
ஒவ்வொருவருக்கும் ஏழு விதமான ஓய்வு வேண்டும் என்று கண்டுபிடித்து புதிய உண்மையைச் சொல்கிறார் டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித் என்னும் பன்னாட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்.
பணியையும் வாழ்க்கையையும் இணைக்கும் ஆய்வு நிபுணரான இவர் ஏழு வித ஒய்வை வற்புறுத்துகிறார் தனது புத்தகமான ‘சேக்ரட் ரெஸ்ட்’ (SACRED REST) என்ற நூலில்! படிக்க வேண்டிய நல்ல நூல் இது!!
1.உடலுக்கு ஓய்வு
முதன்முதலில் அன்றாடம் வேலை பார்த்துக் களைத்து இருக்கும் நாம் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தூக்கம், பகலில் குட்டித் தூக்கம் ஆகியவை இந்த வகையில் அடங்கும். தியானம், புத்துணர்ச்சி ஊட்டும் செயல்கள் ஆகியவை உடல் ஓய்வு தருவதில் திறன் வாய்ந்தவை என்று சொல்லலாம்.
2.மனதிற்கு ஓய்வு
இதைப் பெறுவது என்பது பலருக்கும் கஷ்டமான ஒரு காரியமாக இருக்கிறது. இதற்கான எளிய வழியை டாக்டர் டால்டன் ஸ்மித் கூறுகிறார். அன்றாடம் வேலை செய்யும் போது இடையிடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால் மனதிற்கு ஓய்வு கிடைக்கும். இன்னொரு வழி அன்றாடம் படுக்கப் போவதற்கு முன்பு நாட்குறிப்பை எழுதுவது.
இன்னொரு வழியும் உண்டு : எண்ணத்தை நெகிழச்செய்தல். (THOUGHT DIFFUSION).
அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து உங்கள் எண்ணங்களை மனதில் ஓட விட வேண்டும். அதில் சொந்த உணர்ச்சியைக் கலக்காமல் அவை ஒவ்வொன்றாக மெதுவாக அதனதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வேண்டும். நீரோடை ஒன்றில் பூக்கள் மிதந்து செல்வது போல அல்லது வானத்தில் மேகக்கூட்டம் ஒவ்வொன்றாக மெதுவாக நகர்வது போல இது இருக்க வேண்டும்.
3.புலன்களுக்கு ஓய்வு
எப்போது பார்த்தாலும் டிவி அல்லது கம்ப்யூட்டர் திரை முன் இருப்பது, யாருடனாவது பேசிக் கொண்டேஇருப்பது, இசையைக்கேட்டுக் கொண்டே இருப்பது, குழந்தைகளுடன் இருப்பது அல்லது வளர்ப்பு மிருகங்களுடன் நேரத்தைச் செலவிடுவது – இவை அனைத்துமே அதிகப்படியாக நமது புலன்களை ஈடுபடுத்தும் செயல்களாகும். படுக்கப் போவதற்கு முன்னர் அன்றாடம் ஒரு நாற்பத்தைந்து நிமிடங்கள் டிவி திரை அல்லது சோஷியல் மீடியாக்களிடமிருந்து விலகி இருந்து பாருங்கள். புலன்களின் கூரிய சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
4.உணர்ச்சி ஓய்வு
நீங்கள் ஒரு விஷயத்தை அறிந்து மிகவும் சோர்வடைந்து விட்ட போது அதைப் பார்த்த ஒருவர், என்ன ஆயிற்று எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “ஃபைன்” என்ற வார்த்தை வாயிலிருந்து வந்தாலும் உள்ளுக்குள் மன அழுத்தம் இருக்கவே செய்யும்; இன்னும் கூடுதலாகிக் கொண்டே தான் இருக்கும். மாறாக வெளிப்படையாக, ”இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்து விட்டேன்” என்று சொல்வது உங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும். இன்னும், உற்சாகமாக இருப்பவர்களிடையே சென்று அவர்களுடன் கலந்து கொள்வதும் ஒரு நல்ல வழி தான் – உணர்ச்சி ஓய்வுக்கு!
5.சமூக ஓய்வு
நீங்கள் எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்பவரா அல்லது கலகலப்பாக அனைவருடனும் பழகுபவரா? இதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவருடன் இருக்கும் போது சக்தி அதிகமாகிறதா அல்லது சக்தியை இழக்கிறோமா? நம்முடைய சோஷியல் பேட்டரி சார்ஜ் ஆகிறதா அல்லது சார்ஜை இழக்கிறதா? உங்கள் பார்ட்னருடன் இதைப் பற்றிப் பேசினால் போதும் – ஒருவர் பார்ட்டியில் இன்னும் சற்று நேரம் இருக்கலாம் என்பார். இன்னொருவரோ உடனே போக வேண்டும் என்பார். ஆக சமூக நிகழ்ச்சிகளில் நாம் நமது பேட்டரியை நன்கு சார்ஜ் செய்து கொள்ளும் விதத்தில் கலந்து கொள்ள வேண்டுவது அவசியம்.
6.படைப்பாற்றல் ஓய்வு
ஓவியம் படைப்பது, இசையை அமைப்பது, எழுதுவது, இப்படி படைப்பாற்றல் துறைகளில் உள்ளவர்கள் ஓய்வே இல்லாமல் பணியைத் தொடர்ந்தால் அவர்கள் உடல் சோர்வு, மனச்சோர்வு ஆகியவற்றை அடைவர். இதைப் போக்க அவ்வப்பொழுது இயற்கைச் சூழ்நிலைகளில் சிறிது நேரத்தைக் கழிக்கலாம். அதை உணர்ந்து அனுபவிக்கலாம். அல்லது கையில் உள்ள பிரச்சனையை மறந்து விட்டு சிறிது நேரம் ‘ஹாயாக’ இருக்கலாம்.
7. ஆன்மீக ஓய்வு
கடைசியாக ஒன்று. நமது மனமும் உடலும் ஆன்மீக ஓய்வுக்காக ஏங்குகிறது. நம்மை இன்னொரு பெரிய ஆற்றலுடன் இணைக்கவே மனமும் உடலும் பெரிதும் விரும்புகிறது. ஒரு நல்ல குழுவில் இணைந்து சேவை செய்வது, பிறருக்கு உதவுவது, பெரியோருடன் பழகுவது ஆகிய இவை எல்லாம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆலய வழிபாடு, யாத்திரையாகச் செல்வது பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆக இந்த ஏழு வித ஓய்வுகளையும் உங்கள் வாழ்வில் கொண்டு வந்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் உடல் சக்தியையும் மனோசக்தியையும், அது ‘வேற லெவலில்’ இருக்கும்! அப்போது நன்றி சொல்ல வேண்டியது, இந்தப் புதிய உண்மையைக் கூறும் டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித்துக்குத் தான்!