ஒரு காதலியின் தோழி காதலனிடம்...
' நீ ஒழுக்கம் உள்ளவன் என்றால் சொன்ன சொல் மாறாமல் நீ காதலித்தவளை விரைவாக உன் ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று இடித்துரைக்கும் போது, நவ ரத்தினங்கள் போன்ற ஒன்பது சிறந்த தமிழ்ப் பண்புகளை கூறுகிறாள். அவை 1. ஆற்றுதல் 2. போற்றுதல் 3.அன்பு 4.பண்பு 5.செறிவு 7.அறிவு 7. நிறை. 8 முறை 9.பொறை
1. ஆற்றுதல் (counseling and guidance)
துன்பத்தில் இருப்பவருக்கும் வழி தெரியாமல் திகைப்பவர்க்கும் மன அமைதியை தரும் வகையில் ஆலோசனை வழங்குவது ஆற்றுதல் ஆகும், ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் என்கிறது கலித்தொகை (113). ஒன்று அலந்தவர்க்கு என்றால் இல்லாமை மற்றும் இயலாமையால் தவித்து கிடப்பவர். இவரது துன்பத்தை துடைப்பதே ஆற்றுதல் ஆகும்.
2. போற்றுதல்
இணைந்து இருக்கும் நண்பர்கள் தம்பதியர் மற்றும் குடும்பத்தினரை பிரித்து விடாமல் இருப்பதே உலகில் போற்ற வேண்டிய ஒரு பண்பு ஆகும். இணைந்தவர்களை பிரிப்பது பெரும் பாவம். போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை.
3. பண்பு (Etiquette)
பண்பு என்றால் உடன் இருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செய்லபடுவதாகும். இழவு வீட்டில் சிரிப்பதும் இன்ப நிகழ்வில் அழுவதும் பண்பு அல்ல. பண்பெனப்படுவதுபாடு அறிந்து ஒழுகுதல்.
4. அன்பு
அன்பு என்பது தன் நண்பர்களையும் சுற்றத்தினரையும் வெறுக்காமல் இருப்பதாகும். மனித வாழ்வில் கருத்து முரண்பாடுகள் இருக்கும். தன் கருத்துக்கு உடன்படாதவர்களை வெறுக்கக் கூடாது. அவரவர் கருத்துக்கு மதிப்பு கொடுத்து சுற்றத்தின்ரை அரவணைத்து செல்வதே அன்பான வாழ்க்கை ஆகும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றார் அவ்வையார். அன்பெனப்படுவது தன் கிளை செறாஅமை.
5. அறிவு
அறியாமல் பேசுபவரின் கருத்துகளைப் பொறுத்துக் கொள்வதே அறிவுடைமை ஆகும். அறியாதவருடன் விவாதிப்பதால் பலன் இல்லை. எனவே அறிவிடையோர் முட்டாள்களுடன் விவாதிக்காமல் மௌனமாய் இருப்பர். அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்.
6. செறிவு
சொன்ன சொல் தவறாமல், முன்னுக்குப் பின் முரணாக பேசாமல் இருப்பது சிறந்த பண்பாகும். அது வேற வாய் இது நாற வாய் என்பது மனிதப் பண்பு ஆகாது. மனம், மொழி, செயல் ஆகிய மூன்றும் முரண்படாமல் (integrity) செயல்படுவது சிறந்த ஆளுமைப் பண்பாகும். முதலில் சொன்னதை பின்பு சொல்லவில்லை என்று மறுத்துப் பேசக் கூடாது.
7. நிறை
தன்னிடம் சொன்ன ரகசியத்தை மற்றவருக்குத் தெரிவிக்காமல் இருப்பது நிறை என்ற சிறந்த பண்பாகும். ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையுடன். உண்மையாக வாழ்வதும் நிறை (கற்பு) எனப்படும்.
8. முறை (நீதி/ செங்கோன்மை )
தலைமைப் பொறுப்பில் இருப்பவர் விருப்பு வெறுப்பு இன்றி நியாயமாக மற்றவர்களின் செயலை எடை போட வேண்டும். தவறு செய்தவர் தனக்கு வேண்டியவராயினும் தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்க வேண்டும். குற்றவாளியிடம் இரக்கம் காட்டாமல் அவனுக்கு கொலைத் தண்டனை விதிப்பதே ஆட்சியாளனுக்கு முறை ஆகும்.
9. பொறை (பொறுமை)
பொறை /பொறுமை என்பது ஒருவர் தன்னைப் பாராட்டாமல் வன்மம் வைத்து இகழ்வோரைக் கூட தக்க சமயம் வரும் வரை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
பொறை என்பது போற்றாரைப் பொறுத்தல் ஆகும். பகைவர்களை தக்க சமயம் அறிந்து எதிர்க்க வேண்டும். பகல் வெல்லும் காக்கையை கூகை பொறுத்திருந்து இரவில் வெல்லும் என்றார் வள்ளுவர்.
ஒவ்வொரு காதலனும் இத்தகைய ஒன்பது மானுடப் பண்புகளைப் பின்பற்றி சிறந்த மனிதனாக வாழ்ந்து தன் காதல் வாழ்வைச் சிறப்பிக்க வேண்டும்.
இதுவே காதலனிடம் காதலியின் தோழி சொன்ன அறிவுரைகள்!