்குப் போட்டியா? ம்... இன்னும் எத்தினி நாளைக்குத்தான் இந்த இம்சையோ?“
இப்படி இரைந்தவள் இறுதியில் கிடைத்த போனஸ் பணம் முழுவதையும் தன் பட்டுப்புடவைக்கே 'காலி' பண்ணிவிட்டாள்.
நெஞ்சில் கனத்த நினைவுகளோடு வாசல் படி ஏறியவன்.. கொஞ்சம், கொஞ்சமாய் உள்ளுக்குள் உடைந்து ”ஓ“ வெனக் கதறி, “அம்மா... இந்த உதவாக்கரையைப் போய் பிள்ளையா பெத்தயே? கேவலம் ஒரு நூல் புடவை கூட உனக்கு வாங்கித்தர வசதியில்லாம போயிட்டனே நான். இந்த வருடமாவது வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சேன்... ஆனா, போன தீபாவளி அன்னிக்கே போய்ட்டியேம்மா. ஒவ்வொரு தீபாவளிக்கும் நான் உன் நினைவா ஏங்கணும்னு நினைச்சுப் போயிட்டியா?“
சிரித்த முகத்துடன் போட்டாவில் நின்ற தன் அம்மாவின் படத்திற்கு மாலை போட்டு அழத்தொடங்கினான் சிவா.